முதல் விஷயம்
எக்காரணத்தை முன்னிட்டும் அந்தப் பத்திரிகையாளர் செய்கையை நியாயப்படுத்த முடியாது . அது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதில் துளியும் மாற்றுக் கருத்து இல்லை.
என்ன செய்கை என்று முழுக்கத் தெரிந்து கொள்வோம்…
திரைக்கு வந்திருக்கும் ‘அதர்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சுமார் ஒரு வாரம் முன்பு நடந்தது. கவுரி கிஷனும் மேடையில் இருக்க, படத்தின் நாயகன் ஆதித்யா மாதவனிடம் ஒரு பத்திரிகையாளர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார். ” டிரைலரில் ஒரு காட்சியில் நீங்கள் கவுரி கிஷனைத் தூக்குகிறீர்களே . கவுரி கிஷன் வெயிட் எவ்வளவு?” என்று கேட்டார்.
அதற்கு ஆதித்யா மாதவன் ”தூக்க முடிந்த வெயிட்தான்” என்று முடித்துக் கொண்டார். கவுரி கிஷனுக்கு அதன் நோக்கம் அப்போது புரியவில்லை( என்று பின்னர் கவுரி கிஷன் சொன்னார்)
பின்னர் யோசிக்கும்போதுதான் அது நான் குண்டாக இருப்பதைக் கேலி செய்யும் கேள்வி என்று மெதுவாகவே புரிந்தது என்கிறார் கவுரி கிஷன் .
எனவே அவர் ஒரு யூடியூப் சேனலில் இது பற்றிப் பேட்டி கொடுக்கும்போது, ” இப்படி எல்லாம் நாகரீகம் இல்லாமல் கேள்வி கேட்கிறார்கள் . இப்படி பாடி ஷேமிங் செய்வது நியாயமா? அப்படிக் கேட்பவர் எல்லாம் ஒரு பத்திரிகையாளரா?” என்று கேட்டு தன் வேதனையைத் தெரிவித்து இருந்தார்.
”நான் அப்படி என்ன தவறாகக் கேட்டு விட்டேன். அது ஒரு ஜாலியான கேள்விதானே ..” என்று சொன்ன அந்தப் பத்திரிக்கையாளர், படத்தின் பிரஸ் ஷோவுக்கு கவுரி கிஷன் வரட்டும் . நான் கேட்கிறேன், அதில் என்ன தப்பு என்று” என்று சொல்லியபடி காத்திருந்தார்.
அடுத்த சில நாட்களில் படத்தின் பத்திரிகையாளர் காட்சியும் வந்தது. படம் முடிந்ததும் உடனடியாக விமர்சனம் செய்ய வேண்டிய நபர்கள் எல்லாம் கிளம்பி விட, படத்தின் இயக்குனர் அபின் ஹரிஹரன், நாயகன் ஆதித்யா மாதவன், நாயகி கவுரி கிஷன் ஆகியோர் காட்சி ஊடகப் பேட்டிக்குத் (டி வி மற்றும் தொலைக்காட்சி) தயாரானார்கள்.
பேட்டி துவங்கியதும் அந்தப் பத்திரிகையாளர் கவுரி கிஷனிடம் , ” நான் என்ன தவறாகக் கேட்டேன். அது ஒரு ஜாலியான கேள்விதானே. அது தவறு என்றால் என்னிடம் அப்போதே சொல்லி இருக்கலாம். அதை விட்டு விட்டு இன்னொரு யூ டியூபில் பேட்டி கொடுத்தால் என்ன அர்த்தம் ?” என்று உரத்த குரலில் கோபமாகக் கேட்டார் .
“ஓ.. நீங்கதானா அது? நீங்கள் கேட்டது ஒரு பெண்ணை அவமானப்படுத்தும் விஷயம் அல்லவா?” என்றார் கவுரி
பத்திரிக்கையாளர் ” அதில் என்ன அவமானம்? அது ஒரு சுவையான கேள்விதானே . அதுவும் நான் உங்களிடம் கேட்கவில்லை. ஹீரோவிடம்தான் கேட்டேன். அதற்கு அவரும் பதில் சொன்னார் . அதில் உங்களுக்கு என்ன பிரச்னை??’ என்றார் .
“யாரிடம் கேட்டால் என்ன ? அது என்னைப் பற்றிய கேள்விதானே . நான் குண்டாக இருக்கிறேன் என்று கேலி செய்வதுதானே அதன் நோக்கம்?” என்றார் கவுரி
பத்திரிக்கையாளர் தொடர்ந்து, ” இங்க சரிதா குஷ்பு என்று குண்டான நடிகைகள் எல்லாம் பெரிதாக சாதித்து இருக்கிறார்கள் . குண்டாக இருப்பது என்பது கேலியான விஷயம் இல்லை” என்றார் .
”அப்போ நீங்க ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க ?” என்றார் கவுரி.
பத்திரிகையாளர் ”நான் நடிகன் இல்லை . என் உடல் குண்டாக இருப்பதில் பிரச்சினை இல்லை ” என்றார் .
”நான் ஏன் குண்டாக இருக்கிறேன் தெரியுமா? எனக்கு ஹார்மோன் பிரச்னை இருக்கிறது. அதனால்தான் குண்டாக இருக்கிறேன் .” என்று சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார் கவுரி கிஷன்.
அப்போதாவது விட்டிருக்கலாம்.

ஆனால் தொடர்ந்து அந்தப் பத்திரிகையாளர் ” அதைச் சொன்னால் போதுமே . அதை விட்டுவிட்டு அவர் எல்லாம் உண்மையான பத்திரிகையாளர்தானா என்று கேட்டால் என்ன அர்த்தம்? நான் ஒரு பிரபல நாளிதழில் வெகுகாலம் வேலை பார்த்த அனுபவசாலி . நான் கேட்ட கேள்விகளால் கேள்வியின் நாயகன் என்று பெயர் வாங்கியவன் . என்னைப் பார்த்து எப்படி நீங்கள் ஒரு பத்த்ரிகையாளனா என்று கேட்கலாம் ?” என்றார் கோபமாக.
“என்ன இருந்தாலும் அது ஒரு ஸ்டுபிட் கொஸ்டின். (முட்டாள்தனமான கேள்வி ) என்றார் கவுரி .
பத்திரிகையாளர் , ” அப்போ நான் என்ன முட்டாளா?” என்றார் .
“நான் கேள்விதான் முட்டாள்தனம் ன்னு சொன்னேன் ” என்று சொன்னார் கவுரி
உடனே இன்னொரு பத்திரிக்கையாளர், ” அவர் காமெடிக்குதனே அந்தக் கேள்வியைக் கேட்டார். ?” என்று கேட்க, “அது எப்படி காமெடியாகும் . அது உங்களுக்கு காமெடியா?” என்றார் கவுரி .
கவுரி கிஷன் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த படத்தின் இயக்குனரும் நாயகனும் ஒன்றுமே சொல்லாமல் இருக்க, சக பத்திரிகையாளர்களும் அமைதியாக இருக்க , ” இங்கே ஒரு பெண் பத்திரிகையாளர்களும் இல்லை ” என்பதை குறிப்பிட்ட கவுரி கிஷன் , தனது கண்டனக் குரலை தொடர்ந்து பதிவு செய்தார்
பத்திரிக்கையாளர் பேசிய விஷயத்தை விட அவரது கோபமும உரத்த குரலும் முக பாவனைகள் மற்றும் உடல் மொழிகள் அனைத்தையும் காட்சியாகப் பார்த்த போது, சமூக வலைத்தளங்கள் பற்றிக் கொண்டன.
இதற்கு முன்பு இதே பத்திரிக்கையாளர் அரிமா நம்பி என்ற படத்தின் பிரஸ்மீட்டில் பிரியா ஆனந்த் பற்றி ஒரு ஆபாசமான கேள்வியைக் கேட்டதை நினைவு கூர்ந்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்தது தென்னிந்தியா நடிகர் சங்கம்.

பத்திரிகையாளர் சங்கமும் அந்த பத்திரிக்கையாளரைக் கண்டித்தது.
குஷ்பூ போன்றவர்கள் இதை வைத்து ஒட்டு மொத்த பத்த்ரிக்கையாளர்களையும் தாக்கிப் பேச, “ஒருவர் செய்த தவறுக்கு எல்லோரையும் குஷ்பூ பேசுவது நியாயமா? இவர் மாறி மாறி பேட்டிகளில் சொன்ன பொய்களை அவ்வப்போது பத்திரிக்கையாளர்கள் அம்பலப்படுத்தியதால் ஆத்திரத்தில் இருந்த குஷ்பூ , இப்போது இந்த சந்தர்ப்பத்தைப் பழிவாங்கப் பயன்படுத்துகிறார்” என்பது அவர்கள் வருத்தம் . அதே நேரம் கவுரி கிஷனிடம் கோபப்பட்ட பத்திரிக்கையாளரைக் கண்டிக்கவும் தயங்கவில்லை.
விஷயம் நேஷனல் மீடியா வரை போனது .
பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை.
இப்படி எல்லாம் கேள்வி கேட்கும் பழக்கம் எப்படி வந்தது? இந்த தைரியம் யார் கொடுத்தது?
ஆரம்பத்தில் திரைப்படப் பேட்டிகள் எல்லாம் அரசியல் பேட்டிகள் போலவே இருந்தன . கையில் பேனா பேப்பரோடு கேள்வி கேட்பது . சொல்வதை ஷார்ட் ஹேண்ட் முறையிலோ அல்லது குறிப்பு எடுத்தோ எழுதுவது .
அந்தக் காலத்தில் பத்திரிகையாளர்கள் ஆவது அவ்வளவு சுலபமில்லை. அதற்கு சில அடிப்படைத் தகுதிகள் வேண்டும் . கண்ணியம் வேண்டும் . எனவே கேள்வி கேட்பவர்களுக்குப் பொறுப்பு இருந்தது .
காரணம் இதழியல் என்பதே கண்ணியமானவர்கள் கையில் இருந்தது.
பிறகு வார இதழ்களில் பெயர் போடாமல் ஆனால் படிக்கிறவர்களுக்கு யார் என்பது புரியாமல் சங்கேதக் குறிப்புகளோடு கிசு கிசு எழுதும் பழக்கம் வந்தது .
அதன் பின்னர் தொலைக்காட்சிச் சேனல்கள் வந்த போது, பேட்டி தரும் பிரமுகரைக் கேள்வி கேட்டு மடக்குவதும் அவர்களது அதிர்ச்சியைக் காட்சிப் படுத்துவதும் சுவையான விசயமாக இருந்தன .
சினிமாக் கலைஞர்களுக்கும் அதுவே நடந்தது .
ஒரு காலத்தில் பத்திரிகைக்கு வரும் எல்லாம் செய்திகளிலும் படத்தில் நடிக்கும்போது கதாநாயகி கடலில் விழுந்துவிட , அவரை ஹீரோ தைரியமாகக் குதித்து காப்பாற்றினார் என்ற செய்தி வரும். படத்தைப் பார்த்தால் அது முழுக்க முழுக்கதண்ணி இல்லாத காட்டில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும்
ஒரு நிலையில் படத்தின் புரமோஷனுக்காக, படக்குழுவே தங்களுக்கு நம்பிக்கையான நிருபர்களை அழைத்து, “எங்க ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் லவ் ன்னு சும்மா கட்டி விடுங்க” என்று காசு கொடுத்து எழுதச் சொன்னார்கள் .
ஒரு நிலையில் சினிமாப் பத்திரிகையாளர்கள் பட விமர்சனம் மற்றும் பட நிகழ்ச்சிகளில் நடப்பதை உண்மையாக எழுதும்போது அது படத்தைப் பாதிப்பதை உணர்ந்து அவர்களின் வலிமையை உடைக்க, சில தகுதியற்றவர்கள் களம் இறக்கப்பட்டனர்.
பின்னர் யூ ட்யூப் வந்தபோது ஆரம்பத்தில் நன்றாகவே போனாலும், ஒரு நிலையில் நடிக நடிகையரின் அந்தரங்கங்களைப் பற்றி உண்மையும் பொய்யுமாக ஆபாசமாக வக்கிரமாக சிலர் பேச, அதற்கு கிடைத்த மக்கள் வரவேற்பு அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர்களையும் யோசிக்க வைத்தது.
பட விமர்சனம் என்ற பெயரில் கேவலமாக மரியாதை இன்றி பேசும் நபர்கள் வளர்ந்தனர் . அவர்களை கண்டிப்பது போல பாவ்லா காட்டிய தயாரிப்பாளர்கள், பின்னர் அவர்களுக்கே விளம்பரம் கொடுத்து தாஜா செய்தனர் . ”எங்க படம் நல்லா இல்லன்னு சொல்லிடாதீங்க . எங்க படத்தைப் பத்தி நீங்க பேசவே வேணாம். அதுக்கு வச்சிக்குங்க” என்று ஒரு பெரும் தொகையை கொடுப்பதும் நடந்தது.
தன்னைப் பற்றி உண்மையாகவோ பொய்யாகவோ ஆபாசமாகப் பேசும் பத்திரிகையாளர்களிடம் சம்மந்தப்பட்ட பிரமுகர்கள் பணிந்து போய் காசு கொடுத்து தன்னைப் பற்றிப் பேசியதை நிறுத்த , பலருக்கும் இந்த மிரட்டல் தொழில் லாபகரமான் ஒன்றாக ஆனது .
இந்த யூடியூப் மூலம் கிடைக்கும் விளம்பரத்துக்காக படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பல சினிமாப் பிரமுகர்களே சம்மந்தப்பட்ட நடிகைகள் இல்லாதபோதோ அல்லது மேடையில் உடன் நடிகைகள் இருக்கும்போதோ அவர்களைப் பற்றிக் கிண்டலாக கேலியாக பேச ஆரம்பித்து பின்னர் வக்கிரமாக ஆபாசமாகப் பேசும் சம்பவங்களும் நடந்தன.

அதில் ஒரு சில கிண்டல்கள் , கேலி செய்பவர்கள் பெரிய ஆட்கள் என்பதால் சம்மந்தப்பட்ட நடிகைகளாலேயே ரசிக்கப்பட்டன . சிலர் மிக வக்கிரமாக ஆபாசமாகப் பேசிய போது மேடையிலேயே மவுனமாக இருந்த நடிகைகளும் உண்டு .
எல்லை மீறும்போது கூட சொன்ன ஆள் யார் என்பதைப் பொறுத்தே ரீயாக்ஷன்கள் இருந்தன.
ஒரு பிரபல நடிகர் அப்படி ஒரு பிரபல நடிகையைப் பற்றி ஒரு சினிமா மேடையில் ஆயிரம் கேமராக்கள் முன்னிலையிலேயே படு கேவலமாகப் பேச , அவர் இருந்த கட்சி அவரை கட்சியை விட்டே நீக்கிய சம்பவமும் நடந்தது .
அவர்களே பேசும்போது நாம பேசினால் என்ன என்று சில பத்திரிகையளர்கள் நினைத்தார்கள் .
ஒரு நிலையில் சினிமா நிகழ்ச்சிகளில் தகுதியற்றவர் தகுதி இல்லாத யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்க வரலாம்; சம்மந்தப்பட்டவர்களைப் பார்த்து ‘சரி கட்டினால்’ போதும் என்ற சூழல் உருவானது .
அந்தப் புதியவர்களுக்கு மேலே சொன்னவர்கள்தான் ஆதர்ஷ நாயகர்கள். அவர்களைப் பொறுத்தவரை அப்படி பேசுவதும் எழுதுவதும்தான் பத்திரிகையாளர் வேலை .
அப்படி எல்லாம் செய்யாமல் நேர்மையாக தொடர்ந்து செயல்பட்ட தரமான தகுதி வாய்ந்த பத்திரிக்கையாளர்கள் எள்ளி நகையாடப்பட்டார்கள். புறக்கணிக்கப்பட்டார்கள்.
ஒரு படத்தை மக்களிடம் கொண்டு போகும் வேலையைச் செய்யும் பல்வேறு தரப்பினரும் மிரட்டுவோருக்குதான் பயந்தார்கள் . கண்ணியமான பத்திரிகையாளர்களிடம் தங்கள் கோபத்தைக் காட்டுவார்கள் .
இதுவும் பலரையும் யோசிக்க வைத்தது. தன்னை விவகாரமனவனாகக் காட்டிக் கொண்டால்தான் படம் சம்மந்தப்பட்ட ஆட்கள் தன்னை மதிப்பார்கள் என்ற முடிவுக்கு வந்தனர் .
இன்னொரு முக்கிய விஷயம் ..
ஒரு கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கும் உரிமை எல்லாப் பிரமுகர்களுக்கும் உண்டு . ஆனால் அதுவே தெரியாத பலர் சினிமாப் பத்திரிகையாளர்களாக திட்டமிட்டு ஆக்கப்பட்டார்கள் . அவர்கள் எல்லோரும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியே ஆகணும் என்று அதிகாரமாக அடம் பிடிப்பார்கள் .
அதே போல ஒரு பிரமுகர் ஒரு விஷயத்தை சொல்லி விட்டு , “இதை உங்கள் புரிதலுக்காக சொல்கிறேன் . எழுதாதீர்கள் ‘ என்று சொல்லி விட்டால், ஒரு நல்ல பத்திரிகையாளன் அதை தன் மனைவியிடம் கூடச் சொல்ல மாட்டான்.
இப்படி ஒரு விஷயத்தை இப்போது உள்ள பல பத்திரிக்கையாளர்களிடம் சொன்னால் , ” யோவ் நீ என்ன லூசா? ” என்பார்கள் .
படம் சம்மந்தப்பட்ட பல்வேறு தரப்பினரும் இப்படி உண்மையாக இருக்கும் பத்திரிகையாளர்களை மதிக்கவே மாட்டார்கள்
முக்கியமாக மேல சொன்ன இரண்டு விசயமும் இப்போது அரசியல் பத்திரிக்கையாளர்களிடம் கூட அரிதாகவே போய் விட்டது .
இது எல்லாமும் சேர்ந்து இப்போது கவுரி கிஷன் விஷயமாக வெடித்து விட்டது.
அந்த கையறு சூழலிலும் அவர் பயப்படாமல் எதிர் கொண்டதை பெண்கள் உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது.
இது எல்லா தரப்பினருக்கும் பாடமாக இருந்தால் , இனி இப்படிப்பட்ட அசிங்கங்கள் நிகழாமல் இருக்கும் .
தமிழில் வரும் முக்கால்வாசிப் படங்கள் மீதே மக்களுக்கு மரியாதை இல்லை. இப்போ இது வேற ~
— ராஜ திருமகன்
