ஒரு மலைக்கிராம மக்களின் வாழ்க்கை!
ஒரு திரைப்படம் என்பது பொழுதுபோக்குக்கானது என்பது எத்தனை சதவிகிதம் சரியோ, அதே அளவுக்கு அதன் வழியே ரசிகர்களுக்குப் புதியதொரு உலகம் அறிமுகமாக வேண்டும் என்ற எண்ணமும் மிகச்சரியானதாகத் திகழ்கிறது. இந்த இரண்டாவது வகையில் கவனிக்கத்தக்க படமாக உருவெடுத்திருக்கிறது சமீபத்தில் வெளியாகியுள்ள ‘கெவி’. gevi movie review july 18
ஒரு மலைக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாமல் தவிப்பதை ‘ஆக்ஷன்’ காட்சிகளோடு சொல்லியிருக்கிறது இப்படம். இதனைத் தமிழ் தயாளன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆதவன், ஷீலா, சார்லஸ் வினோத், ஜாக்குலின் லிடியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரபு சாலமோனின் ‘மைனா’, ‘கும்கி’, ‘பேராண்மை’, ‘கடம்பன்’ எனச் சில தமிழ் திரைப்படங்கள் மலைவாழ் மக்களின் தினசரி வாழ்வுப் போராட்டங்களை நமக்குக் காட்டியிருக்கிறது. அந்த வரிசையில், ’கெவி’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டது?

‘உயிருக்கான’ போராட்டம்!
மதுரை முகலாய மன்னர்கள் வசம் வந்தபோது, அதிக வரிவிதிப்பைத் தாங்க முடியாத சாதாரண மக்கள் சிலர் திண்டுக்கல்லில் ஒரு மலைப்பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு சமதளமாக இருந்த இடத்தில் குடிசைகள் அமைத்து, வேளாண்மை செய்து, இதர நேரங்களில் காட்டு விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தனர். அதனையொட்டி, அவ்வூருக்கு ‘கெவி’ என்றும் பெயர் வைத்தனர் என ‘டைட்டில்’லுக்கான அர்த்தத்தைச் சொல்கிறது தொடக்கத்தில் வரும் வரைபடக் காட்சி.
இப்போது சாலை, பள்ளி, மருத்துவமனை வசதிகள் இல்லாமல் அல்லாடும் அம்மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகக் கொடைக்கானலுக்கு மலைக்குன்றுகள் வழியே நடந்து செல்வதாகச் சொல்கிறது திரைக்கதை.
அதனைப் புரிய வைக்கும் வகையில், மலைச்சரிவில் சிக்கிய 5 பேரை டோலி கட்டி அவ்வூர் மக்கள் தூக்கிச் செல்வதையும், வழியிலேயே அவர்கள் இறந்து போவதையும் காட்டுகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஒழுங்கான சாலை வசதியோ, மருத்துவமனையோ தங்களுக்குக் கிடைத்திருந்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்காது என்பதே அம்மக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கிறது.
அந்த நேரத்தில், தேர்தலுக்கு வாக்கு கேட்டு அவ்வூருக்கு வரும் எம்.எல்.ஏ மற்றும் காவல்துறையினரைச் சந்திக்கின்றனர் கெவி மக்கள். ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் அம்மக்களை எம்.எல்.ஏ. சமாதானப்படுத்த முயல, அவர்கள் திமிறியெழ, இரு தரப்புக்கும் இடையே மோதல் நடக்கிறது.
அதில் ஒருவர் எம்.எல்.ஏ.வைத் தாக்கிவிடுகிறார். அதனைத் தடுக்க வரும் இன்ஸ்பெக்டர் ஒருவரிடமும் ஆத்திரப்படுகிறார்.
அது மட்டுமல்லாமல், சிலர் அந்த இன்ஸ்பெக்டர் மீது செருப்பு வீசுகின்றனர். அந்த சம்பவம் அவரை ‘வன்மத்தில்’ உழல வைக்கிறது.
தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு, தன்னிடம் எதிர்த்துப் பேசிய நபரை இதர போலீசார் உதவியுடன் தாக்கத் திட்டமிடுகிறார் அந்த இன்ஸ்பெக்டர். அதற்கேற்றவாறு அந்த நபரும் சில பொருட்களை வாங்கிக்கொண்டு நள்ளிரவில் மலைப்பாதையில் பயணிக்க முற்படுகிறார்.
இன்னொரு புறம், நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் அந்த நபரின் மனைவிக்கு ‘வலி’ ஏற்படுகிறது. உடனடியாகப் பிரசவம் பார்த்தாக வேண்டும் என்று ஒரு மூதாட்டி சொல்ல, சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் ஒரு ‘டோலி’யைக் கட்டி அதில் அப்பெண்ணை ஏற்றிச் செல்கின்றனர்.
அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு போன் செய்து, அங்கிருக்கும் மருத்துவரை எதிர்வழியில் வரச் சொல்வதே அவர்களது திட்டம். ஆனால், அந்த மருத்துவரோ ‘எனக்கு நிறைய வேலை இருக்கு’ என்று தன் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார்.
அது தெரியாமல், அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டு கெவி மக்கள் காட்டு வழியே பயணிக்கின்றனர்.
கணவன் போலீசாரிடம் இருந்து தப்பியோட, அவரது மனைவியோ தனது குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் வலியில் துடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு பக்கமும் ‘உயிருக்கான’ போராட்டமே நிகழ்கிறது.
இறுதியில், அவர்கள் உயிர் பிழைத்தார்களா என்று சொல்கிறது ‘கெவி’யின் மீதி.
உண்மையைச் சொன்னால், இது பல ஆண்டுகளாக நாம் திரைப்படங்களில் பார்த்த அதே கதைதான். காட்சிகள் கூடப் புதிது அல்ல. ஆனால், அடிப்படை வசதிகளே செய்து தரப்படாத மலைக்கிராமமொன்றைச் சேர்ந்தவர்கள் இக்கதை மாந்தர்கள் என்று சொன்ன வகையில் வித்தியாசப்படுகிறது ‘கெவி’.
அதனால், திரையில் நாம் காண்கிற எல்லாமே புதிதாகத் தெரிகிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

வித்தியாசமான திரையனுபவம்!
இயக்குனர் தமிழ் தயாளன் தொடக்கத்திலேயே இப்படத்தில் பிரதானமாகக் காட்டப்பட்ட பிரச்சனைகளின் பின்னணியைச் சொல்லிவிடுகிறார். போலவே, தொடக்கத்தில் வரும் சில காட்சிகளின் வழியே நாயகன், நாயகியின் இயல்புகளையும் உணர்த்திவிடுகிறார்.
அதனால், லாஜிக் மீறல்களுக்கு அப்பாற்பட்டு இப்படத்தின் காட்சிகளோடு நம்மால் ஒன்ற முடிகிறது.
பிரதான பாத்திரங்களில் நடித்துள்ள ஷீலா, ஆதவன் இருவருமே நாம் கண்கலங்குகிற வகையிலான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
இவர்களோடு ஷீலாவின் சகோதரராக வருபவர், டாக்டராக வரும் காயத்ரி, ஜுனியர் டாக்டராக வரும் ஜாக்குலின், இன்ஸ்பெக்டராக வரும் சார்லஸ் வினோத் மற்றும் மருத்துவமனை, காவல்துறை பணியாளர்களாக நடித்தவர்கள், கெவி மக்கள் என்று பலரது முகங்கள் இப்படத்தில் தோன்றி மறைகின்றன.
ஒவ்வொருவருக்கும் தேவையான அளவுக்குத் திரையில் முக்கியத்துவம் அளித்திருக்கிறார் இயக்குனர்.
பல காட்சிகளில் அவர்களது முகபாவனைகள் சரியாகத் தெரியாதபோதும், அந்த உணர்வைக் கடத்திவிடுகிறார். அதற்கேற்றவாறு அவரது கதை சொல்லலும் காட்சியாக்கமும் அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யாவின் கேமிரா காடு, மலைகளில் சுற்றித் திரிந்திருக்கிறது. இருளுக்கு நடுவே குறைந்த ஒளியோடு படம்பிடிக்கிற வித்தையும் அவருக்கு ‘நன்றாக’ வாய்த்திருக்கிறது.
இதில் கலை இயக்குனராக அறிவுமணி பணியாற்றியிருக்கிறார். கெவி மக்களின் இயல்பைத் திரையில் உணர்த்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஹரி குமரன் காட்சிகளை, ஷாட்களை அடுக்குவதில் கொஞ்சமும் குழப்பமின்றிச் செயல்பட்டிருக்கிறார். என்ன, கிளைமேக்ஸ் பகுதி மட்டும் நிறையவே அயர்ச்சியைத் தருகிறது. அதனைச் சரி செய்திருக்கலாம்.
பாலசுப்பிரமணியம் ஜியின் பாடல்கள் ஆங்காங்கே காட்சிகளின் தன்மையை உணர்த்துகிற வகையில் ஒலிக்கின்றன.
அதற்கு இணையாக, ராஜா ரவிவர்மா உடன் இணைந்து அவர் தந்திருக்கிற பின்னணி இசை உள்ளது. முழுக்கத் திரையோடு நாம் பின்னிப் பிணைய அது வழிவகுக்கிறது.
கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சியில் ரசிகர்களின் நரம்புகளை முறுக்கேறச் செய்திருக்கிறார் ஸ்டண்ட் இயக்குனர் டான் அசோக்.
ஒரு வழக்கமான ‘கமர்ஷியல்’ படமாக ‘கெவி’ நிச்சயம் இருக்காது. இப்படத்தில் காட்டப்படுகிற சிலரது வாழ்க்கை சில ரசிகர்களுக்குச் சலிப்பையும் அயர்ச்சியையும் தரலாம்.
அதேநேரத்தில், அரிதாகச் சில நேரங்களில் தினசரிகளில், தொலைக்காட்சிகளில், சமூகவலைதளங்களில் நாம் எதிர்கொள்ள நேரிடுகிற மலைவாழ் மக்களின் துயர்மிகு வாழ்க்கை குறித்த செய்திகளைக் கண் முன்னே காட்டுகிறது இப்படம். அது நிச்சயம் வித்தியாசமான திரையனுபவத்தைத் தரும்.
படத்தின் இறுதியில், உண்மையான கெவி கிராமத்தோடு வேறு சில பகுதிகளில் நிகழ்ந்த துயர சம்பவங்கள் சிலவும் காட்டப்படுகின்றன.
வசந்தபாலன் இயக்கிய ‘அங்காடித்தெரு’ மூலமாகப் பெருநகரங்களில் உள்ள ஆயத்த ஆடை விற்பனையகங்களில் பணியாளர்களுக்குத் தேவையான சில அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது போன்றே, ‘கெவி’ மூலமாக மலைக்கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வில் சில நற்மாற்றங்கள் ஏற்படுவது இப்படத்தின் உண்மையான வெற்றியாக அமையும்..!