ஆஸ்காருக்குப் போகும் கெவி

Published On:

| By Minnambalam Desk

Gevi movie an official Contender for 2026 Oscar

ஆர்ட் அப் ட்ரையாங்கில்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் பெருமாள் .ஜி.ஜகன் ஜெய சூர்யா, ஆகியோர் தயாரிக்க, ஜெக சிற்பியன், வருண் குமார், ஆதவன், உமர் ஃபரூக், மணிகண்ணன் இணை தயாரிப்பில் ,

அறிமுக நாயகன் ஆதவன், ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின், சார்லஸ் வினோத் நடிக்க, தமிழ் தயாளன் எழுதி இயக்கி ஜூலை 18, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான படம் கெவி.

ADVERTISEMENT

கெவி என்ற வார்த்தைக்கு பள்ளம் என்று பொருள்.

இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரர்கள் இந்த மண்ணின் வெயில் தாள முடியாமல் குளிர்ப் பிரதேசங்களை கண்டடையும் முயற்சியில் வந்த கிராமம் கெவி. அது மிக சிறிய கிராமம் என்பதால் அதற்கும் மேலே அவர்கள் சமதளப் பகுதியைத் தேட முயல, அந்த வெள்ளைக்காரர்களை டோலியில் தோளில் வைத்து சுமந்து தூக்கிக் கொண்டு போனவர்கள் இந்த கெவி கிராமத்தினர். அப்படி மேலே போய் வெள்ளைக்காரர்கள் கண்டு பிடித்த இடம்தான் கொடைக்கானல்.

ADVERTISEMENT

பின்னாளில் கெவி கிராமத்தின் பெயர் மட்டும் வெள்ள கெவி என்று மாறி இருக்கிறதே ஒழிய, இன்றும் அந்த மக்களின் தோள்களில் இருந்து டோலி சுமை இறங்கவில்லை.

சாலை வசதி, மருத்துவ வசதி உட்பட எந்த அடிப்படை வசதியும் இன்னும் இல்லாத நிலையில், மருத்துவ அவசர சிகிச்சைத் தேவைகள் உட்பட பல விசயங்களில் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் டோலி கட்டி சுமந்து கொடைக்கானல் ஏறியோ அல்லது கீழே கொடை ரோடு இறங்கியோ தான் வர வேண்டும். வழியிலேயே கர்ப்பிணிப் பெண்கள், மரணிப்பது எல்லாம் மாறாத சோகம்.

ADVERTISEMENT

சாலை வசதி வேண்டும் அடிப்படை மருத்துவ வசதி வேண்டும் என்று அந்த மக்கள் போராடும்போது எல்லாம் கண்டு கொள்ளாத அரசியல்வாதிகளும் அரசு எந்திரமும் தேர்தல் சமயத்தில் மட்டும் பிரச்சாரத்துக்கும் கழுதைகள் சுமக்கும் ஓட்டுப் பதிவு எந்திரங்களோடு கழுதைகளோடு கழுதையாகவும் வருவது உண்டு.

அப்படி ஓர் ஆளுங்கட்சி எம் எல் ஏ பிரச்சாரத்துக்கு வர, கிராமத்து நபர் மலையன் (ஆதவன்) தலைமையில் மக்கள் திரண்டு ஊருக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். எம் ஏல் ஏ வுக்கு ஆதரவாக ஒரு போலீஸ் அதிகாரி (சார்லஸ் வினோத்) களமிறங்க, அகஸ்மாத்தாக மலையனின் செருப்பு போலீஸ் மேல் பட, ஒரு ‘காட்டுப் பன்றி’ தன்னை செருப்பால் அடித்ததாக உணர்கிறார் போலீஸ் அதிகாரி.

தனிப்பட்ட வன்மம் கொள்ளும் போலீஸ் அதிகாரி படையோடு, இரவு அந்த கிராமத்து வழியில் மலையனை மறித்து கொலை வெறியோடு தாக்கி அணுஅணுவாக சித்திரவதை செய்ய,

இன்னொரு பக்கம் கெவியில் மலையனின் மனைவி நிறைமாத கர்ப்பிணி மந்தாரைக்கு (ஷீலா ராஜ்குமார்) பிரசவ வலி தீவிரமாகிறது.

சோதித்துப் பார்க்கும் ஒரு தாய்க் கிழவி வயிற்றுக்குள் சிசு கொடி சுற்றிக் கிடப்பதையும் உடனே ஆங்கில மருத்துவம் பார்க்காவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் சொல்லி விடுகிறார்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு போன் செய்தால் அங்குள்ள டாகடர் காயத்ரி” உங்க ஊருக்கு வந்து எல்லாம் பிரசவம் பார்க்க முடியாது. இங்க கொண்டு வந்தா பாக்கறேன். வழியில கர்ப்பிணி செத்துப் போனா அப்படியே வழியில தூக்கிப் போட்டுட்டு திரும்பிப் போயிடுங்க” என்று சொல்லி விட்டு தனது தனியார் மருத்துவமனைக்குப் போய் விடுகிறார்.

மலையானுக்கு போலீஸ் கொடுமைகள் தொடர்கின்றன.

கர்ப்பிணியைத் தூக்கிக் கொண்டு மக்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு இரவில் மலையேறி வர, விஷயம் அறிந்த ஓர் இளம் மருத்துவர் (ஜாக்குலின்)….. குழந்தை பெறும் வாய்ப்பு இல்லாததால் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் தனது குழந்தையாக நினைக்கும் ஒரு திருநங்கை மருத்துவ உதவியாளர் (ஜீவா சுப்பிரமணியம்)…. ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்தபடி வரும் ஆம்புலன்ஸ் டிரைவர் மூவரும் மருத்துவமனையில் இருந்து கிராமம் நோக்கி மலைப் பாதையில் இறங்கி நடக்கின்றனர்.

மலையனை கொலை செய்யும் முடிவோடு தாக்கிக் கொண்டு இருக்கிறது போலீஸ்.

அடுத்து நடந்தது என்ன என்பதே படம்.

ஒரு நல்ல படம் கொஞ்ச நேரத்திலேயே தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். பிரிட்டிஷ் காலக் கெவி, இன்றைய கெவி என்று அந்தக் கிராமத்தின் வரலாறு சொல்லப்படும் ஆரம்பமே ஆர்வத்தை தூண்டியது..

போலீஸ் சித்திரவதைகளை பற்றி நிறையப் படம் பார்த்து இருக்கிறோம். அதிர்ந்து இருக்கிறோம். ஆனால் ஏனென்று கேட்க ஆளில்லாத மலையங்காட்டுக்குள் மனிதனாகவே மதிக்கப்படாத ஒரு நபரை வன்மை குடோன் போலீஸ் தாக்கினால் எப்படி இருக்கும்?

வயிற்றுக்குள் கொடி சுத்திக் கிடக்கும் நிறைமாத கர்ப்பிணியை நள்ளிரவில் காட்டு வழியில் தொட்டில் கட்டித் தூக்கிப் போவதன் சிரமங்கள் என்ன?

டோலியில் கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிக் கொண்டு இரவில் மலைக்காட்டில் மலையேறும் போது அந்த தாயின் பனிக்குடம் உடைந்து…. அந்த நீர் ஏதோ தொட்டிலில் தூங்கும் குழந்தை கழிக்கும் சிறுநீர் வழிவது போல… வழியும்போது பார்ப்பவர்கள், அந்த கர்ப்பிணிப் பெண்ணின் பாசமுள்ள தம்பி ஆகியோரின் மனநிலை என்னவாக இருக்கும்?

அட்டகாசமான அந்தக் காடும் மலையுமான லொக்கேஷன். அதன் நீலம் கலந்த கரிய இரவின் அடர்த்தி. கொடுமைகள் நடக்கும்போது அசையாமல் வேடிக்கை பார்க்கும் நட்சத்திரங்கள்.. தூரத்தில் கீழே வெளிச்சக் கும்பலாய் தெரியும் ஏதோ ஒரு நகரம் (திண்டுக்கல்?) சில கிலோ மீட்டர்கள் மேலே போனால் எல்லாம் கிடைக்கும் கொடைக்கானல். ஆனால் போக வைக்க விடாத அரசுகளின் பாராமுகம்….

உயிரைக் கொடுத்து நடித்தேன் என்று யார் சொன்னாலும் நம்ப முடியாது. ஆனால் இந்தப் படத்தில் நடித்த யார் சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம்.

வயிற்றுக்குள் குழந்தை உதைக்கையில் ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு ஏற்படும் சந்தோஷ சிலிர்ப்பில் துவங்கி, திடீர் வலி, வலியின் தீவிரம், கதறல், பயம், பதட்டம், வைராக்கியம்,’ தான் செத்தாலும் பரவாயில்லை பிள்ளை பிழைத்தால் போதும்..’ என்ற முடிவு, பின்னர் மயக்கம் என்று (ஒரு நிலையில் …. சொல்ல வேண்டாம் ஸ்பாய்லர் ஆகி விடும்) பிரம்மிக்கத் தக்க நடிப்பையும் உழைப்பையும் கொடுத்திருந்தார் ஷீலா.

கணவனும் மனைவியும் கட்டிக் கொண்டு அழும் ஒரு காட்சி நாம் பார்ப்பது சினிமா அல்ல, ரத்தமும் சதையும் கண்ணீரும் வியர்வையுமான வாழ்க்கை என்று உணர்த்தும் இடம்.

பிரசவத்தில் குழந்தை இறந்து போவதை குடும்பமே ஒரு மென் கண்ணீரோடு கடந்து போகும் இன்றைய நவ நாகரீக நகர வாழ்க்கையில், பிரசவிக்கப்படும் குழந்தையைக் காப்பாற்ற ஊரே கதறும் கதறலைப் படமாக்கி நெகிழ விட்ட விதமாகட்டும்.. அசத்தி இருந்தார் இயக்குனர்.

பிரசவ சிகிச்சையில் உள்ள ‘ரிவர்ஸ் புஷ்’ பற்றிய காட்சி இயக்குனரின் தேடல் நேர்த்திக்கு சான்றாக இருந்தது.

98 ஆஸ்கார் அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு கெவி அதிகார பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்போதே விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்ற படம் இது.

கெவி திரைப்படம் அகாடெமி விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்று இருப்பது நியாயமான விஷயம்.

  • ராஜ திருமகன்
    .
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share