கேப்டன் சுப்மன் கில் 21 ரன்னில் படுமோசமாக ரன் அவுட் ஆனதை அடுத்து, 54 ஆண்டுகளாக இருந்து வரும் சுனில் கவாஸ்காரின் இமாலய சாதனை தற்காலிகமாக தப்பித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதல் நான்கு போட்டிகளின் முடிவில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
இந்த நிலையில் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூலை 31) தொடங்கிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.
ஆனால் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களம் கண்ட ஜெய்ஸ்வால் (2) மற்றும் கே.எல்.ராகுல் (14) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனையடுத்து சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் சுப்மன் கில். மைதானத்தில் பெய்த மழைக்கு நடுவே இருவரும் பொறுமையாக ஆடி ரன் சேர்த்தனர்.
அப்போது கில் 11 ரன்களை கடந்த நிலையில் இந்திய அணியின் கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக கடந்த 1978-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவின் கேப்டனாக சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை 47 ஆண்டுகள் கழித்து தற்போது கில் முறியடித்தார்.
எனினும் அட்கின்சன் வீசிய 27வது ஓவரை எதிர்கொண்ட அவர், பந்தை தட்டி விட்டு ரன் ஓட முயற்சித்தார். ஆனால் எதிர்முனையில் இருந்த சாய் சுதர்சன் மறுக்கவே, சுப்மன் கில் வெறும் 21 ரன்னில் அட்கின்சனால் ரன் – அவுட் செய்யப்பட்டு பரிதாபமாக வெளியேறினார்.
இதனால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை பெற முடியாமல் போனது. கடந்த 1971-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரின் போது 774 ரன்கள் குவித்து தற்போது வரை சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார்.
எனினும் இந்த சாதனையை படைக்க கில்லுக்கு இன்னும் 32 ரன்கள் தேவைப்படுகிறது. மற்றொரு இன்னிங்ஸ் உள்ள மீதமுள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.