“சோழப் பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் பாரதத்தின் பிரகடனங்கள். இருவருக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்” என பிரதமர் மோடி அறிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, இன்று (ஜூலை 27) அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான கலாச்சார விழாவில் கலந்துகொண்டார்.
அவருடன் இந்த விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், மெய்யநாதன், எம்.பி. தொல். திருமாவளவன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது ராஜேந்திர சோழரின் 1000வது பிறந்தநாள் நினைவாக ஒரு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதில் ஒரு பக்கத்தில் பேரரசரின் உருவமும் மறுபுறம் அசோக சின்னத்துடன் ரூ.1,000 மதிப்புள்ள அசோக சின்னமும் இடம்பெற்றுள்ளன.

பாரதத்தின் இரு பிரகடனங்கள்!
தொடர்ந்து விழாவில், ’வணக்கம் சோழ மண்டலம்’ என்று கூறி பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார். பின்னர் “நமச்சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க… இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க…” சிவனை வாழ்த்திப் போற்றும் பாடலை பாடினார்.
அதன்பின்னர், ”சிவனை வணங்குபவன் சிவனிலேயே கரைந்து விடுகிறான். 140 கோடி மக்களின் நலனுக்காக இறைவன் சன்னதியில் வேண்டினேன். பெருவுடையாரை வணங்க கிடைத்த வாய்ப்பு பெரும் பேறு.
சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. சோழர்களின் கண்காட்சியை பார்த்து பிரமித்தேன். சோழ சாம்ராஜ்யம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று. உலகம் முழுவதும் பேசும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள். ராஜேந்திர சோழன் புனித கங்கை நீரை எடுத்து பொன்னேரியை நிரப்பினார். காசியிலிருந்து கங்கை நீரை, மீண்டும் கொண்டு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தஞ்சை பெரிய கோயிலைவிட கங்கைகொண்ட சோழபுரம் கோயில் சிறியது. இதற்கு தந்தை ராஜராஜன் மீது ராஜேந்திர சோழன் கொண்ட பக்தியே காரணம். இந்த ஆலயத்தின் கட்டிடக்கலையை இன்றும் கூட உலக நாடுகள் வியந்து நோக்குகின்றன.
சோழப் பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய இரு பெயர்களும் பாரதத்தின் இரு பிரகடனங்கள். இருவரும் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமையின் சின்னமாக அறியப்படுகிறார்கள். இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு. தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்.
சோழ சாம்ராஜ்யத்தின் போது, பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இந்தியா அடைந்த உயர்ந்த நிலை, இன்றும் நமக்கு எழுச்சியூட்டுகிறது. இந்தக் காலகட்டம், அதன் வலிமை மிகுந்த ராணுவ ஆற்றலால் புகழ்பெற்றுள்ளது. ராஜராஜ சோழன் உருவாக்கிய ஆற்றல் வாய்ந்த கடற்படைக்கு, ராஜேந்திர சோழன் மேலும் வலிமை சேர்த்தார். பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள்.
அன்பே சிவம்
உலகின் வன்முறை, சுற்றுச்சூழல் பிரச்னைக்கு, தீர்வளிக்கும் பாதையை சைவ சித்தாந்தம் நமக்கு காட்டுகிறது. அன்பே சிவம் என்றார் திருமூலர். இதனை கடைபிடித்தால் உலகின் சங்கடங்களுக்கு தானாகவே தீர்வு கிடைக்கும். அன்பே சிவம் என்பது எவ்வளவு தொலைநோக்கான பார்வை.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்ட போது, நமது சைவ ஆதீனங்கள் ஆன்மீக சடங்குகளை வழி நடத்தினார்கள். தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும் புனித செங்கோல், புதிய நாடாளுமன்றத்தில் சம்பிரதாய முறையில் நிறுவப்பட்டுள்ளது.
சோழ அரசர்கள், இந்தியாவை கலாச்சார ஒற்றுமையால் இணைத்திருக்கிறார்கள். சோழ ஆட்சிக் காலத்தின் தொலைநோக்குப் பார்வையை இன்று எங்களது அரசு முன்னெடுத்துச் செல்கிறது. காசி-தமிழ் சங்கமம் போன்ற முன்முயற்சிகளின் வாயிலாக பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒற்றுமை உணர்வை நாங்கள் வலுப்படுத்துகிறோம்.
பாரதத்தின் வலிமையை வெளிப்படுத்தியது ஆபரேஷன் சிந்தூர். நாடு முழுவதும் ஆபரேஷன் சிந்தூரை கொண்டாடுகிறார்கள். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் உதாரணம்” என பிரதமர் மோடி பேசினார்.
விழா முடிந்து, கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து மீண்டும் கார் மூலம் ஹெலிபேட் உள்ள சோழகங்கத்திற்கு சென்றார். அங்கிருந்து திருச்சிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர், டெல்லிக்கு தனி விமானத்தில் செல்ல உள்ளார்.