இந்தியாவின் எடிசன் ஜி.டி நாயுடு பெயரில் கோவையின் புதிய அடையாளம். தமிழகத்தின் மிக நீண்ட உயர்மட்ட மேம்பாலம்.இந்தியாவின் 3ஆவது பெரிய தரைவழிப்பாலம்.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சிறப்பு வாய்ந்த மேம்பாலத்தை இன்று (அக்டோபர்9) திறந்து வைக்க உள்ளார்.
கோவை நகரின் தொழில் வளர்ச்சி, பிரபல கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, ஐடி துறையின் அபரிமிதமான வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த கோவையில் போக்குவரத்து நெரிசலால் அவ்வப்போது மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக கோவையின் பிரதான சாலை பகுதியான அவினாசி சாலையில் சுமார் 10 கி.மீ. தூரத்தை கடக்க 45 நிமிடங்கள் ஆகிறது. இதை கவனத்தில் கொண்டு அவினாசி சாலையில் கோல்டு விங்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீட்டர் தூரத்திற்கு 1,791கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020ல் தொடங்கியது.
மேம்பாலத்திற்காக சுமார் 4.90 ஏக்கர் நிலம் ரூ.228 கோடி மதிப்பில் கையப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் முறையாக பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகளும் உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலத்தில் 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அண்ணா சிலை ஏறுதளம் மற்றும் அதன் அளவுக்கு நடைமேடையுடன் கூடிய வடிகால் அமைப்பு தவிர அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் மேம்பாலம் போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. 45 நிமிடங்களில் கடந்த தூரத்தை இனி 10 நிமிடத்தில் கடந்து விடும் சூழல் உருவாகி உள்ளது.
10 வழித்தடங்களுடன் அமைக்கப்பட்ட இந்த பாலத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மக்களின் நீண்ட கால கனவான இந்த மேம்பாலம் திறக்கப்படுவது கோவையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.