காலையில் எழுகிறீர்கள், அலுவலகம் செல்கிறீர்கள், மீட்டிங்கில் பேசுகிறீர்கள், கேட்கப்பட்ட வேலைகளைக் கச்சிதமாக முடித்துக்கொடுக்கிறீர்கள். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் எதையுமே உணரவில்லை. ஏதோ ஒரு ரோபோ இயங்குவது போல, உணர்ச்சிகள் மரத்துப்போய் (Numb), இயந்திரத்தனமாகச் செயல்படுகிறீர்களா?
“எனக்கு என்னாச்சு? ஏன் எதிலும் ஆர்வமில்லை?” என்று உங்களைக் குழப்பும் இந்த நிலைக்குப் பெயர்தான் ‘ஃபங்ஷனல் ஃப்ரீஸ்’ (Functional Freeze). இதுதான் 2026-ன் புதிய ‘பர்ன்-அவுட்’ (New Burnout).
அது என்ன ‘ஃபங்ஷனல் ஃப்ரீஸ்’? பொதுவாக மன அழுத்தம் அதிகமானால் நாம் சோர்ந்து போய் முடங்கிவிடுவோம் (Burnout). ஆனால், இந்த ‘ஃபங்ஷனல் ஃப்ரீஸ்’ விசித்திரமானது.
- வெளியுலகத்திற்கு நீங்கள் சுறுசுறுப்பாக இயங்குவது போலத் தெரியும்.
- ஆனால், உங்கள் நரம்பு மண்டலம் (Nervous System) அதிகப்படியான அழுத்தத்தால் உறைந்து போயிருக்கும்.
- கார் இன்ஜின் ஓடிக்கொண்டே இருக்கும், ஆனால் கியர் மட்டும் நியூட்ரலில் இருப்பதால் வண்டி நகராது… அதுபோன்ற நிலைதான் இது.
அறிகுறிகள் என்ன?
- ஜம்பிங் (Procrastination): முக்கியமான வேலையைச் செய்யாமல், தேவையில்லாத ரீல்ஸ் பார்ப்பது அல்லது வீட்டைச் சுத்தம் செய்வது.
- உணர்வின்மை: சந்தோஷம், துக்கம் என எதையுமே பெரிதாக உணர மாட்டீர்கள். “எப்படியோ போகட்டும்” என்ற விரக்தி நிலை.
- தனிமை: நண்பர்களுடன் பேசத் தோன்றும், ஆனால் மெசேஜ் டைப் செய்யக்கூட விரல் வராது.
ஏன் இப்படி நடக்கிறது? நமது மூளை ஆபத்தை உணரும்போது ‘சண்டையிடு அல்லது தப்பி ஓடு’ (Fight or Flight) என்ற நிலைக்குச் செல்லும். அந்த ஆபத்து (அலுவலக பிரஷர் அல்லது குடும்பச் சிக்கல்) நீண்ட நாட்கள் தொடரும்போது, மூளை தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள “ஷட் டவுன்” (Shut down) நிலைக்குச் செல்கிறது. இதுவே ‘உறைநிலை’.
இதை உருக்குவது (Thawing) எப்படி? இந்த உறைந்த நிலையில் இருந்து வெளியேற, “இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்” என்று உங்களை நீங்களே வற்புறுத்தாதீர்கள். அது இன்னும் மோசமாக்கும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தச் சில எளிய வழிகள்:
- உடலை அசைத்தல் (Shake it off): நாய் அல்லது விலங்குகள் ஆபத்து நீங்கியதும் உடலை உதறுவதைப் பார்த்திருப்போம். அதேபோல, கைகால்களை நன்றாக உதறுங்கள். இது தேங்கியுள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை வெளியேற்றும்.
- குளிர்ந்த நீர்: முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளிப்பது (Cold Splash) அல்லது ஒரு ஐஸ் கட்டியைக் கையில் பிடிப்பது, உங்கள் நரம்புகளை விழிப்படையச் செய்யும்.
- ஒலி எழுப்புதல் (Humming): உங்களுக்குப் பிடித்த பாடலை மெல்லிய குரலில் முணுமுணுப்பது, ‘வாகஸ் நரம்பை’ (Vagus Nerve)த் தூண்டி மனதை லேசாக்கும்.
நீங்கள் சோம்பேறி அல்ல; உங்கள் பேட்டரி சார்ஜ் ஆக நேரம் கேட்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களை நீங்களே திட்டிக்கொள்வதை நிறுத்தினாலே, பாதி ‘ஃப்ரீஸ்’ உருகிவிடும்!
