இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரி கட்டமைப்பில் மிகப் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் செப்டம்பர் 3-ந் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் இந்த மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
இந்தியாவில் இனி ஜிஎஸ்டி 5%. 18% மற்றும் 40% என்ற அளவில் மட்டும் இருக்கும். ஏற்கனவே 12%, 28% ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள்ளாகி இருந்த பெரும்பாலான பொருட்கள் தற்போது 5% ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் தொடர்பாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில், “எனது சுதந்திர தின உரையின் போது, ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான எங்கள் நோக்கம் குறித்து நான் பேசியிருந்தேன். சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பரந்த அடிப்படையிலான ஜிஎஸ்டி விகித பகுத்தறிவு மற்றும் செயல்முறை சீர்திருத்தங்களுக்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருந்தது. சாதாரண மக்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு சமர்ப்பித்த திட்டங்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய
@GST_Council கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பரவலான சீர்திருத்தங்கள் நமது குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் மற்றும் அனைவருக்கும், குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் வணிகங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் என தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால் விலை குறையும் பொருட்கள் விவரம்:
- பிஸ்கட் போன்ற பொருட்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைப்பு
- பாஸ்தா, மக்ரோனி, நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைப்பு
- சர்க்கரை, நிறமூட்டி, சக்கரை கட்டிகளுக்கான வரி 18%-லிருந்து 5%ஆக குறைப்பு
- ஏசி, டிவி, மானிட்டர், புரஜெக்டர் மற்றும் பாத்திரம் கழுவும் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18% ஆக குறைப்பு
- சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பான்களுக்கு ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5% ஆக குறைப்பு
- வேளாண் இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5% ஆக குறைப்பு
- விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் இயற்கை பூச்சிக்கொல்லிகளுக்கு ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 5% ஆக குறைப்பு
- பரோட்டா, சப்பாத்திக்கு ஜிஎஸ்டி வரி இல்லை
- 350cc மற்றும் அதற்கு கீழான இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18% ஆக குறைப்பு
- ஆயுள், மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை
- பெட்ரோல், டீசல், எல்பிஜி, சிஎன்ஜி கார்களுக்கு 28%ல் இருந்து 18% ஆக குறைப்பு
- மூன்று சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%-ல் இருந்து 18% ஆக குறைப்பு
- ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப், ஷேவிங் கிரீமுக்கான வரி 18%ல் இருந்து 5% சதவீதமாக குறைப்பு
- வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்களுக்கு
12%-ல் இருந்து 5% சதவீதமாக குறைப்பு - பால் பாட்டில்கள், நாப்கின்கள், டயப்பர்களுக்கு 12%-ல் இருந்து 5% ஆக குறைப்பு
- மூக்கு கண்ணாடிகளுக்கு 12%-ல் இருந்து 5% ஆக குறைப்பு
- நொறுக்கு தீனி வகைகள், பாஸ்தா, ரெடிமேட் நூடுல்ஸ், வெண்ணெய் மற்றும் நெய் போன்ற வீட்டு உபயோக உணவு பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி
- பென்சில்,ரப்பர், மேப்கள், ஷார்ப்னர், கிரேயான்ஸுக்கு வரி விலக்கு
40% ஜிஎஸ்டி வரி
- புகையிலை, பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி
- சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி