ரோஹித், விராட் மற்றும் அஸ்வின் ஆகியோரின் ஓய்வுக்குப் பின்னால் கம்பீர் இருப்பதாக முன்னாள் இந்திய அணி வீரர் மனோஜ் திவாரி வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பின்னர், அந்த பொறுப்பில் கவுதம் கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அவரது வருகையால் மூத்தவீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும், அவர்களை ஓய்வு அறிவிப்புக்கு தள்ளுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன.
அந்த வகையில் கம்பீர் பொறுப்பேற்றதற்கு பின்னர் சிறப்பான பார்மில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை வென்ற பின்னர் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
அதன்பின்னர் இங்கிலாந்து தொடருக்கு முன்னால் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களான ரோகித், கோலி இருவரும் டெஸ்ட் போட்டியில் இருந்து தீடீர் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் 2027 ஐசிசி உலகக்கோப்பை வரை விளையாடும் கனவுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்சைட் ஸ்போர்ட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, இந்திய அணி தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீரை கடுமையாக சாடியுள்ளார்.
அவர் கூறுகையில், “கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதிலிருந்து, நிறைய சர்ச்சைகள் எழுந்து வருகிறது. நடக்கும் பல விஷயங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
கம்பீர் உருவாக்கிய சூழலின் காரணமாகவே ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிவப்பு பந்து வடிவத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதேவேளையில் யாரும் எதிர்பாராத வகையில் சில வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
சீனியர் வீரர்களான அஸ்வின், ரோஹித், கோலி ஆகியோர் எவ்வளவு கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து விளையாடுவதற்கும் உறுதியாக உள்ளனர். ஆனால் இந்திய தேர்வுக்குழு தலைமை அதை ஏற்க மறுக்கிறது. எந்த அடிப்படையில் அவர்கள் பிட்டாக இல்லை என்பதை நீங்கள் உறுதிசெய்தீர்கள்?
ரோஹித் மற்றும் விராட் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் இந்திய கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் இந்திய கிரிக்கெட்டுக்கு முழுமையாக கொடுத்திருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அவர்கள் வெள்ளை பந்து வடிவத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ரோகித், கோலி இருவரும் தனது இமேஜைப் பாதிக்கிறார்கள் என்றாலோ, இனி அவர்கள் டிரஸ்ஸிங் ரூமில் தேவையில்லை என்று உணர்ந்தாலோ, அவர்கள் ஓய்வு பெறுவது பற்றி கம்பீர் ஓப்பனாக சொல்லிவிடலாம். 2027 ஐசிசி உலகக் கோப்பைக்கான அணியில் இந்த இருவரையும் கம்பீர் சேர்க்காவிட்டால் அது மிகவும் மோசமான முடிவாக இருக்கும்” என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.