வயதான மக்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு நிம்மதியான வாழ்க்கை வாழ சேமிப்புப் பணம் இருக்க வேண்டும். அவர்களுக்கு தொடர்ந்து வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு, அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme – SCSS) ஒரு சிறந்த வழியாகும். இந்தத் திட்டம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டிற்கு ஒரு நிலையான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை அளிக்கிறது.
முதலீட்டிற்கு நல்ல வட்டி:
இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு பாதுகாப்பான திட்டம் என்பதால் SCSS திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் நம்பிக்கையுடன் பணம் போடுகின்றனர். நீங்கள் முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அரசாங்கம் பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திட்டம் 8.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது வங்கிகளின் நிலையான வைப்பு நிதிகளை விட சிறந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் பாதுகாப்பாக முதலீடு செய்வது மட்டுமல்லாமல், நல்ல வருமானத்தையும் ஈட்டலாம்.
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை:
இந்தத் திட்டத்தில் வெறும் ரூ.1000 முதலீடு செய்து தொடங்கலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கும் உண்டு. ஒரு தனிப்பட்ட கணக்கிற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கிற்கு ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
வயது வரம்பு:
இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 60 ஆகும். ஆனால், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் (VRS) 55 முதல் 60 வயதுக்குள் முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் 50 முதல் 60 வயதுக்குள் முதலீடு செய்யலாம். உங்களுடைய வாழ்க்கைத் துணையும் கூட்டுக் கணக்கில் முதலீடு செய்ய முடியும்.
முதிர்வு காலம்:
SCSS திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடினால் அபராதம் விதிக்கப்படும். வட்டி காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் முதலீடு செய்யப்பட்ட தொகை நாமினிக்கு வழங்கப்படும்.
மாத வருமானம்:
நீங்கள் கூட்டுக் கணக்கில் ரூ. 30 லட்சம் முதலீடு செய்தால் 8.2 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.2,46,000 வட்டி கிடைக்கும். இது காலாண்டுக்கு ரூ.61,500 ஆகும். இதன் மூலம் மாதத்திற்கு சுமார் ரூ.20,500 வருமானம் கிடைக்கும். முதிர்வு காலத்தில் அசல் தொகையை திரும்பப் பெறலாம்; அல்லது திட்டத்தை மேலும் நீட்டிக்கலாம்.
