டெட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
“ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவால் தமிழகத்தில் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 11) ஊடகங்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழகத்தில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தான் உள்ளனர். இப்படியொரு தீர்ப்பு ஆசிரியர்களை மாணவர்களையும் பாதிக்கும். கல்வி துறைக்கே மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 35 சங்கங்களை அழைத்து பேசியிருக்கிறோம். சட்ட ரீதியாக போராட வேண்டும். ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு தயாராவார்களா… அல்லது மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள தயார் செய்வார்களா என்று ஆலோசித்தபோது முதல்வரின் அறிவுரையின் படி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.