முழு சந்திர கிரகணம் நாளை (செப்டம்பர் 7) இரவு 9:57 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நேரத்தில், பூமியின் நிழல் விழுந்து நிலவு முழுமையாக மறைவது முழு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வு நாளை இரவு நிகழ உள்ளது. இது நாடு முழுவதும் அனைவராலும் பார்க்க முடியும்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல்
இயக்குநர் சண்முகசுந்தரம் கூறுகையில், “நாளை இரவு 8.58 மணிக்கு சந்திரன் முதலில் மங்கலான புறநிழல் பகுதிக்குள் நுழையும். அதன்பின்னர் இரவு 9.57 மணிக்கு பகுதி கிரகணம் துவங்கும். பின் 11.01 முதல் திங்கள் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்கள் முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அப்போது பூமியால் முழுமையாக மறைக்கப்பட்டு நிலவு இருண்ட கருநிழல் பகுதிக்குள் நுழையும். அதிகாலை 1.26 மணிக்கு, சந்திரன் கருநிழல் பகுதியில் இருந்து முழுமையாக வெளியேறும். அதிகாலை, 225க்கு புறநிழல் பகுதியை விட்டு வெளியேறும். இதனை நாம் வெற்றுக் கண்ணால் எளிதாக காணலாம்” என்றார்.

இந்த வானியல் நிகழ்வை காண சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், சந்திர கிரகணத்தை தொலைநோக்கி வழியாக பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்காக நாளை இரவு 9 மணி முதல் கிரஹணம் விடும் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த கிரஹணம், ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, தென்அமெரிக்காவின் கிழக்கு பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல், ஆர்க்டிக், அண்டார்டிகா பகுதிகளில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முழு சந்திரகிரகணம் 2028ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிகழ உள்ளது. அப்போது சென்னை உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் அதனை காண முடியாது. எனவே நாளை இரவு நடைபெற உள்ள இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் தாராளமாக கண்டுக்களிக்கலாம் என வானியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.