சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.1963.63 கோடி நிதியை தமிழ்நாடு அரசு இன்று (செப்டம்பர் 3) ஒதுக்கியது.
சென்னை நகரப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டு தாம்பரம் அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறக்கப்பட்டது. அங்கிருந்து வெளியூருக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள், புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் வெளியூர் செல்வதற்கு சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக செல்ல பேருந்தை தவிர வேறு வசதி இல்லாததால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அதனை களையும் வகையில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பொதுமக்கள் எளிதாக செல்லும் வகையில் இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
அதே போன்று சென்னை விமான நிலையம் வரை உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் முதற்கட்ட பணிகளுக்காக சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 1,964 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீட்டிக்கப்படும் 15.46 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இவ்வழித்தடத்தில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர், வண்டலூர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளிட்ட 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் 1,816 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகையான ரூ.112 கோடியானது சாலைப் பணிகள், சர்வே எடுப்பு, புவியியல் தொழில்நுட்ப ஆய்வுகள், பேரி கார்டு அமைப்பது, மரங்கள் வெட்டி வேறு இடங்களில் நடுவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, சுற்றுசு சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.