- மாயோன்
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அனைத்திந்திய அதிமுக AIADMK MGR Jayalalithaa Edappadi Palaniswami) தனது பொன்விழா ஆண்டைத் தாண்டி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருகிறது. எம்.ஜி.ஆர். எனும் மாபெரும் மக்கள் தலைவரால் 1972-ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தனது வரலாற்றில் பல்வேறு பிளவுகளையும், தலைமைக் கோஷ்டிப் பூசல்களையும் கடந்து வந்துள்ளது. சமீபத்தில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகளுக்கும் விசுவாசமாகப் பணியாற்றியவருமான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம், அதிமுகவின் நீண்டகால உட்கட்சிப் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. 1972-ல் தொடங்கிய இந்த வரலாற்றுப் பயணம், 2025 ஆம் ஆண்டு செங்கோட்டையன் நீக்கம் வரை எவ்வாறு தொடர்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

அதிமுகவின் தோற்றம்
1972 அக்டோபர் 10 அன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., கட்சிக் கணக்குகளில் ஊழல் இருப்பதாகக் குற்றம் சாட்டி, திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 17 அன்று மதுரையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (முதலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயரிடப்பட்டு, பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாற்றப்பட்டது) நிறுவினார். அண்ணாவின் கொள்கைகளை ஏற்று, சமூகநீதி, சமத்துவம் மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, குறுகிய காலத்திலேயே பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றது. எம்.ஜி.ஆர். தனது ஆட்சிக்காலத்தில் தனிப்பெரும் தலைவராகக் கோலோச்சினார்.

எம்ஜிஆர் காலத்து சலசலப்புகள்
எனினும், எம்ஜிஆர் உயிருடன் இருந்தபோதே, எஸ்.டி. சோமசுந்தரம் போன்றோர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி கட்சியை விட்டு விலகி “நமது கழகம்” என்ற புதிய கட்சியைத் தொடங்கிய சம்பவங்களும் அரங்கேறின. இவை, கட்சி வரலாற்றின் முதல் பிளவுகளுக்கான விதைகளை விதைத்தன.
1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் எஸ்டி சோமசுந்தரம். ‘நமது கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய அவர், 1987 இல் எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று மீண்டும் அ.தி.மு.க.வுடன் இணைந்தார். இதேபோல், தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்த நாஞ்சில் கி. மனோகரன், எட்டு ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். அவருடைய தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதே இந்த முடிவுக்குக் காரணம் என்று அப்போது பேசப்பட்டது.

.தி.மு.க.வில் எம்.ஜி.ஆரைப் போலவே திரைத்துறையிலிருந்து வந்து அரசியலில் மிக விரைவாக ஜெயலலிதா வளர்ந்தது, மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரது அதிரடி வளர்ச்சி பலருக்குப் பிடிக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு, அன்றைய விவசாயத் துறை அமைச்சர் கே. காளிமுத்து, ஜெயலலிதாவை வெளிப்படையாக விமர்சித்தார். திராவிட ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், தன்னை ராபின் மேன் வழக்கில் சிக்க வைக்க மத்திய அரசுடன் ஜெயலலிதா சதி செய்வதாகவும் காளிமுத்து குற்றம் சாட்டினார். இதை ஜெயலலிதா மறுத்தார்.

இந்த உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, அக்டோபர் 28, 1985 அன்று எம்.ஜி.ஆர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது, கட்சிக்குள் நிலவிய தீவிரமான சூழலை எடுத்துக்காட்டியது. இந்த சம்பவம், எம்.ஜி.ஆர். காலத்திலேயே கட்சிக்குள் ஏற்பட்ட முக்கிய சலசலப்புகளில் ஒன்றாகும்.

எம்.ஜி.ஆருக்குப் பிந்தைய பிளவுகளும் ஜெயலலிதாவின் எழுச்சியும் (1987-1989)
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, 1987-ல் அதிமுக வரலாற்றில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் ஒரு பிரிவிற்கும், ஜெ. ஜெயலலிதா மற்றொரு பிரிவிற்கும் தலைமை தாங்கினர். ஜானகி இராமச்சந்திரன் 24 நாட்கள் முதலமைச்சராகப் பதவி வகித்தாலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. 1989 சட்டமன்றத் தேர்தலில், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட்டன. ஜெயலலிதாவின் அணி 27 இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியானது, ஜானகி அணி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. இதன் தொடர்ச்சியாக, ஜானகி அரசியலில் இருந்து விலக, ஜெயலலிதா 1989 பிப்ரவரியில் அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியை வெற்றிகரமாக ஒன்றிணைத்தார். இந்த சவாலான காலகட்டத்தில் ஜெயலலிதாவின் தலைமை, கட்சியை ஒருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா காலத்து உட்கட்சி மோதல்கள் (1989-2016)
ஜெயலலிதா தலைமையில் அதிமுக தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி அமைத்தது. அவரது இரும்புப் பிடியிலான தலைமை, கட்சியை ஒழுங்குபடுத்தியதுடன், பலம் வாய்ந்த சக்தியாகவும் மாற்றியது. எனினும், அவரது காலத்திலும் சில உட்கட்சிப் பூசல்கள் ஏற்பட்டன. 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த பிறகு, ஜெயலலிதாவுக்கும் சில மூத்த தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

அறிஞர் அண்ணாவால் “நாவலர்” என்று அழைக்கப்பட்ட நெடுஞ்செழியன், க. இராசாராம், செ. அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய ‘நால்வர் அணி’, ஜெயலலிதாவுக்கு எதிராகப் பல கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியது.
ஆர்.எம். வீரப்பன், 1995 இல் தனது சத்யா மூவிஸ் தயாரித்த ‘பாட்ஷா’ திரைப்படத்தின் வெள்ளிவிழாவில் நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்த பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிகழ்வு எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிந்தையது என்றாலும், ஜெயலலிதாவின் வளர்ச்சியால் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் மத்தியில் உருவான சலசலப்புகளையும், கட்சிக்குள் அதிகாரப் போட்டி எவ்வாறு உருவானது என்பதையும் இது மறைமுகமாகப் பறைசாற்றியது.
முன்னாள் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர் தலைமையில் ஒரு குழு தனிப்பொதுக்குழுவை கூட்டி, உண்மையான அதிமுக தங்கள் அணியே என அறிவித்த சம்பவங்களும் நடந்தன. ஆனால், ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்குக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்தப் பிளவுகள் வலுவற்றுப் போயின.

ஜெயலலிதாவுக்குப் பிந்தைய தலைமைப் போராட்டம் (2016-2025)
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2016 டிசம்பரில் அதிமுக மீண்டும் ஒரு கடும் பிளவைச் சந்தித்தது. ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதே நேரத்தில், வி.கே. சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சசிகலா முதலமைச்சராக முயன்றபோது, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றார். அவர் சிறை செல்லும்முன் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராகவும், டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்தார். இது ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டியையும், பின்னர் கட்சி பிளவையும் ஏற்படுத்தியது.

2017 ஆகஸ்ட் 21 அன்று ஓ. பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்தன. ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி கே. பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இரட்டைத் தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஒற்றைத் தலைமைக்கான கோரிக்கை வலுத்தது.

ஓபிஎஸ் வெளியேற்றம்
2022 ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாக முடிவெடுத்து, ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியது. அன்று முதல் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். அவர் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1.5 கோடியிலிருந்து 2 கோடிக்கும் மேல் உயர்த்தியுள்ளார்.

கலகக் குரல் கே.ஏ.செங்கோட்டையன்
கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் பயணத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியப் பங்காற்றிய மூத்த தலைவர். 1972-ல் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கியபோதே அவருடன் இணைந்து, கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தினார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவரின் நம்பிக்கைக்குரியவராகவும், விசுவாசமிக்கவராகவும் இருந்தார். 1977 முதல் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் 8 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். போக்குவரத்து, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், பள்ளிக்கல்வி உள்ளிட்ட பல முக்கியத் துறைகளின் அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றினார். “சூப்பர் சீனியர்” தலைவர் என கட்சியினரால் மதிக்கப்பட்டார்.

எனினும், 2016-க்குப் பிந்தைய அதிமுகவின் உட்கட்சி அரசியல் குழப்பங்களில் செங்கோட்டையனின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் அமைதி காத்த அவர், பின்னர் கட்சித் தலைமையின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினார். ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரின் அணிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற தனது பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதினார். அத்திக்கடவு-அவிநாசி திட்டம், ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கோவை பிரச்சாரங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளை அவர் திட்டமிட்டு தவிர்த்தது, கட்சித் தலைமையுடனான அவரது விரிசலை வெளிப்படுத்தியது. மத்திய அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை டெல்லியில் அவர் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அக்டோபர் 2025: செங்கோட்டையன் நீக்கம்
சமீபத்தில், அக்டோபர் 30, 2025 அன்று, கே.ஏ. செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சந்தித்தது, அதிமுக தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, நவம்பர் 1, 2025 அன்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கே.ஏ. செங்கோட்டையனை, “கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகவும்” கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
