ஆளுநர் தேநீர் விருந்துக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் ஆளும் கட்சி உட்பட தமிழக அரசியல் கட்சிகள் பங்கேற்கும்.
இந்தநிலையில் நாளை மறுதினம் நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர்.ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார். இதில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் விருந்தில் பங்கேற்கின்றன
திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு திமுக கட்சி சார்பில் ஆளுநர் விருந்தை புறக்கணித்தபோதும், தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு புறக்கணிப்பு தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமாக திமுக சார்பில் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு, தேநீர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், தவெக தேநீர் விருந்தில் பங்கேற்குமா இல்லையா என இன்னும் அக்கட்சி அறிவிக்கவில்லை.
2025 குடியரசு தின தேநீர் விருந்துக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தவெக-வை அழைப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. அந்த விருந்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.