ஹீரோவாக ஜெயித்தாரா கேபிஒய் பாலா?
டைட்டிலை பார்த்தவுடனேயே ‘இதென்ன இப்படியிருக்கு’ என்றே பெரும்பாலும் எண்ணத் தோன்றும். கூடவே, இந்த டைட்டிலை வைத்துக்கொண்டு கதையில் என்ன சொல்லிவிட முடியும் என்ற எண்ணமும் எழும். ஆனால், அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதையே தங்களது பலமாக எண்ணிக் களமிறங்கியிருக்கிறது ‘காந்தி கண்ணாடி’ படக்குழு.
ரணம் பட இயக்குனர் ஷெரீஃப் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கலக்கப் போவது யாரு’ பாலா நாயகனாக நடித்திருக்கிறார். ‘ஃபால்’, ‘நவம்பர் ஸ்டோரி’ ‘ட்ரிபிள்ஸ்’ வெப்சீரிஸ்களில் நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தி இதில் நாயகி. இவர்களோடு பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா இருவரும் ஜோடியாக இதில் தோன்றியிருக்கின்றனர். விவேக் – மெர்வின் இணை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறது.
சரி, ‘காந்தி கண்ணாடி’ தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளதா?

‘நெகிழ்ச்சி’ தருணங்கள்!
ஒரு ‘ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் கதிர் (கேபிஒய் பாலா). அவரது காதலி கீதா (நமீதா கிருஷ்ணமூர்த்தி) அதனை நிர்வகித்து வருகிறார். நண்பர்கள் சிலர் (மதன், ஜீவா சுப்பிரமணியன்) அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
பணம் மட்டுமே பிரதானம் என்றிருக்கும் கதிர், தங்களது பணியாளர் வராவிட்டால் அந்த வேலையைத் தானே செய்யக் கூடியவர். அதற்கான சம்பளத்தை எடுத்துக்கொள்ளக் கூடியவர்.
அப்படிப்பட்டவர் ‘அறுபதாம் கல்யாணம் செய்ய வேண்டும்’ என்று தன்னைத் தேடி வரும் காந்தியைக் (பாலாஜி சக்திவேல்) காண்கிறார். மனைவி கண்ணம்மாவின் (அர்ச்சனா) ஏக்கம் அது என்பதை உணர்ந்து, அதனைச் செயல்படுத்தத் துணிகிறார். தனது சம்பளம், சேமிப்பு ஆகியவற்றைத் தாண்டி ஒரு பெரிய தொகையில் அந்த நிகழ்வை நடத்த ஆசைப்படுகிறார்.
காந்தி ஒரு பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் வட்டாரத்தில் வாழ்ந்து வரும் அவர் சிறு வயதில் நடனமாடும் கண்ணம்மாவை விரும்புகிறார். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழ முடியாது என்பதை உணர்ந்து, இருவரும் சென்னைக்கு வந்துவிடுகின்றனர்.
அப்போது முதல் கண்ணம்மாவின் வார்த்தைகள் எதையும் காந்தி மீறியதில்லை. முதல்முறையாக, அவரது வார்த்தையை மீறித் தனது ஜமீன் குடும்பத்து சொத்துக்களை விற்றாவது இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென்று நினைக்கிறார். அதற்கேற்ப, அவர் கைவசம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது.
அதனைக் கொண்டு எளிதாகத் தனது கண்ணம்மாவின் ஆசையைத் தீர்க்கலாம் என்று நினைக்கிறார் காந்தி. அந்த நேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கிறது மத்திய அரசு.
அதன்பிறகு தனது கையில் இருக்கும் லட்சக்கணக்கான பணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கிறார் காந்தி. அவரிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று கதிரும் கைவிரிக்கிறார்.
அதன்பிறகு என்ன ஆனது? காந்திக்கு கதிர் உதவிகள் செய்தாரா என்று பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி.
ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும் கதிர், அங்கிருந்த காந்தி காணாமல் போனதை அறிந்ததும் துணுக்குறுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அதுவே ‘பிளாஷ்பேக்’குகள் நிறைந்த இப்படத்தைச் சலிப்பில்லாமல் பார்க்க வைக்கிறது.
அது மட்டுமல்லாமல், இந்தக் கதையில் சாதாரண ரசிகர்கள் நெகிழ்ச்சியுறும்விதமாகச் சில தருணங்கள் உள்ளன. பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் வங்கி வாசலில் மக்கள் காத்துக் கிடப்பது போன்றவை அப்படிப்பட்டவை.
கூடவே, ‘அதான் நீ இருக்கியே’, ‘தயிர்சாதம் சூப்பர்’ என்று பாலாஜி சக்திவேல் பேசுகிற வசனங்கள் தொடக்கத்தில் செயற்கைத்தனமாகவும், பிறகு நம்மை நெகிழவைக்கும் விதமாகவும் உள்ளன.
‘பொண்டாட்டி செஞ்சதை சாப்பிட்டு, அது நல்லாயிருக்குன்னு சொல்ல முடியலைன்னா, நீங்கள்லாம் என்ன …க்கு கல்யாணம் பண்றீங்க’ என்று அவர் வசனம் பேசுகிற இடத்தில் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது.
அந்த வகையில் முதல் பாதி இளைய தலைமுறைக்கானதாகவும் இரண்டாம் பாதி வயதானவர்களுக்காகவும் அமைந்திருப்பதே இப்படத்தின் சிறப்பு.

திருப்தி கிடைத்ததா?
இடைவேளை வரை ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டியவாறு நகர்கிறது திரைக்கதை. அதன்பிறகு அதில் நிறையவே தொய்வு ஏற்படுகிறது.
ஒருகட்டத்தில் ‘இவ்ளோ கஷ்டப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள்ள இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்தனுமா’ என்று எண்ணும் அளவுக்குக் காட்சிகள் ‘சோக கீதம்’ வாசிக்கின்றன.
’முனுக்கென்றால் கோபம் வந்துவிடும்’ என்பது போலச் சட்டென்று கண்ணீரை உதிர்க்கக்கூடியவர்கள் தேம்பி அழும் அளவுக்கு இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இருக்கின்றன.
அக்காட்சிகளில் தெரிகிறது இயக்குனர் ஷெரீஃபின் வித்தை.
இப்படத்தில் திருவிழா காட்சிகள் ஆங்காங்கே வருகின்றன. அவற்றில் மட்டும் கொஞ்சம் பிரமாண்டம் தெரிகிறது. மற்றபடி இது சுமார் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
முடிந்தவரை அந்த எண்ணம் வராத அளவுக்குக் காட்சியாக்கத்தைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் பாலாஜி கே ராஜா, படத்தொகுப்பாளர் சிவாநந்தீஸ்வரன், தயாரிப்பு வடிவமைப்பாளர் மணிமொழியான் ராமதுரை கூட்டணி.
ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ போன்ற அம்சங்கள் காட்சிகளைச் செறிவாக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. திரையில் கமர்ஷியல் சினிமாவுக்கான ‘ஜிகினாத்தனம்’ தென்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருப்பது அருமை.
அந்த வகையில் காட்சியாக்கத்தில் யதார்த்தம் நிறைந்திருக்கிறது.
அதனைத் தாண்டி, திரையில் தெரியும் பிம்பங்களின் வழியே வெளிப்படும் உணர்வுகளை நமக்குள் கடத்த தூண்டுகோலாய் இருக்கிறது விவேக் – மெர்வினின் பின்னணி இசை.
‘திமிருக்காரி’ பாடல் ‘காந்தி கண்ணாடி’யின் அடையாளமாக உள்ளது. இது போக ‘புல்லட் வண்டி’, ‘ஹிந்தி நஹி மாலும்’ பாடல்களும் கேட்டவுடன் பிடிக்கும்விதமாக உள்ளன.
அனைத்தையும் தாண்டி கிளைமேக்ஸ் பகுதியில் யுவன் சங்கர் ராஜா குரலில் ஒலிக்கிற ‘மெலடி மெட்டு’ நம் மனதைப் பிசையும்விதமாக உள்ளது.
அதுவரை இப்படத்துடன் ஒன்றாதவர்கள் கூட, அந்த இடத்தில் இக்கதையோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள் என்பதே நிஜம்.
‘காந்தி கண்ணாடி’ கதையில் முதன்மையாக வரும் நான்கு பாத்திரங்களின் பின்னணி ‘விலாவாரியாக’ விளக்கப்படவில்லை. போலவே, இதர பாத்திரங்களும் காட்சிகளில் வருகின்றன, போகின்றன. அவற்றின் பின்னணியைக் கொஞ்சம் விளக்கியிருந்தால் இன்னும் முழுமையானதாகத் திரையனுபவம் மாறியிருக்கும்.
ஆனால், அந்த குறையை மறக்கடிக்கும்விதமாக இதில் நடிகர்களின் ‘பெர்பார்மன்ஸ்’ உள்ளது.
அந்த வகையில் நாயகன் நாயகியை விட நம்மை வசீகரிப்பது பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா ஜோடி தான். அவர்களைப் புகழ்வது கடல் நீரில் பெருமழை பெய்வதைப் போலானது என்பதால் அடுத்திருப்பவர்களை உற்றுநோக்கலாம்.
பாலாவுக்கு இது நாயகனாக முதல் படம். அதனை உணர்ந்து சிரத்தை காண்பித்திருக்கிறார். தனது உடல் திரையில் கம்பீரமாகத் தெரிய மெனக்கெட்டிருப்பவர், முக பாவனைகளுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கலாம்.
அது மட்டுமல்லாமல், முதல் பாதியில் அவர் கருமியாகவும் சுயநலமானவராகவும் இருப்பது தெளிவாகச் சித்தரிக்கப்படாதது ஒரு குறையே.

மற்றபடி, தன்னைக் கொண்டாடுகிற ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அளவுக்கு இப்படத்தைத் தந்திருக்கிறார். அதிகமாக ‘காமெடி கவுண்டர்கள்’ அடிக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார்.
நாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி அழகாக இருக்கிறார். தனக்கு ‘ஸ்கோப்’ இருக்கிற இடங்களில் அழகாக நடித்திருக்கிறார். ஆனாலும், அது போதுமானதாக இல்லை.
ஒருவேளை நாயகன் நாயகி இருவருக்குமே அதிகளவில் ‘குளோஸ் அப்’ ஷாட்கள் வைக்காதது இயக்குனரின் குறையா என்றும் தெரியவில்லை.
இவர்கள் தவிர்த்து ஜீவா சுப்பிரமணியன், மதன் மற்றும் பண மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களாக நடித்தவர்கள் என்று சிலர் வந்து போயிருக்கின்றனர்.
அமுதவாணன், நிகிலா சங்கர் ஜோடிக்குத் திரைக்கதையில் உரிய இடம் தரப்படவில்லை.
பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் மனோஜ் பிரபு – ஆராத்யா ஜோடி சட்டென்று மனதில் பதிகிறது. அதே நேரத்தில், அவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதற்கான காரண காரியங்கள் இன்னும் தெளிவாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கலாம் என்றெண்ணுவதையும் தவிர்க்க முடியவில்லை.
இந்த படத்தின் முடிவு சில ரசிகர்களுக்குத் திருப்தியைத் தராமல் போகலாம்; இவ்வளவு சோக முடிவு தேவையா என்ற கேள்வியை எழுப்பலாம். ‘இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்’ என்றும் தோன்றலாம்.
அனைத்தையும் தாண்டி சில மனிதர்கள், அவர்களது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்கள் என்ற வகையில் நமக்கு இன்னொரு உலகத்தைக் காட்டுகிறது ‘காந்தி கண்ணாடி’. பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்குள் நுழைந்தால் இப்படம் ஓரளவுக்கு ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் தரக்கூடும்.