கோவை ரயில் நிலையத்தில் இருந்து கணுவாய் செல்லும் 11ம் எண் பேருந்தை இன்று (நவம்பர் 21) நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்த சம்பவம் பெரும பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சேர்ந்தவர் துரைசாமி. இவர் 19 வருடமாக ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி துரைசாமி பேருந்தை ஓட்டிச் சென்றார். அப்போது விஜயமங்கலம் என்ற இடத்தில் மதுபோதையில் இருந்த ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் ஒருவர் இரு சக்கரம் வாகனத்தில் சாலை கடக்க முயன்றார். அப்போது துரைசாமி இயக்கிய பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டது இதில் மின்சார ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து ஓட்டுனர் துரைசாமி பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 145 நாட்கள் போக்குவரத்து துறை பணி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கூடுதல் தொழிலாளர் நீதிமன்றத்தில் துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் முதல் தவணையாக 32 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த பணத்தை போக்குவரத்து துறை வழங்கவில்லை. இதனால் இன்று கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியில் முன்புறம் மற்றும் பின்புறம் நீதிமன்றம் நோட்டீசை ஒட்டி நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
