திருவண்ணாமலைக்கு பதில் அருணாச்சலம் என்ற பெயர் பலகை வைத்ததாக விஜயராகவன் என்ற அரசுப் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Govt Bus Thiruvannamalai Arunachalam
ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தெலுங்கானா மாநில அரசின் டூர் பேக்கேஜில், திருவண்ணாமலையை அருணாச்சலம் என குறிப்பிடுகின்றனர்.
இதே பாணியில் தமிழக அரசு பேருந்துகளில் திருவண்ணாமலைக்கு பதில் அருணாச்சலம் என்ற பெயரை தமிழிலும் ஆங்கிலத்திலும் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையானது. சமூக வலைதளங்களிலும் இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதனையடுத்து அருணாச்சலம் என்ற பெயர் பலகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டு திருவண்ணாமலை என்ற பெயருடனேயே பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்தது.
இதனிடையே கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூரு சென்ற தமிழ்நாடு அரசு பேருந்தில் திருவண்ணாமலைக்கு பதில் அருணாச்சலம் என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது. இது மீண்டும் சர்ச்சையானது.
இதனால் பேருந்து நடத்துநர் விஜயராகவன் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.