இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அடுத்தடுத்து சதமடித்து அசத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் நடந்த கில் – ஜானி பேர்ஸ்டோ இடையிலான சூடான ஸ்லெட்ஜிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. gill again and again century lift up with bairstow sledging
பர்மிங்காமில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 3) தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தரப்பில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் சிறப்பாக ஆடினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அபாராமாக ஆடிய கில், சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 7வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் கேப்டனாக பொறுப்பேற்று முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 4வது வீரராக கில் இணைந்தார்.
முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் 147 ரன்கள் குவித்தார். தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளது ரசிகர்களிடையே பழைய சம்பவத்தை நினைவூட்டியுள்ளது.
அப்படி என்ன சம்பவம்?
கடந்த ஆண்டு தர்மசாலாவில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
அந்த போட்டியில் 699 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சனை ”விரைவில் ஓய்வு பெறுங்கள்” என கில் கூறி விமர்சித்தார். எனினும் அதற்கு அடுத்த பந்தில் கில்லை கிளீன் போல்டாக்கி தனது 700வது விக்கெட்டாக கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இது குறித்து இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்த பேர்ஸ்டோ, ஸ்லிப்பில் நின்ற கில்லிடம் கேள்வி எழுப்பினார்.
அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் :
பேர்ஸ்டோவ்: “ஜிம்மி ஓய்வு பெறுவது பற்றி நீங்கள் என்ன சொன்னீர்கள்?”
கில்: “நான் அவரிடம் ஓய்வு பெற வேண்டும் என்று சொன்னேன்.”
பேர்ஸ்டோவ்: “பிறகு அவர் அடுத்த பந்தில் உங்களை அவுட்டாக்கினார் தானே?”
கில்: “அதற்கு என்ன? என்னுடைய 100 ரன்களுக்குப் பிறகு தானே அவர் என்னை அவுட்டாக்க முடிந்தது”
பேர்ஸ்டோவ்: “ஓஹோ… அப்படியா!”
கில்: “இந்தத் தொடரில் உங்களிடம் எத்தனை சதங்கள் உள்ளன?”
பேர்ஸ்டோவ்: “நீங்கள் இங்கிலாந்து மண்ணில் எத்தனை சதம் எடுத்தீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
இந்த சூடான ஸ்லெட்ஜிங் நடந்த நான்காவது பந்தில் பேர்ஸ்டோவை, குல்தீப் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார்.
அந்த போட்டி நிலவரம் என்ன?
அதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 477 ரன்கள் குவித்தது. ரோகித் (103) மற்றும் கில் (110) சதமடித்திருந்தனர்.
அதன்பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்து 64 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.