ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வு வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) பிரதான தேர்வு நேற்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழ்நாடு முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதனால் இரவும் பகலுமாக தேர்வுக்கு தயாரானவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அதிமுக, பாஜக, தவெக என அரசியல் கட்சிகள் அரசுக்கு கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் மீண்டும் தேர்வை நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேதியை அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று (பிப்ரவரி 9) வெளியிட்ட அறிவிப்பில், “நேற்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (தொகுதி-II (ம) IIA பணிகள்) முதன்மைத் தேர்வின் இரண்டு தாள்களான – தாள்-I- தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் தாள்-II பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டது.
மேற்கண்ட இரண்டு தேர்வுகளையும் கீழ்க்கண்டவாறு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
15.03.2026 – ஞாயிறு அன்று தொகுதி-II A தாள்-II (OMR) பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு
15.03.2026 – ஞாயிறு அன்று -தொகுதி-II (ம) IIA தாள்-I (விரிந்துரைக்கும் வகை) தமிழ் மொழித் தகுதித் தேர்வு
மேற்கண்ட தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) 28.02.2026-க்குள் தொடர்புடைய அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) /குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
எதிர்வரும் 22.02.2026 அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IIக்கான முதன்மை தேர்வு வழக்கம்போல் அதே தேதியில் நடைபெறும். இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு 11.02.2026 அன்று வெளியிடப்படும். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) / குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
