ADVERTISEMENT

ஜிஎஸ்டி வரி – 8 ஆண்டுகளுக்கு முன் குறைக்காதது ஏன்?: மோடிக்கு ஸ்டாலின் கேள்வி!

Published On:

| By Kavi

GST tax cut Stalin question to Modi

ஜிஎஸ்டி வரியை 8 ஆண்டுகளுக்கு முன்பே ஏன் குறைக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று (செப்டம்பர் 22) நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், ’வருமான வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இரண்டையும் சேர்த்தால் மக்களுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி சேமிப்பாகும்’ என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (செப்டம்பர் 23) அவர் வெளியிட்டிருக்கும் சமூக வலைதள பதிவில், ‘ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்” என பிரதமர் கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்?

8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே? மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது. மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது.

இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்? தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share