மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலை சமாளிக்க, இந்திய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (EC Act) அமல்படுத்தி, எரிவாயு விநியோகத்திற்கு புதிய முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, நாட்டில் உள்ள அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளும் எல்.பி.ஜி (LPG) உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். இதற்காக, முக்கிய ஹைட்ரோகார்பன் வளங்களை எல்.பி.ஜி உற்பத்திக்கே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கூடுதல் எரிவாயு, முழுக்க முழுக்க வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும் என அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு விநியோகம்
இயற்கை எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, கடந்த ஆறு மாத சராசரி பயன்பாட்டின் அடிப்படையில் பின்வரும் விகிதத்தில் எரிவாயு வழங்கப்பட வேண்டும்:
100 சதவீத விநியோகம்: வீடுகளுக்கான குழாய் வழி எரிவாயு (PNG), போக்குவரத்துக்கான சி.என்.ஜி (CNG), எல்.பி.ஜி உற்பத்தி மற்றும் எரிவாயு குழாய் இயக்கத் தேவைகள்.
80 சதவீத விநியோகம்: தேயிலைத் தொழில், தேசிய எரிவாயு வலையமைப்பின் கீழ் உள்ள இதர தொழிற்சாலைகள் மற்றும் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களின் வர்த்தகப் பயனாளர்கள்.
70 சதவீத விநியோகம்: உரத் தொழிற்சாலைகள்.
65 சதவீத விநியோகம்: எல்.என்.ஜி விநியோகச் சிக்கலைச் சமாளிக்க, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் சொந்த நுகர்விற்கான எரிவாயு அளவு 65 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அரசுக்குத் தகவல் வழங்குதல் கட்டாயம்
இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், போக்குவரத்து மற்றும் விற்பனை நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு மற்றும் விநியோகம் குறித்த தகவல்களை மத்திய அரசுக்குத் துல்லியமாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
25 நாட்கள் இடைவெளி விதிமுறை
விநியோகத்தைச் சீர்படுத்த, ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய 25 நாட்கள் கட்டாய இடைவெளி இருக்க வேண்டும் என்கிற நடைமுறையையும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடதத்ககது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் சிலிண்டர்களை பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
