குஜராத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க இரவில் வெளியே செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருங்கள் என அறிவுரை வழங்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் காவல்துறை சார்பில் பல இடங்களில் பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டர்களில் பெண்கள் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டாம். நீங்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிடலாம்.
நீங்கள் நண்பர்களுடன் இருட்டான இடங்களுக்குச் செல்ல வேண்டாம். அப்படி சென்றால் நீங்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிடலாம் என்ற வாசங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த போஸ்டர்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகரின் பல இடங்களிலும், சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவர்களிலும் இந்த போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த போஸ்டருக்கு பெண்ணிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போஸ்டர் கடும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் காவல்துறையினர் அந்த போஸ்டர்களை அகற்றினர்.
இதுகுறித்து , போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் நீதா தேசாய் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், சர்ச்சைக்குள்ளான போஸ்டர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்றும், அது சாலை பாதுகாப்புக்கான போஸ்டர்களே தவிர, பெண்களின் பாதுகாப்புக்கானது அல்ல என நூதன முறையில் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் போக்குவரத்து விழிப்புணர்வு சார்ந்த போஸ்டர்களை மட்டுமே எங்களிடம் காட்டினர். ஆனால் இந்த சர்ச்சைக்குரிய போஸ்டரை எங்களிடம் காட்டாமல் ஒட்டி விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய போஸ்டருக்கு ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.