ADVERTISEMENT

பள்ளி குழந்தைகள் கை, கால் அமுக்கி விட்ட விவகாரம் : தலைமை ஆசிரியருக்கு தண்டனை என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Government school teacher suspended

அரூர் அருகே தலைமை ஆசிரியரின் கை, கால்களை பள்ளிக் குழந்தைகள் அமுக்கி விட்ட வீடியோ அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இன்று (செப்டம்பர் 3) அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தலைமை ஆசிரியை கலைவாணிக்கு பள்ளிக் குழந்தைகள் கை, கால்களை அமுக்கி விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேற்று தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பள்ளி குழந்தைகளை பலமுறை தலைமை ஆசிரியரின் கால்களை அமுக்கி விடச் சொல்லி இருப்பதாகவும், பெற்றோர்களிடம் சொல்லக்கூடாது என குழந்தைகளை மிரட்டி உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் விஜயகுமார், வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் சத்யப்ரியா ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் கலைவாணியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பள்ளியில் பயிலும் குழந்தைகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியரை மாவட்ட கல்வி அலுவலர் தற்காலிக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து இன்றும் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது தலைமை ஆசிரியர் கலைவாணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share