பெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளுக்குச் செருப்பு மாலை மற்றும் பாவாடை அணிவித்து, பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் உடுமலை சாலைப் பகுதிகளில் உள்ள போக்குவரத்துச் சிக்னல்களில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 17-ஆம் தேதி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர், தமிழக அரசின் திட்டங்களை விமர்சிக்கும் நோக்கில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகப் புகார்கள் எழுந்தன.
அதிமுக தலைவர்களின் இந்தப் பேச்சு தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர்களது கருத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நடிகை ஒருவரைப் பற்றி சி.வி. சண்முகம் தெரிவித்த கருத்துக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் கண்டனம் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், இன்று காலை பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் உடுமலை சாலைப் பகுதிகளில் உள்ள போக்குவரத்துச் சிக்னல்களில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் ஆகியோரின் உருவ பொம்மைகளைத் தொங்கவிட்டிருந்தனர். அந்த உருவ பொம்மைகளுக்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததோடு, பாவாடையும் கட்டப்பட்டிருந்தது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தொங்கவிடப்பட்டிருந்த உருவ பொம்மைகளை உடனடியாக அகற்றினர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்தச் செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
