சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (நவம்பர் 20) அரசு ஊழியர்கள் தொடர்பான முக்கிய வழக்கு விசாரணைக்கு வந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில், ‘ 2003 ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தால் போதிய பலன்கள் கிடைப்பதில்லை. அதற்கான விதிகள் முறையாக வகுக்கப்படவில்லை.
மத்திய அரசு 2013ஆம் ஆண்டு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்கியிருந்தாலும், தமிழ்நாடு அரசு அதை 12 ஆண்டுகளாகப் பின்பற்றவில்லை. அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அரசாணைகளோ, விதிமுறைகளோ இல்லாததால், பல அரசு ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து தமிழக நிதித் துறைச் செயலகத்தின் கூடுதல் செயலாளர் மனு தாக்கல் செய்தார்.
அதில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் விதிகள் இல்லாததால் தேக்க நிலை உள்ளது என்பது தவறானது. இத்திட்டம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. அக்டோபர் 2025 வரை, சுமார் 54,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 51,000 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு பலன்கள் வழங்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (டிசிபிஎஸ்) நிதிகளை மேலாண்மை செய்வது மற்றும் முதலீட்டை மேம்படுத்த மாநில அரசு கூடுதல் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் திரட்டப்பட்ட தொகைக்கு 6.25 சதவீதம் முதல் 6.46 சதவீதம் வரை வட்டி பெறப்படுகிறது. அதுபோன்று அரசு கருவூல ரசீதுகளுக்கு பொருந்தக்கூடிய விகிதங்களில் வட்டி வழங்குகிறது.
வருங்கால வைப்பு நிதி விகிதம் கருவூல ரசீதுகளின் வருவாயை விட அதிகமாக இருக்கிறது. இதனால் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் வட்டியில் இடைவெளி உள்ளது.
இதை ஈடுகட்ட பங்களிப்பு ஓய்வூதிய நிதியை இந்திய காப்பீட்டு கழகத்தில் பணப்பலனுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய அரசு சார்பில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
