எனது தீர்ப்பு சாதிய ரீதியில் உள்ளதா என வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளராகவும், வழக்கறிஞராகவும் இயங்கி வருபவர் வாஞ்சிநாதன். இவர் அனைத்து சாதியினரும் அர்ச்கராகலாம், திருப்பரங்குன்றம் வழக்கு, கூடங்குளம் அணுஉலை, காவல்நிலைய மரணங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான பல பொது நல வழக்குகளில் ஆஜராகி உள்ளார். மேலும் பல போராட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகரன் அமர்வு முன் ஒரு வழக்கு விசாரணக்கு வந்தது. அந்த வழக்கில் வேறு ஒரு வழக்கறிஞர் ஆஜராகி வரும் நிலையில் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி வாஞ்சிநாதன் ஆஜரானார்.
அப்போது வழக்கிற்கு தொடர்பில்லாத வகையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ”நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோடு நான் மத ரீதியாக, சாதிய ரீதியாக தீர்ப்புகள் வழங்கி வருவதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன? எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் உள்ளதாக இன்னும் விமர்சிக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ”உங்கள் குற்றச்சாட்டு எது தொடர்பானது என தெரியவில்லை. நீங்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினால் நான் எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கிறேன்” என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி, ”நீங்கள் ஒரு கோழை. நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டீர்களா? பயப்படுகிறீர்களா? என திறந்த நீதிமன்றத்தில் கேட்டதாக வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வரும் 28ம் தேதி மதியம் 1.15 மணிக்கு இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அப்போது எழுத்துப்பூர்வமான கேள்விகள் வழங்கப்படும் என உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது புகார்
முன்னதாக அரசியல் சட்ட விரோதமாக மதச்சார்பின்மைக்கு எதிராகவும், நீதிபதி பணிக்கு வரும் போது எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு மாறாகவும் ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புகள் அமைந்துள்ளது என கடந்த ஜுன் 14ம் தேதி பல தீர்ப்புகளின் விவரங்களை சேர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்துள்ளார்.
ஆனால் அந்த புகார் குறித்து வாஞ்சிநாதன் உச்ச நீதிமன்றம் தவிர்த்து வேறு எங்கும் தகவல் தெரிவிக்கவில்லை. சமூக வலைதங்களில் பேசவோ பதிவிடவோ இல்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க குழுவில் ராஜராஜன் என்ற அதிமுக வழக்கறிஞர் நான் அனுப்பிய புகாரை பரவ விட்டிருந்தார் என வாஞ்சிநாதன் குற்றம் சாட்டி உள்ளார்.
உச்சநீதிமன்றத்தை நம்பியவருக்கு என்ன பாதுகாப்பு?
ஒருவர் உச்சநீதிமன்றத்தை நம்பி புகார் அனுப்பும் நிலையில் யாரோ ஒரு வழக்கறிஞர் மூலம் அதுகுறித்து சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானால், புகார் அளித்த நபருக்கு என்ன பாதுகாப்பு? என்று வழக்கறிஞர் வாஞ்சி நாதன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொளத்தூர் மணி கண்டனம்!
இது குறித்து திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையைக் குறிவைத்து இந்து பார்ப்பனியக் கூட்டம் ஒரு கலவரத் திட்டத்துடன் மதுரையின் மத நல்லிணக்க மரபை சிதைக்க களமிறங்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ, ஜனநாயக , மதச்சார்பின்மை மரபுகளைக் காக்கத் தொடர்ந்து தோழரும் வழக்குரைஞருமான வாஞ்சிநாதன் போராடி வருகிறார்.
வைதீக, சனாதன காலமல்ல இது. சீசருடைய மனைவி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்பது நீதிபதிகளுக்கு அதிகம் பொருந்தும் ஒரு சொலவடையாகும். ஒரு ஜனநாயக நாட்டில் நீதிபதிகளும் நீதிமன்றமும் மக்கள் மன்றத்தின் விமர்சனத்திற்கும் திறனாய்வுக்கும் உட்பட்டது தான். திறனாய்வை உள்வாங்கி தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள முயலாமல், தோழர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கொண்டு மிரட்ட எண்ணும் போக்கு ஜனநாயக மரபுகளைக் கேலி செய்யும் தன்மையுடையதாகும். மக்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் வாஞ்சிநாதனுக்குத் துணைநிற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான வழக்கறிஞர் கோபால் சங்கர், நமது மின்னம்பலத்திடம் கூறுகையில், ”ஒரு வழக்கறிஞருக்கு எதிராக, எந்த வித முன்னறிவிப்பும், ஆதாரமும் இல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு தொடர்வது சட்டத்திற்கு புறம்பானது. மேலும் இத்தகைய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது” என தெரிவித்துள்ளார்.