ADVERTISEMENT

‘தராதரம் அவ்வளவுதான்’… ‘ஒரு நாள் திரைப்படம்’… : கே.என்.நேரு முதல் தமிழிசை வரை விஜய்க்கு பதிலடி!

Published On:

| By Kavi

தவெக மாநாட்டில் விஜய் பேசியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று (ஆகஸ்ட் 21) மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்த விஜய், ரேம்ப் வாக் சென்று தொண்டர்களை சந்தித்துவிட்டு, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

ADVERTISEMENT

அதன் பின் சுமார் 35 நிமிடங்கள் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். இதில் தவெகவுக்கு அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என இரு கட்சிகளை மட்டுமின்றி அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்களையும் மறைமுகமாக விமர்சித்தார்.

முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று கூறி திமுகவை கடுமையாக சாடியிருந்தார். தேமுதிக முன்னாள் பொதுச்செயலாளர் விஜயகாந்த் என் அண்ணன் என்று உருக்குமாக பேசியிருந்தார் விஜய்.

ADVERTISEMENT

இந்தநிலையில், அந்தந்த கட்சியினரும் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குறித்து கூறுகையில், ”நீங்கள் நடத்தும் ஆட்சியில் நேர்மை நியாயம் இருக்கா, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா, சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா , இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா… சொல்லுங்க மை டியர் அங்கிள்… வாட் இஸ் திஸ் அங்கிள்… இட்ஸ் வெரி ராங் அங்கிள்’ என்று தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

ஒரு மாநில முதல்வரை விஜய் இப்படி பேசியது திமுகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதுதொடர்பாக மூத்த அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”விஜய்யின் தராதரம் அவ்வளவுதான்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் பெரிய கட்சி தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார். நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு அவரை அப்படி சொல்வது தரம் தாழ்ந்த செயல். மக்கள் நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் நல்ல பதில் சொல்வோம். அதில் ஒன்றும் மாற்றமில்லை.

10 பேர், 50 பேர் கூடிவிட்டார்கள் என்பதற்காக ஒரு மாநில முதல்வரை எப்படி வேண்டுமானாலும் பேசலாமா? அது சரியா?” என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மாநாட்டில் விஜய் அதிமுக பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், ‘எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி இன்று யார் கையில் இருக்கிறது. பொருந்தா கூட்டணி வைத்துள்ளதால் அந்த கட்சியில் தொண்டர்களே வேதனையில் உள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சிலர் புதிய அரசியல் கட்சியை தொடங்கிவிட்டு இரண்டு மாநாடு நடத்தியிருக்கிறார்கள். அந்த கட்சி ஒன்றரை வயது குழந்தை. இன்னும் ஒரு சட்டமன்ற தேர்தலை கூட சந்திக்கவில்லை. அப்படி இருக்கிறவர்கள் ஆசைப்படலாம், தவறல்ல. எங்கேயும் போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு கனவு காணலாம். ஆனால் அது நனவாகாது. கனவு காண்பதற்கு உழைப்பு வேண்டும். எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது.

டயலாக் பேசினால் போதுமா? ஏதோ மக்கள் செல்வாக்கை பெற்றது போலவும், அவர்கள் வந்துதான் இந்த நாட்டை காப்பாற்றுவது போலவும் சில அடுக்கு மொழியால் பேசி வருகிறார். அவர் யாரென்று தெரியும். உழைப்பே கொடுக்காமல் வெற்றி பெற வேண்டுமென்று நினைக்கிறார். திமுகவை வீழ்த்த சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுகதான்” என்று பதிலடி கொடுத்தார். முன்னதாக சட்டமன்றத் தேர்தலில் டிவிகேவுக்கும், டிஎம்கேவுக்கும் தான் பேட்டி என்று விஜய் கூறியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியுள்ளார்.

மாநாட்டு தொடக்க உரையிலேயே விஜய், “பசியிலேயே இருந்தாலும் சிங்கம் கெட்டுப்போன உணவைத் தொடக்கூட செய்யாது. காட்டில் எல்லை வகுத்து காட்டையே தனது கட்டுப்பாட்டில் சிங்கம் வைத்திருக்கும். சிங்கம் அவ்வளவு சீக்கிரம் யாரையும் தொடாது, தொட்டால் விடாது” என்று தெரிவித்திருந்தார். விஜய் இவ்வாறு சொன்னது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைதான் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர்.

இந்நிலையில் விஜய் மாநாடு குறித்து சென்னை விமான நிலையத்தில் சீமான் கூறுகையில், “அண்ணா தோற்றுவித்த கட்சியை தான் தோற்கடிகக் வேண்டும் என்று சொல்கிறார். 60ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியின் ஆட்சியும், அண்ணா தொடங்கிய கட்சியின் ஆட்சியும் தானே 60 ஆண்டுகளாக நடக்கிறது. அவர்களது புகைப்படத்தைதானே போட்டிருக்கிறார். அடுத்தது ஜெயலலிதா போட்டோவையும், எடப்பாடி போட்டோவையும் வைப்பாரா?.

அவருக்கு பின்னால் திரண்டிருக்கிற ரசிகர்கள் அவர்களுக்கு நண்பா நண்பிகளாக இருக்கலாம். எனக்கு தம்பி, தங்கைகளாக இருக்கிறார்கள்” என பதிலளித்துள்ளார்.

நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. மக்கள் ஆதரவு எனும் படைக்கலத்துடன் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்ற விஜய்யின் பேச்சு குறித்து செய்தியாளார்கள் எழுப்பிய கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் கூறுகையில், “என் பேரை சொல்லிருக்கிறாரா? வேறு யார் பேரையாவது சொல்லியிருக்கிறாரா? . இதில் என்ன கருத்து சொல்வது. தவறுங்க… அவர் எனக்கு தம்பி” என கூறினார்.

என் அண்ணன் விஜயகாந்த் அவரை மறக்க முடியுமா என்று விஜய் கூறியதற்கு கடலூரில் பதிலளித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தம்பி என்கிற எண்ணத்தில் தான் பேசியிருக்கிறார். அவர் எப்போது விஜயகாந்தை அண்ணன் என்று சொன்னாரோ அவர் தம்பி தான்.

விஜய் எங்க வீட்டு பையன் தான் என நான் எப்போதுமே சொல்லி வருகிறேன். பல்வேறு படங்களில் விஜயகாந்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் விஜய் தான் நடித்திருப்பார். எங்க வீட்டு பக்கத்தில் தான் அவருடைய வீடு.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகாந்துக்குமான உறவு 17 திரைப்படங்களில் இருந்தது. இன்றைக்கு நேற்று வந்த உறவல்ல. விஜய்யின் படத்திற்கு கூட விஜயகாந்தின் ஏஐ பயன்படுத்தினார்கள், தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நாங்கள் சொன்னோம்.

எம்.ஜி.ஆர் தான் எனது மானசீக குரு என்று விஜயகாந்த் சொல்வார். அதேபோல விஜய் சொல்லட்டும். இப்போது அண்ணன் என்று சொல்லியிருக்கிறார். அதைப்பற்றி பரிசீலிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது… அதுபோல தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவார்கள் என்று விஜய் பேசியது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஆளுநரும் பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், “தாமரை தண்ணீரில் தான் வளர்கிறது. எங்களுடைய சின்னம் தாமரைதான் என்று அவருக்கு தெரிகிறதா? யாரோ எழுதி கொடுத்திருக்கிறார்கள்… நன்றாக வசனம் பேசியிருக்கிறார். தவெக மாநாட்டை ஒரேயொரு நாள் ஓடிய திரைப்படமாக பார்க்கிறேன். பாஜகவை விமர்சித்து விளம்பரம் தேடுகிறார் விஜய். நடக்கப்போவது சட்டமன்றத் தேர்தல், பாஜகவை இழுத்து பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அவர் பேசியதால் பாஜக குறைந்துவிடாது. நாங்கள் வளர்ந்துகொண்டே இருப்போம்” என்று பதிலளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share