சமரசங்களைத் தவிர்த்திருக்கலாம்..!
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ வழியாக நல்லதொரு ‘த்ரில்’ அனுபவத்தைத் திரையில் தந்தவர் இயக்குனர் மு.மாறன். கச்சிதமான பாத்திர வார்ப்பு மற்றும் காட்சியமைப்புடன் சிறப்பான காட்சியாக்கத்தையும் கொண்டிருந்ததால் அப்படம் வெற்றி பெற்றது. ஆனால், கொரோனா கால இடைவெளியில் ரொம்பவே தாமதமான ‘கண்ணை நம்பாதே’ நம் பொறுமையைச் சோதிக்கிற வகையில் அமைந்தது.
இந்த நிலையில், மூன்றவதாக மு.மாறன் தந்திருக்கும் படமே ‘பிளாக்மெயில்’.
ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார்.
சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிற இப்படத்தில் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, தேஜு அஸ்வினி, ரமேஷ் திலக், ஹரிப்ரியா இசை, லிங்கா, முத்துகுமார், ரெடின் கிங்ஸ்லி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் எப்படியிருக்கிறது?

கடத்தியது யார்?
ஒரு தொழிலதிபரின் குழந்தை கடத்தப்படுகிறது. அதனை அறிந்ததும், அவரும் அவரது மனைவியும் அதிர்ச்சி அடைகின்றனர். அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாக, அதனால் ஏற்பட்ட பிரச்சனையைத் தீர்க்க இருவரும் சாலையில் இறங்கிய இடைவெளியில் அது நிகழ்கிறது.
அதன் பின்னிருப்பவர் தொழிலதிபர் மனைவியின் முன்னாள் காதலன்.
அப்பெண்ணோடு ஒருகாலத்தில் தான் அந்தரங்க உறவில் இருந்ததைக் காட்டுகிற வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், 1 கோடி ரூபாய் பணம் தராவிட்டால் அதனை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டுகிறார்.
‘அது தான் நினைத்த பலனைத் தராது’ என்றெண்ணும்போது, அந்த தொழிலதிபரின் குழந்தையைக் கடத்தும் முயற்சியில் இறங்குகிறார்.
அதற்காக, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகிற சிலரைப் பார்க்கிறார். அவர்கள் எவரும் அதனைச் செய்யத் தயாராக இல்லை.
அப்போது, இரண்டு நபர்களை அந்த நபர் பார்க்கிறார்.
அவர்கள் இருவரும் அவசரமான பணத்தேவையில் இருக்கின்றனர். அதிலொருவர், தான் வேலை செய்யும் நிறுவன உரிமையாளர் தந்தனுப்பிய வாகனத்தையும் அதிலிருக்கும் முக்கிய பார்சலையும் தொலைத்துவிடுகிறார்.
அந்த வாகனத்தை ஒரு மர்ம நபர் திருடிச் சென்றுவிடுகிறார்.
அதனைக் கண்டறிவது கடினம் என்பதை உணரும்போது, அந்த பார்சலின் மதிப்பைத் தரும் முயற்சியில் இறங்குகிறார். அதன் மதிப்பு 50 லட்சம் ரூபாய்.
உரிமையாளர் அந்த பணியாளரின் காதலியைக் கடத்தி வைத்திருக்கிறார்.
காதலி கர்ப்பிணியாக உள்ளார் என்ற தகவலை அக்காதலன் அறிந்த சில மணி நேரங்களில் இவையனைத்தும் நிகழ்கின்றன.
’எப்படியாவது காதலியை மீட்டுவிட வேண்டும்’ என்று நினைக்கிற அந்த காதலன், தொழிலதிபரின் குழந்தையைக் கடத்த ஒப்புக்கொள்கிறார். அதனைச் செய்யவும் துணிகிறார்.
ஆனால், தொழிலதிபர் வந்த காரில் அந்த குழந்தை இல்லை.
அதற்கு முன்னரே அக்குழந்தையைக் கடத்தியது யார்? இந்த கேள்விக்கு விலாவாரியாகப் பதிலளிக்கிறது ‘பிளாக்மெயில்’.
இந்த கதையில் ஒரு இளம்பெண், ஒரு குழந்தை அடுத்தடுத்து கடத்தப்படுகின்றனர். ஆனால், ‘நான்லீனியர்’ உத்தியில் முன்பின்னாக நமக்குத் திரைக்கதையில் சொல்லப்படுகிறது. லட்சங்கள், கோடிகளில் பணம் கைமாற்றப்படுவதாகவும் காட்டப்படுகிறது.
மேற்சொன்ன விஷயங்களோடு, தெளிவாக வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களைக் கொண்டு ஒரு விறுவிறுப்பான ‘கிரைம் த்ரில்லர்’ தர முயன்றிருக்கிறார் இயக்குனர் மு.மாறன்.
முன்பாதியில் வெற்றியைச் சுவைத்தவர், பின்பாதியில் அதனைத் தக்கவைக்கச் சற்று தடுமாறியிருக்கிறார்.

இழுவையைக் குறைத்திருக்கலாம்..!
‘பிளாக்மெயில்’ சுமார் இரண்டு மணி நேரம் ஓடுகிறது. ஆனால், பின்பாதி நமக்கு ரொம்பவே நீள்வதாகத் தோன்றுகிறது. அந்த இழுவையைக் குறைத்திருக்கலாம்.
அதேநேரத்தில், ‘நடந்தது என்ன’ என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டிய கட்டாயம் அதன் பின்னிருப்பதையும் மறுப்பதற்கில்லை.
’கடத்தப்பட்டவங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோ’ என்ற ரசிகர்களின் பதைபதைப்புக்கு, ‘அவனுக்குத் தேவையானது கிடைக்குற வரைக்கும் எதுவும் பண்ண மாட்டான்’ என்ற ஒற்றை வரி வசனத்தில் முற்றுப்புள்ளி வைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். அது, பின்பாதி திரைக்கதை ‘சவசவ’ என்று நகர முக்கியக் காரணமாகியிருக்கிறது.
மற்றபடி ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பாத்திரங்களையும் அவற்றுக்கு இடையேயான முரண்களையும் கொண்டு, ‘த்ரில்’ கதையைச் சொன்ன விதத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறார் மு.மாறன்.
கதையில் வரும் முக்கியத் திருப்பங்களையும் கதாபாத்திர உணர்வுகளையும் நமக்குக் கடத்த உதவியிருக்கிறது காட்சியாக்கம்.
அதன்பின்னே ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், கலை இயக்குனர் எஸ்.ஜே.ராம், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளனர்.
டி.இமான் ஒரு பாடலுக்கு இசையமைக்க, மீதமுள்ள பாடல்களுக்கு சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். அவை நம் காதில் நுழைந்து வெளியேறுகின்றன.
காட்சிகளை விட ஒரு படி மேலாகப் பரபரப்பையும் பதைபதைப்பையும் கடத்த வேண்டுமென்ற முனைப்பில், சாமின் பின்னணி இசை உள்ளது. அது பெரும்பாலான இடங்களில் பலன் தந்திருக்கிறது.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், தேஜு அஸ்வினி, ரமேஷ் திலக், ஹரிப்ரியா, முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி என அனைவரது இருப்பும் நம்மை ஈர்க்கிறது.
ஸ்ரீகாந்த், பிந்து மாதவி ஜோடி மிகச்சில இடங்களில் நமது அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. அது இயக்குனரின் தவறாகவும் கூட இருக்கலாம்.
கொடூர வில்லனாகச் சித்தரிக்கப்பட்ட லிங்காவுக்கு இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் இடம் தந்திருக்கலாம்.
இது போகச் சிலர் திரையில் வந்து போயிருக்கின்றனர். அவர்களது இருப்பு துருத்தலாகத் தெரிகிறதே தவிர அபத்தமாகத் தெரியவில்லை.
இதே ‘நான் லீனியர்’ உத்தியில் ஒவ்வொரு பாத்திரத்திற்குமான மனநிலையைத் தனித்தனியே விளக்குகிற வகையில் காட்சிகளை அமைத்து திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கலாம்.
ஆனால், நாயகன் ஜி.வி.பிரகாஷை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று திரைக்கதையில் வரும் ஆரம்பக் காட்சியை வடிவமைத்திருக்கிறார் மு.மாறன். அது போன்ற சமரசங்களைத் தவிர்த்திருந்தால், திரைக்கதையில் துருத்தலாகத் தெரிகிற விஷயங்கள் வெகுவாகக் குறைந்திருக்கும். அப்போது, இப்படம் இன்னும் அபாரமான திரையனுபவத்தைத் தந்திருக்க வாய்ப்புண்டு.
அதனைத் தவறவிட்டாலும், ‘பிளாக்மெயில்’ ஒருமுறை பார்க்கலாம் என்கிற ரீதியில் அமைந்திருப்பதை மறுப்பதற்கில்லை..!