பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணிகள் இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டணியில் 5 மாதங்களுக்கு முன்னர் அதிமுகவும் இணைந்தது.
டிடிவி தினகரன் வெளியேறியதன் பின்னணி என்ன?
அதிமுக இடம் பெற்றுள்ள பாஜக கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ் அணி தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. பாஜக கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ் நீடிப்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்பதை அவரது பேச்சுகள் மறைமுகமாக வெளிப்படுத்தி இருந்தன.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் அவமதிக்கப்பட்டதால் ஓபிஎஸ் அணி வெளியேறுவதாக அறிவித்தது. இதன் பின்னர் டிடிவி தினகரனின் அமமுக, பாஜக கூட்டணியில் நீடிக்குமா? என்ற கேள்வி வலுத்தது. அப்போதும், பட்டும் படாமலும்தான் டிடிவி தினகரன் பதில் கூறி வந்தார்.
ஆனால் ஜிகே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு ஜிகே வாசன், டிடிவி தினகரனை அழைத்திருந்தார். இதனை எடப்பாடி பழனிசாமி விரும்பாததால் அந்த நிகழ்ச்சிக்கே வர வேண்டாம் என டிடிவி தினகரனிடம் ஜிகே வாசன் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் ரொம்பவே கோபமடைந்துவிட்டார் டிடிவி தினகரன். இதை நாம் மின்னம்பலத்தில் விரிவாகவே எழுதி இருந்தோம்.
தற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரனின் அடுத்த மூவ் என்ன?
அமமுக எந்த கூட்டணியில் இடம் பெறும் என்பதை டிசம்பர் மாதம் அறிவிப்போம் என ஏற்கனவே டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மதுரையில், ஓ.பன்னீர்செல்வத்தை தினகரன் சந்தித்தும் பேசியிருந்தார்.
இதே காலகட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் செங்கோட்டையனையும் தொடர்பு கொண்டு தினகரன் பேசியிருந்தார். செங்கோட்டையனுடன் ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரும் பேசினர்.
தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார் டிடிவி தினகரன். இதனையடுத்து டிடிவி தினகரன் எந்த கூட்டணிக்கு செல்வார்? என்கிற கேள்வி எழுகிறது.
தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இடம் பெற சாத்தியமே இல்லை. இதனால் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தவெக கூட்டணியில் மட்டுமே அமமுக இடம் பெறவும் முடியும் என்கிற நிலைதான் உள்ளது.
டிடிவி தினகரன் மட்டுமல்ல ஓபிஎஸ் அணியும் விஜய் கூட்டணிக்கு போகவே அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செப்டம்பர் 5-ந் தேதி ‘மனம் திறக்கும்’ செங்கோட்டையனின் அதிமுக அணியும் நடிகர் விஜய் கட்சியான தவெக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறக் கூடும் என்பதே தற்போதைய நிலவரம்.