இதுதான் சமூக நீதியா? பணி நிரந்தரம் செய்க : கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!

Published On:

| By Kavi

government employee association announce protest

தொகுப்பூதியதாரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாளை (ஆகஸ்ட் 8) போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 7) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், “ஒரு மனிதனின் வாழ்க்கையில் சமூக நீதி என்பது கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறினால் மட்டுமே சாத்தியமாகிறது.

ADVERTISEMENT

ஆனால் அரசுத்துறையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் தொகுப்பூதிய முறைகளை அமுல்படுத்துவதுடன் காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் என கொத்தடிமை கூலிமுறைகளை தொடர்ந்து அமுல்படுத்தி வருகிறது.

மருத்துவத்துறையில் அரசாணை எண் 300ன்படி நிரந்தரப்பணியிடங்களை சரண்டர் செய்யப்பட்டு, Nurse Rs.18,000/-, Pharmachist: Rs.15,000/-, Lab Technician: Rs.13,000/-Multipurpose Hospital Worker: Rs.8,500/- ஊதிய விகிதத்தில் 4000 பணியிடங்கள் காண்டராக்ட் மூலம் நியமனம் செய்யப்படவுள்ளன. பல்நோக்கு பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு ஊதியமுறைகளில் எந்தவித உத்தரவாதமுமின்றி பணியாற்றி வருகிறார்கள்.

ADVERTISEMENT

நில அளவைத்துறையில் சென்ற ஆண்டு அரசாணை எண் 297 ன்படி 707 தற்காலிக Licenced Surveyors Rs.20,000/- ஊதியத்தில் 350 பணியிடங்கள் ஒராண்டுக்கு நியமனம் செய்யப்பட்டது. தற்போது அரசாணை 420ன்படி மேலும் மூன்றாண்டுகளுக்கு தற்காலிக ஊதியமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக பலகட்ட தொடர் போராட்டங்களுக்குப் பிறகு ஏற்கனவே சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்திட போராடி வரும் நிலையில் தற்போது அப்பணியிடங்களை அரசாணை எண். 95 மற்றும் 33ன்படி ரூ.3,000/- தொகுப்பூதியத்தில் 8997 பேர் நியமனம் செய்திட முடிவெடுத்துள்ளது இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நியமனங்கள் இளைஞர்களின் எதிர்கால வாழ்வாதாரங்களை பறிக்கக்கூடிய சமூக நீதிக்கு எதிரான பணி நியமனங்களாகும். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் புதிதாக துவக்கப்படும் அரசு ஐடிஐகளில் பயிற்றுனர்கள் அரசாணை எண்.58ன்படி ரூ.28,000/- ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.

பட்டுவளர்ச்சித் துறையில் குன்னூர், ஓசூர், தாளவாடி, ஊத்தங்கரை, கொள்ளட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள 1500 ஏக்கருக்கு மேலான காடுகளை/ தோட்டங்களை இத்துறையிடமிருந்து அரசு கையகப்படுத்தும் முடிவானது இத்துறையை அழிக்கும் நோக்கமாகும்.

அரசு ஐடிஐகளில் பயிற்றுனர்கள் தொகுப்பூயத்தில் பணி நியமனம்செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அனைத்து துறைகளிலும் நிரந்தர பணியிடங்களை ஒழித்துவிட்டு கொத்தடிமை கூலி முறைகளை அமுல்படுத்திட அரசு முயற்சித்துள்ளது. மேலும், அமைச்சுப்பணியாளர்களையும் தொகுப்பூதிய முறைகளில் நியமனம் செய்திட முடிவெடுத்துள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போலுள்ளது.

இது அரசு ஊழியர்களை மட்டுமல்ல, படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற பணி நியமனங்களை சமூக நீதி அரசு என்று சொல்லும் தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

எனவே, மேற்கண்ட பணி நியமனங்களை திரும்பப்பெறுவதுடன் தமிழ்நாடு முதல்வரின் 2021 தேர்தல்கால வாக்குறுதிப்படி தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட்களில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், கணினி இயக்குபவர்கள், ஊர்புற நூலகர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், அரசு தொழற்பயிற்சி நிலையங்களில் பணிபுரியும் PPP & COE பயிற்றுனர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்திட வேண்டும். இதுதான் உண்மையான சமூக நீதியாகும்.

எனவே தமிழ்நாடு அரசு மேற்கண்ட கொத்தடிமை கூலிமுறை பணி நியமனங்களை கைவிட வேண்டுமென வலியுறுத்தி நாளை (08.08.2025) தமிழ்நாடு முழுவதும் அனைத்து அலுவலகங்கள் மூன்பும் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share