அரசு பள்ளி ஆசிரியைகள் அவமானப்படுத்தியதால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை

Published On:

| By Pandeeswari Gurusamy

அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாலும், உருவ கேலி செய்தாலும் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிகடை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் குமரன். இவரது மனைவி வல்சல குமாரி. இந்த தம்பதிக்கு முத்து சஞ்சனா மற்றும் முத்து சாய்னா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். வால்பாறை ரொட்டிகடை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் முத்து சஞ்சனா 9ம் வகுப்பும், முத்து சாய்னா 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் முத்து சஞ்சனாவுக்கு அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாகவும், பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பள்ளியில் உள்ள அறிவியல் ஆசிரியர் சிந்தியா என்பவர் பலபேர் முன்பாக பேசி அவமானப் படுத்தியதாகவும், தமிழ் ஆசிரியர் ராணி பாய் என்பவர் வேண்டுமென்றே மற்ற மாணவர்கள் முன்பாக கன்னத்தில் அறைந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிநது.

ADVERTISEMENT

மேலும் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சியாமளா தேவி என்பவர் சஞ்சனாவின் உருவத்தையும் , நிறத்தையும் அவமானப்படுத்தும் வகையில் பேசி புத்தகங்களை வீசி அவமானப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல் தொடர்ச்சியாக முத்து சஞ்சனாவை சக மாணவர்கள் முன் அவமானப்படுத்தி வந்ததால் மாணவி முத்து சஞ்சனா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 10ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் சஞ்சனா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் தீப்பற்றிய நிலையில் சஞ்சனாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சஞ்சனாவை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர்.

ADVERTISEMENT

இதையடுத்து மாணவி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி சஞ்சனா நேற்று (நவம்பர் 19) இரவு உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் மாணவியிடம் வாக்கு மூலம் பெற்ற பிறகும் காவல்துறை எந்த விதநடவடிக்கையும் எடுக்க வில்லை என்று சஞ்சனாவின் தந்தை சக்திவேல் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள் ராணிபாய், நித்தியா, சியாமளா தேவி ஆகியோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவியின் தந்தை வலியுறுத்தி உள்ளார்.

45 விழுக்காடு தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவி சஞ்சனா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஆசிரியைகள் மிரட்டியதால் தற்கொலை முயற்சி செய்ததாகவும் சிறிதளவில் எதுவும் ஆகாது என நினைத்து இவ்வாறு செய்ததாகவும் மாணவி பேசும் வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுதா பேசுகையில், “மாணவி தொடர்ச்சியாக 3 ஆசிரியர்களால், அவமானப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியை ஏற்கனவே அடித்த நிலையில் அவரது தந்தை டிசி கேட்ட சென்றுள்ளார். அப்போது பள்ளி தலைமையாசியர் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கூறி அனுப்பி உள்ளார். ஆனால் தொடர்ச்சியாக மாணவியை அவமானப்படுத்தியால் அந்த விஷயத்தை எதிர்கொள்ள தெரியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதில் 3 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுடன் எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share