கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழாவை முன்னிட்டு மாணவிகளை ஆர்எஸ்எஸ் பாடல் பாட வைத்த சம்பவத்திற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கக் கூடியது எர்ணாகுளம்- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்.
தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது இந்த வந்தே பாரத் ரயில்.
3 மாநிலங்களை இணைக்கக் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று, வாரணாசியில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே தமது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில், புதியதாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் Saraswathi Vidyalaya பள்ளி மாணவிகள் ஒரு பாடலை பாடும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த பாடல், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பாடல் எனவும் கூறப்படுகிறது. இதுதான் கேரளாவில் மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடலை பாட கட்டாயப்படுத்திய செயலுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு காலத்தில் இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் பெருமைமிக்க அடையாளமாக இருந்த ரயில்வேயில், இப்போது அரசு நிகழ்வுகளில் வகுப்புவாத சித்தாந்தத்தை ஊடுருவச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது” எனவும் பினராயி விஜயன் சாடியுள்ளார்.
