கோவையில் கருமத்தம்பட்டி கிராமப்புற மாணவர்கள் புத்தக பையில் மிட்டாய் என நினைத்து குட்கா பொருட்கள் வைத்திருந்ததாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சிபாளையம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்கள் சோதனை நடத்திய போது புத்தக பையில் குட்கா பொருட்கள் இருந்ததாக செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் நடத்திய சோதனையில் லோகு மளிகை என்ற கடையின் பின் பகுதியில் இருந்த கட்டிடத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தாகவும் தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து 141 கிலோ குட்கா பொருட்களை கருமத்தம்பட்டி போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் மாணவர்களின் புத்தகப் பையில் குட்கா பொருட்கள் இருந்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கோவை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து இன்று (ஆகஸ்ட்-3) கோவை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்சமயம் சமுக வலைத்தளத்தில் கோவை கருமத்தம்பட்டி அருகே கிராம பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் குட்கா பொருட்கள், மிட்டாய் என நினைத்து சக மாணவர்களுக்கு குட்கா பொருட்களை பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம். 141 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்ற செய்தி பரவி வருகிறது. மேற்படி செய்தியானது உண்மைக்கு புறம்பானது.
கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு மளிகைக் கடையில் புகையிலைப் பொருட்களை வைத்திருப்பதாகக் காவல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு சென்று சோதனை செய்த பொழுது மளிகை கடையின் உரிமையாளர் லோகம்மாள் (82) என்பவர் கடைக்கு பின்புறமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 141 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த செய்தியைத் தவறாக சித்தரித்து உண்மைக்குப் புறம்பாக பரப்பி வருகின்றனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக பொய் தகவல் பரப்புவோர் மீது காவல்துறையினரால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.”என அதில் கூறப்பட்டுள்ளது.