“வீடு, வேலை, குடும்பம்னு ஓடிக்கிட்டே இருக்கேன்… மூச்சு விடக்கூட நேரமில்ல!” என்று புலம்பும் பெண்களா நீங்கள்? இதோ உங்களுக்காகவே ஒரு முக்கியச் செய்தி. பெண்கள் தங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, மீண்டும் புத்துணர்ச்சி பெற ஒவ்வொரு 22 நாட்களுக்கு ஒருமுறை தோழிகளுடன் ஒரு ‘கேர்ள்ஸ் நைட்‘ (Girls’ Night) கொண்டாடுவது மிக அவசியம் என்கிறது 2025-ம் ஆண்டின் புதிய ஆய்வு.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘டாக்கர் ரிசர்ச்’ (Talker Research) நிறுவனம், 2,000 பெண்களிடம் நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆடம்பரம் அல்ல… அத்தியாவசியம்! பொதுவாகத் தோழிகளுடன் வெளியே செல்வது அல்லது இரவு விருந்துக்குச் செல்வது என்பது ஒரு பொழுதுபோக்கு என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆனால், இந்த ஆய்வில் கலந்துகொண்ட 78% பெண்கள், இது வெறும் மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல; தங்கள் மன ஆரோக்கியத்திற்குத் தேவையான “கட்டாயமான ஒன்று” (Necessity) என்று கூறியுள்ளனர். சராசரியாக மூன்று வாரங்களுக்கு ஒருமுறை (துல்லியமாக 22 நாட்கள்) இப்படிச் சந்திப்பதே தங்களை ‘ரீசார்ஜ்’ செய்ய உதவுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரொமான்டிக் டின்னரை விட ‘கேர்ள்ஸ் நைட்‘ பெஸ்ட்! கணவர் அல்லது காதலருடன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பிடுவதை விட (Romantic Dinner), தங்கள் தோழிகளுடன் அரட்டை அடிப்பதையே 62% பெண்கள் விரும்புகிறார்கள் என்பது ஆச்சரியமான தகவல். கணவரிடம் சொல்ல முடியாத பல விஷயங்களையும், மனக்குமுறல்களையும் தோழிகளிடம் கொட்டித் தீர்ப்பதே இதற்கு முக்கியக் காரணம்.
வைன் மற்றும் அரட்டை: இந்தச் சந்திப்புகளில் உணவுக்கும், பானங்களுக்கும் முக்கிய இடமுண்டு. 88% பெண்கள் ‘வைன்’ (Wine) அருந்துவதையே பெரிதும் விரும்புகின்றனர். தோழிகள் ஒன்றுகூடிய முதல் 16 நிமிடங்களுக்குள்ளேயே முதல் பாட்டில் திறக்கப்பட்டு விடுகிறதாம்! சினிமா பார்ப்பது (66%), நடனமாடுவது (55%) மற்றும் ஒன்றாகச் சமைப்பது (45%) ஆகியவை இவர்களின் ஃபேவரைட் ஆக்டிவிட்டிஸ்.
எதைப் பற்றிப் பேசுகிறார்கள்? “பொண்ணுங்க சேர்ந்தாலே கிசுகிசுதான் (Gossip) பேசுவாங்க” என்று கிண்டல் செய்பவர்கள் கவனத்திற்கு… ஆய்வின்படி, பிரபலங்களைப் பற்றியோ அல்லது அலுவலக அரசியல் பற்றியோ அவர்கள் அதிகம் பேசுவதில்லை.
- தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அப்டேட்கள் (19%)
- உறவுகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் (15%) ஆகியவையே அவர்களின் முக்கிய விவாதப் பொருட்களாக உள்ளன.
அறிவியல் என்ன சொல்கிறது? பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அவர்களின் உடலில் ‘ஆக்ஸிடாசின்’ (Oxytocin) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது அவர்களை மற்றவர்களுடன் பழகத் தூண்டும் (Tend and Befriend). தோழிகளுடன் மனம் விட்டுப் பேசும்போது இந்த ஹார்மோன் இன்னும் அதிகமாகச் சுரந்து, மன அமைதியைத் தருகிறது. ஆண்களைப் போல “தனிமை” அல்லது “கோபம்” மூலம் பெண்கள் ஸ்ட்ரெஸ்ஸை வெளிப்படுத்துவதில்லை; அவர்களுக்குத் தேவை ஆறுதலான வார்த்தைகள்தான்.
எனவே பெண்களே… மாதம் ஒருமுறை உங்கள் தோழிகளுடன் நேரம் செலவிடுவதைக் குற்றஉணர்ச்சியோடு பார்க்காதீர்கள். அது உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கே வழிவகுக்கும் ஒரு ‘மனநல டானிக்’!
