“சிக்ஸ் பேக் முக்கியமா? இல்ல 80 வயசுல நிமிர்ந்து நடக்குறது முக்கியமா?” – இதுதான் இப்போ ட்ரெண்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

functional fitness vs aesthetic fitness health trend longevity workout tamil

சில வருடங்களுக்கு முன்பு வரை ஜிம்முக்குச் செல்பவர்களிடம், “ஏன் வொர்க் அவுட் பண்றீங்க?” என்று கேட்டால், “ஹீரோ மாதிரி பாடி பில்ட் பண்ணனும்”, “சிக்ஸ் பேக் வைக்கணும்” என்பதுதான் பதிலாக இருக்கும். ஆனால், இப்போது அந்தக் காலம் மாறிவிட்டது. கண்ணாடியில் அழகாகத் தெரிவதை விட, 80 வயதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் கையில் பையைத் தூக்கிக்கொண்டு நடக்க வேண்டும் என்பதே பலரின் தற்போதைய ஃபிட்னஸ் லட்சியமாக மாறியுள்ளது.

இதைத்தான் நிபுணர்கள் ‘ஃபங்ஷனல் ஃபிட்னஸ்’ (Functional Fitness) என்கிறார்கள். அழகை மையப்படுத்திய உடற்பயிற்சியிலிருந்து (Aesthetic Fitness), ஆரோக்கியத்தை மையப்படுத்திய உடற்பயிற்சிக்கு உலகம் மாறிக்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

அழகியல் ஃபிட்னஸ் (Aesthetic Fitness) என்றால் என்ன? இது முழுக்க முழுக்கத் தோற்றத்தைப் பற்றியது. பெரிய பைசெப்ஸ், அகலமான மார்பு எனச் தசைகளைத் தனித்தனியாகப் (Isolation Exercises) பயிற்றுவிப்பது. இது பார்க்க அழகாக இருக்கும். ஆனால், பெரிதாக இருக்கும் தசைகள், அன்றாட வேலைகளுக்கு உதவுமா என்றால் சந்தேகம் தான். ஜிம்மில் 100 கிலோ தூக்குபவரால், கீழே விழுந்த பேனாவை குனிந்து எடுக்க முடியாமல் இடுப்பைப் பிடித்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.

ஃபங்ஷனல் ஃபிட்னஸ் (Functional Fitness) – ஏன் இது அவசியம்? இது உங்கள் தசைகளை அன்றாட வேலைகளுக்குத் தயார்படுத்துவது.

ADVERTISEMENT
  • தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து எழுவது.
  • கடைக்குப் போய் கனமான பைகளைத் தூக்கிக்கொண்டு வருவது.
  • பேரக்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு மாடிப்படி ஏறுவது.

இவை அனைத்தும் சுலபமாகத் தோன்றலாம். ஆனால், 60 வயதைக் கடக்கும்போது, மூட்டு வலி, இடுப்பு வலி இல்லாமல் இவற்றைச் செய்ய முடிவதுதான் உண்மையான ஆரோக்கியம்.

என்ன மாற்றம் தேவை? டிரெட்மில்லில் மணிக்கணக்கில் ஓடுவதை விட, அல்லது பைசெப்ஸ் கர்ல்ஸ் (Bicep Curls) செய்வதை விட, கூட்டுப் பயிற்சிகள் (Compound Movements) இதில் முக்கியம்.

ADVERTISEMENT
  • Squats (தோப்புக்கரணம்): நாற்காலியில் அமர்ந்து எழுவதைப் போன்றது.
  • Deadlifts: கீழே இருக்கும் பொருளை முதுகை வளைக்காமல் தூக்குவது.
  • Farmers Walk: இரண்டு கைகளிலும் கனமான பொருட்களைத் தூக்கிக்கொண்டு நடப்பது.

முடிவு: “பார்த்தால் பயப்படும்படி உடல் இருப்பதை விட, பார்த்தால் பொறாமைப்படும்படி ஆரோக்கியம் இருப்பதே சிறந்தது.” வயதான காலத்தில் மருத்துவமனையில் படுத்திருக்காமல், உலகம் சுற்ற விரும்பினால், இன்றே உங்கள் பயிற்சியை ‘லுக்கிற்காக’ (Look) இல்லாமல் ‘வாழ்க்கைக்காக’ (Life) மாற்றுங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share