மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான சசிகலா 9ஆண்டுகால மவுனத்தைக் கலைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேற்று பிப்ரவரி 24-ந் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் , புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த சசிகலா கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
கமுதி பொதுக் கூட்டத்தில் அரசியலில் நடந்த பல்வேறு சம்பவங்களை வெளிப்படையாக பகிரங்கப்படுத்தினார் சசிகலா.
சசிகலாவின் பேச்சு முழு விவரம்: இன்னைக்கு அம்மாவோட (ஜெயலலிதா) பிறந்தநாள், 78-ஆம் ஆண்டு பிறந்தநாள். இந்த நேரத்துல நான் நிறைய விஷயங்களை உங்களுக்கெல்லாம் சொல்லணும்னுதான் இங்க வந்திருக்கிறேன். ஏன்னா அம்மா மறைவிற்குப் பிறகு நம்ம கட்சியில (அதிமுக) எவ்வளவோ பிரச்சனைகள், என்னென்னமோ நடந்துச்சு.புரட்சித்தலைவர் (எம்ஜிஆர்) பற்றியும் நான் சில விஷயங்களைச் சொல்லணும்.
எம்ஜிஆரும் அண்ணாவும்
புரட்சித்தலைவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது, தன்னை திமுகவில் அண்ணாவின் மேல் கொண்ட பற்றால் இணைத்துக் கொண்டார். திமுக வளர்ந்ததற்கே புரட்சித்தலைவர் தான் காரணம்ங்கிறது அண்ணாவுக்கு நல்லாவே தெரியும். அதனால அண்ணா, புரட்சித்தலைவரைத் தன்னுடைய ‘இதயக்கனி’ அப்படின்னு சொல்லி பாராட்டி சீராட்டி வச்சிருந்தாரு.
எம்ஜிஆர்- கலைஞர்
அண்ணாவுக்கு உடல்நிலை சரியில்லாமப் போய் அவர் மறைந்த பிறகு, திமுகவுல யாரு தலைமையேற்கிறது, யாரு முதலமைச்சராகுறது அப்படிங்கிற ஒரு நிலை வந்தப்போ, புரட்சித்தலைவரும் அண்ணா இருக்கும்போதே திமுகவுல சட்டமன்றத்துக்கு நின்னு எம்.எல்.ஏ-வா இருக்காரு.. அதனால புரட்சித்தலைவர் என்ன சொல்றாரு, ‘கலைஞர் (கருணாநிதி) இருக்கட்டும்’, அவருக்கு எல்லாருடைய சப்போர்ட்டும் தேவைன்னு புரட்சித்தலைவரே எல்லார்கிட்டயும் போய் பேசி, புரட்சித்தலைவர் தான் கருணாநிதியை முதலமைச்சராக்கினாரு.
அதிமுக உருவானது எப்படி?
ஆனா என்ன ஆச்சு? கொஞ்ச நாள் பார்த்தாரு கருணாநிதி, முதலமைச்சர் சீட் கிடைச்சுட்டு, அதுக்கப்புறம் அவர் என்ன பண்றாரு வழக்கம்போல தான், புரட்சித்தலைவரை எப்படியாவது இந்த கட்சியை விட்டு வெளியில நைத்திரணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டாரு. அதனால அவரை கட்சியை விட்டு நீக்குறாரு. புரட்சித்தலைவர் வெளியில வந்து எல்லார்கிட்டயும் சொல்றாரு ‘அப்பா அவர் என்னை நீக்கிட்டாரு, நான் சினிமாவில் நடிச்சுக்கிட்டு இருக்கேன், நீங்களெல்லாம் வந்து ஒரு முடிவு பண்ணி நல்லபடியா செயல்படுங்க’ங்கிறாரு.
புரட்சித்தலைவரோட வந்தவங்க எல்லாம் என்ன சொல்றாங்க, அன்னைக்கு திமுகவுல இருக்கிற தொண்டர்களும் யாருன்னு பார்த்தீங்கன்னா புரட்சித்தலைவருடைய மன்றத்து ஆட்கள் தான், அதான் திமுக அப்போ. அப்போ என்ன சொல்றாரு, மத்தவங்க யாரும் கேட்கல, ‘இல்ல நீங்க வந்தாகணும், நீங்க ஒரு கட்சி தொடங்கி நீங்க நடத்தியாகணும்’ங்கிறாங்க.
புரட்சித்தலைவர் வந்து அந்த மாதிரி ஒரு எண்ணமே அவர்கிட்ட இல்ல, அதனால என்ன ஆகுது புரட்சித்தலைவர் கிட்ட கையில கட்சியோ ஒன்னும் இல்ல.
அப்போ அனகாபுத்தூர் ராமலிங்கம்னு ஒருத்தர், அவர் தலைவர் மேல ரொம்ப பாசம் உள்ளவர், அவர் ஒரு கட்சியை (அண்ணா திமுக) ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்காரு. தலைவர்ட்ட அதை கொண்டு வந்து கொடுத்து நீங்க இந்த கட்சியை எடுத்து நடத்துங்கங்கிறாரு. அந்த கட்சி வந்து தலைவர் ஆரம்பிச்சது இல்ல. அனகாபுத்தூர் ராமலிங்கம்ங்கிறவரு ஆரம்பிச்ச கட்சி அது. அதுக்கப்புறம் தலைவர் எடுத்து அதை நடத்துறாரு.
முதல்ல திண்டுக்கல் தேர்தல் வருது நாடாளுமன்றத்துக்கு. அதுல மாயத்தேவரை நிறுத்தி, அப்போ இரட்டை இலை சின்னம் சுயேச்சை சின்னம். அதை எடுத்து நின்னு வெற்றி பெறுறாங்க. முதல் வெற்றி.
அதிமுகவில் ஜெயலலிதா
அதுக்கப்புறம் தலைவர் வந்து சட்டமன்ற தேர்தல் இதுல எல்லாம் நின்னு வெற்றி பெற்று மூணு முறை தலைவர் வந்து ஆட்சி பண்றாரு. அதுல ஒரு முறை பாத்தீங்கன்னா உடம்பு சரியில்லாம அமெரிக்கால இருந்தாரு. அப்ப எல்லாம் அம்மாவை அரசியலுக்கு கொண்டு வந்துட்டாரு. அம்மா கொள்கை பரப்பு செயலாளரா இருக்காங்க. அந்த சமயத்துல பிரச்சாரம் எல்லாம் அம்மா போய் பண்ணுறாங்க. தலைவர் வந்து உயிரோட வருவாரு. உங்களையெல்லாம் வந்து பார்ப்பாரு. நான் சொல்றதை நம்பி ஓட்டு போடுங்கங்கிறாங்க.
ஏன் அந்த வார்த்தை சொன்னாங்கன்னா கருணாநிதி ஒரு பக்கம் பிரச்சாரத்துல என்ன சொல்றாரு? தலைவர் இறந்து போயிட்டாரு. அவரை ஐஸ்பெட்டியில வச்சிருக்காங்க. அதனால வந்து இந்த அம்மா பொய் சொல்லுது அப்படின்னு சொல்லி அவரு ஒரு பக்கம் மக்களை திசை திருப்புனாரு. ஆனா அதெல்லாம் நடக்கல. நல்லபடியா தலைவர் வெற்றி பெற்று வந்து பதவி ஏத்துக்கிட்டாரு. இப்படித்தான் அண்ணா திமுகவுடைய வரலாறு.
எம்ஜிஆர் மறைவு
அதுக்கப்புறம் என்ன ஆகுது? 87-ல தலைவருக்கு வந்து உடல்நிலை சரியில்லாம போய் தலைவர் மறையுறாரு டிசம்பர் மாசம் 24-ஆம் தேதி. அந்த நேரத்துல அம்மா வந்து கொள்கை பரப்பு செயலாளரா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் போறாங்க. போய் கழக தொண்டர்களோட அம்மா வந்து பயணிக்கிறாங்க.
பார்ட்டி ஆபீஸ்ல உட்கார்ந்துட்டு அம்மா வந்து பேருக்கு பக்கத்துல வெறும் கோபாசான்னு போட்டுக்கிட்டு உட்காரல. வேலை செஞ்சாங்க. கட்சி தொண்டர்களுடைய குறைகளையெல்லாம் கேட்டு தலைவர் இருக்கும்போது அவருக்கு இன்னன்ன பிரச்சனை இந்த குடும்பத்துல, இவங்க வீட்டுக்கு வேலை வாய்ப்பு கேக்குறாங்க அப்படிங்கறதெல்லாம் சொல்லி அவங்களுக்கு வந்து நல்ல விஷயங்களை எல்லாம் செஞ்சு கொடுத்தாங்க. அதனால அந்த தொண்டர்களுக்கு அம்மா மேல ஒரு தனிப் பிரியம்.
இது மந்திரியார்களுக்குத் தெரியல. ஏன்னா அவங்க நம்ம கட்சி ஆபீஸ் பக்கமே வரமாட்டாங்க யாரும். ஏன்னா அம்மாவை அப்பப்ப போய் பாக்குறப்ப நான் போய் அம்மாவை அழைக்கலாம் போயிருக்கேன். அதனால எனக்கு நல்லாவே தெரியும்.
எம்ஜிஆர் மறைவின் போது..
அதுக்கப்புறம் தலைவர் மறைஞ்ச உடனே என்ன ஆகுது? நம்ம மந்திரிங்க எஸ்.டி.சோமசுந்தரம், இன்னொரு மந்திரி ஆர்.எம்.வீரப்பன் அவங்கதான் சீனியர். ரெண்டு பேருக்கும் என்ன ஆசை யாராவது ஒருத்தங்க அவங்கவங்க தனியா நினைக்குறாங்க நம்ம முதலமைச்சர் ஆயிடனும் அப்படின்னு சொல்லி அம்மாவை தவிர்க்கிறாங்க. தலைவர் மறைஞ்சு அங்க வந்து வீட்டுக் காரியெல்லாம் செய்யுறாங்க ராஜாஜி ஹால்ல. ஆனா அம்மாவுக்கு இடம் அனுமதி இல்ல அங்க. நாங்க தான் கூட நிக்கிறோம்.
ராணுவ வண்டியில கொண்டு போய் வச்சதும் ராணுவத்தோட கண்ட்ரோல்ல வந்துரும். அப்ப நீங்க வண்டியில வந்து மலர்வளையம் வைங்கன்னு சொல்றாங்க. அதே மாதிரி தான் நாங்க அதுக்கப்புறம் தான் போய் தலைவருக்கு அம்மா வைக்கிறாங்க. அப்ப ஆர்.எம்.வீரப்பன் மந்திரியா இருந்தவருக்கு துணையா இருக்குற ரெண்டு மூணு கட்சி ஆட்கள் போய் அம்மாவை இழுத்துத் தள்ளி விடுறாங்க. கீழ உட்கார்ந்து நான் தான் பிடிக்கிறேன் அம்மாவை. இதெல்லாம் நடந்துச்சு.
ஜெ.வுக்கு அவமானம்.. என் சபதம்
அதனால அதுக்குப் பிறகு என்ன ஆகுது? அந்த அவங்க எல்லார் மத்தியிலயும் அம்மாவைப் பிடிச்சு தள்ளி விட்டதும் நான் மனசுக்குள்ளேயே சின்னப் பொண்ணு ஒரு சபதம் எடுக்கிறேன்.
அந்த சபதம் என்னான்னா, “நீங்க இப்படியெல்லாம் பண்ணிட்டீங்க அம்மாவை. இதே அம்மாவை இந்த அண்ணா திமுகவுல முதலமைச்சர் ஆக்கிக் காட்டுவேன். நீங்கெல்லாம் வரிசையா வந்து வீட்டுல நிப்பீங்க. அந்த கால வெகுதூரத்துல இல்லை அப்படிங்கறத மனசுக்குள்ள நெனச்சேன் அப்ப.
போலீஸ் கமிஷனர் வந்து சொல்றாரு, ‘இதுக்கு மேல இங்க அம்மாவை நிக்க வச்சுக்கிட்டு இருக்காதீங்க, அம்மா உயிருக்கு ஆபத்து. அம்மாவை உடனே வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்க’ன்றாரு. நாங்கெல்லாம் என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க கூட இருந்தாங்க. கட்சித் தொண்டர்கள் எல்லாம் இருந்தாங்க, அவங்களையெல்லாம் சிப்பையே அனுமதிக்கல. அவங்கெல்லாம் வெகுதூரத்துல நிக்கிறாங்க. நாங்க அம்மாவை அழைச்சிட்டு போயஸ் கார்டன் வீட்டுக்கு கொண்டு போனோம்.
அரசியலை விட்டு விலக ஜெயலலிதா முடிவு
அதுக்கப்புறம் அம்மா சொன்னாங்க, ‘இது வேண்டாம், இந்த அரசியல் எனக்கு வேண்டாம். இவங்கெல்லாம் வந்து என்னை கேவலப்படுத்துறாங்க. நான் தலைவர் வந்து உடல்நிலை சரியில்லை, நீ கூட வந்து உதவியா இருன்னு சொன்னாரு, அதுக்காகத்தான் நான் வந்து இருந்தேன். அதனால இது வேணாம்’ட்டாங்க.
அப்ப நான் சொன்னேன், ‘உங்களை சீண்டிட்டாங்க. அதனால இவங்களை நம்ம சும்மா விடக்கூடாது. ஒரு முறையாவது நம்ம வந்து காட்டணும்’ அப்படின்னு சொல்லி, பிடிவாதம் பண்ணி இருக்க வைசோம்..
பிளவுபட்ட அதிமுக
அதுக்கப்புறம் அம்மா தேர்தல் களத்துக்கு வராங்க. அப்ப நம்ம கட்சி இப்ப இருக்கிற மாதிரிதான் ரெண்டா பிரியுது. பிரிஞ்சு சேவல், புறான்னு தனித்தனியா நின்னோம். சேவல் 27 தொகுதியில வெற்றி பெற்று, முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரா அம்மா ஆகுறாங்க நம்ம நாட்டுல.
அதன்பிறகுதான் திரும்ப தேர்தல் வருது, எதிர்கொள்றோம். வெற்றி பெற்று 91-ல முதலமைச்சர் ஆகுறாங்க. அது மாதிரி அம்மா கிட்டத்தட்ட 15 வருஷம் தமிழ்நாட்டு மக்களுக்காக முதலமைச்சர் ஆகி எண்ணற்ற திட்டங்களையெல்லாம் செஞ்சிருக்காங்க. அதுல கூட இருந்து எல்லா நல்லது கெட்டதையும் பார்த்த ஆளு நான்.
ஜெயலலிதாவை கொலை செய்தேனா?
அதனால இப்ப நான் என்ன சொல்ல வர்றேன்னா, அதே போல ஒரு நிகழ்வுதான் இப்ப நடந்துகிட்டு இருக்கு கட்சியில. அப்ப அம்மாவுக்கு உடம்பு செல்லாம போகுது 2016 தேர்தல் முடிஞ்சு. 72 நாள் ஆஸ்பத்திரில இருக்கும். நான் வீட்டுக்கெல்லாம் அழைச்சிட்டு வர்றதுக்கு நல்ல நாள் பார்த்து வைச்சிருக்கோம். திடீர்னு யாருமே எதிர்பார்க்காத ஹார்ட் அட்டாக் மாதிரி வந்துருச்சு. அதுலதான் அம்மாவுக்கு இப்படியானது. ஆனா வெளியில என்னென்ன கதை கட்டி விட்டாங்க நம்ம எதிரியெல்லாம்? ‘இந்த அம்மாதான் கொன்னுட்டாங்க’ அப்படின்னாங்க. இதெல்லாம் வந்து யாராவது நம்புவாங்களா? நீ வந்து அரசியலுக்காக நீங்க செஞ்சீங்கன்னா அது எப்படி உண்மையாகும்? அது எல்லாத்தையும் நம்ம பார்த்தோம்.
ஜெயலலிதா மறைந்த போது..
திரும்ப என்ன ஆகுது, அம்மா மறைஞ்சதும் அன்னைக்கு ராத்திரி நம்ம மந்திரி எல்லாம் வராங்க. வந்து என்ன சொல்றாங்க, ‘சின்னம்மா, நீங்க முதலமைச்சர் ஆயிடுங்க’. அப்படிதான் எல்லாரும் வந்து சொன்னது, எல்லா எம்.எல்.ஏ-க்களும் வந்து சொன்னது. இது எல்லாமே அந்த தனியார் ஆஸ்பத்திரியில நடக்குது.
அரசியலுக்கே வர மறுத்தேன்
நான் என்ன தெரியுமா சொல்றேன்? நான் வந்து ஒரு அரசியல்வாதிட்ட பழகுன மாதிரி நான் பழகவே இல்லை. என்னோட சொந்த உடன்பிறந்த அக்காவா நினைச்சுட்டேன். அதனால நான் என்ன சொல்றேன், அக்கா இறந்து இப்படி இருக்கு, இப்ப போய் நான் போய் முதலமைச்சரா நான் பதவி ஏற்க முடியாது. அவங்களுக்கு செய்ய வேண்டிய காரியத்தை அவங்க முறைப்படி நான் வீட்டுல செய்ய வேண்டியது இருக்கு. அதனால வேணாம், முன்ன இருந்த மாதிரியே பன்னீர்செல்வம் இருக்கட்டும், மத்த அமைச்சர்கள்ளாம் அப்படியே இருக்கட்டும். இடையில செங்கோட்டையனை எடுத்திருந்தாங்க. அதனால அத மட்டும் சொன்னேன். செங்கோட்டையனை நம்ம சேர்த்துக்கணும், அப்படிலாம் சொல்லிட்டு இருந்தேன். இப்ப இருக்குறவங்க முதல்ல பதவியேத்துருங்கன்னு சொல்லி, நைட்டே போய், ராத்திரியே போய் பதவியேக்குறாங்க. இதான் நடந்துச்சு.
ஓபிஎஸ்-க்கு எதிராக திடீர் போர்க்கொடி
ஒரு வாரம், பத்து நாள் ஆச்சு. பன்னீர்செல்வத்து மேல ஒன்னும் குறை இல்ல. அவரு ஒழுங்காதான் அவரு போயிட்டு இருந்தாரு. ஆனா சுத்தி இப்ப இருக்குற கும்பல் இருக்குல்ல அங்க, அதெல்லாம் என்ன பண்ணுது? வந்து என்கிட்ட, ஒரு வாரம் கூட ஆகல. என்ன வந்து சொல்றாங்க, போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து, ‘அம்மா, அவர் போக்கு சரியில்லை’. ‘என்னய்யா போக்கு சரியில்லை? அவரு நல்லாதானய்யா பண்ணிட்டு இருக்காரு?’ அப்படின்னு நான் சொல்றேன். ‘இல்லம்மா சரியில்லையம்மா. வந்து நீங்க வந்து இப்ப கட்சிக்கு பொதுச்செயலாளர் ஆகணும், நீங்களே வந்து முதலமைச்சர் ஆகணும்’ அப்படீங்கற மாதிரி ஒரு கோரிக்கையை கொண்டாந்து, காலையில 6 மணிக்கு வருவாங்க, திருப்பி பாத்தீங்கன்னா மத்தியானம் 3 மணிக்கு வருவாங்க, திருப்பி சாயந்திரம் வருவாங்க. இத நான் வெளில சொல்லல அப்போ.
பொதுச்செயலாளராக கோரிக்கை
‘எனக்கு நீங்க இருந்தாதான் சரியா வரும்’. அத்தனை பேரும் சேர்ந்துகிட்டு, ‘நீங்க இருந்தாதான் சரியா வரும், நீங்க இருந்தா சரியா வரும், இவரு இருந்தா சரியா வராது’ அப்படிங்கறாங்க. ‘பொதுச்செயலாளர் நீங்க ஆகணும்’. ‘இல்லப்பா, நீங்க உங்களுக்குள்ளயே ஒருத்தங்க இருங்க, நல்லபடியா நடத்துங்க’ அப்படித்தான் நான் ஆரம்பத்துலேயே சொன்னேன். எனக்கு அம்மா இறந்த துக்கம் என்னால மறக்க முடியல. ‘நீங்க நடத்துங்கப்பா’ அப்படின்னு சொல்றேன். ‘இல்லம்மா நீங்க வந்தாகணும்’ங்கறாங்க. சரின்னு சொல்லி, அதுக்கப்பறம் தான் அவங்களே என்னை வந்து தொந்தரவு பண்ணி, பொதுக்குழுவை கூட்டி, அங்க என்னை பொதுச்செயலாளரா நியமனம் பண்ணி, வீட்டுல கொண்டாந்து கொடுத்து, என்னை ஆபீஸ்க்கு அழைச்சிட்டு போறாங்க. இதான் நடந்துச்சு.
அதிமுக பொதுச்செயலாளராக என் பணிகள்
அதுக்கப்பறம் நான் என்ன பண்ணேன்? நாங்கெல்லாம் வேலை செய்யுற ஆளு. அதனால என்ன பண்ணேன்? பேச்சாளர்களை எல்லாம் மாவட்ட வாரியா வரச் சொல்லி, எல்லாரையும் பார்க்கிறேன் நான் ரெண்டு மூணு நாள்லேயே. எல்லாரையும் பார்த்து பேசிட்டு இருக்கிறேன். மாவட்ட அமைப்புகளை கூப்பிட்டு, காலையில ஒரு மாவட்டம், மத்தியானம் ஒரு மாவட்டம்னு பார்க்க ஆரம்பிச்சுட்டேன். இது மாதிரி நடந்துட்டு இருக்கு. திருப்பி வந்து அதே குறை அவர் மேல.
அவரையும் கூப்பிட்டேன் ஒருநாள். பன்னீர்செல்வத்தை வரச் சொல்லி, அமைச்சர்களா இருக்குறவங்க அத்தனை பேரையும் வரச் சொல்லி, போயஸ் கார்டன் வீட்டுல எல்லாரையும் ஒண்ணா உட்கார வச்சு, ‘என்ன பன்னீர்செல்வம் செய்யுறாரு சொல்லுங்க? நேரா சொல்லுங்க நான் கேட்கணும்’ அப்படிங்கறேன். ‘இல்ல நாங்க ஏதோ ஒன்னு போய் கேட்டோம், ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாத்தணும்னு ஒரு மந்திரி சொல்லிருந்திருக்காரு. அவர் நல்ல அதிகாரி இல்ல, அம்மா இருக்கும்போதே ஒதுக்கி வச்ச மனுஷன்’. நான் டக்குனு சொன்னேன், ‘அம்மாவே சரியில்லைன்னு சொல்லி ஒதுக்கி வச்சவரை எப்படி போட முடியும்? அதுல ஒன்னும் தவறு இல்லை பன்னீர்செல்வம் சொன்னதுல’ அப்படின்னு நான் அந்த மந்திரிக்கு எடுத்துச் சொல்றேன். ‘இதெல்லாம் போய் ஒரு குறையா சொல்லலாமா?’ அப்படின்னு சொல்றேன்.
காவல்துறையில் கட்சி தலையீட்டை நிராகரித்த ஜெ.
அம்மாகிட்ட ஒரு பழக்கம், போலீஸ் டிபார்ட்மென்ட்ல கட்சிக்காரங்க தலையீடு இருக்கக்கூடாது. அப்படித்தான் நடத்துனாங்க. அதனாலதான் திருட்டு இல்ல, பிரச்சனைகள் இல்லாம இருந்தது. மந்திரிகளுக்கு அது வேலை இல்லை. போலீஸ் ஸ்டேஷன்ல யாரை போட்டா உங்களுக்கு என்னம்பாங்க அம்மா. நானே என் காதால கேட்டுருக்கேன். அதனால நல்ல அதிகாரிகளைத்தான் போடணும்னுருவாங்க. இப்ப அம்மா இல்லைன்ன உடனே அவங்க அவங்க சீட்டை கொடுத்து போடுன்னு இருக்காங்க. அவர் என்ன சொல்லிருக்காரு, ‘இல்ல அது அம்மா சொன்னது, அது அப்படித்தான் போகணும்’னுருக்காரு. அவர் மேல அதுல தப்பு இல்லை. நானா இருந்தாலும் அதைத்தான் செய்வேன். இப்படியாச்சு. அவருக்கு ரொம்ப நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவராலையும் வெளில சொல்ல முடியல. அதுக்கப்பறம் பாத்தேன், இத இப்படியே விட்டுட்டு போனா பிரச்சனை பெருசாகும் அப்படின்னு சொல்லி, அதுக்குப்பிறகுதான் நான் ஆகுறேங்கற முடிவுக்கு வந்தேன். இல்லேன்னா நான் வந்திருக்க மாட்டேன். பொதுச்செயலாளரா இருந்து நான் கட்சியைப் பார்த்துக்குவேன்.
ஓபிஎஸ் தர்மயுத்தம்
இப்படி பிரச்சனை உள்ளுக்குள்ள புகஞ்சதுனால இத தடுக்கறதுக்கு ஒரு வழி இதுதான்னு முடிவு பண்ணிதான் நான் வந்து ஒத்துக்கிட்டேன். அதுக்குள்ள பன்னீர் செல்வத்திற்கு என்ன ஆச்சோ தெரியல. அவருக்கே தெரியும் எல்லாரையும் வச்சு ஒண்ணா வச்சுதான் பேசுறேன். என்ன ஆயிடுச்சு திடீர்னு போய் அம்மா சமாதியில போய் உக்காந்துட்டாரு.
போய் உக்காந்து தர்ம யுத்தம்ட்டாரு. அது யாரோ சொல்லிருக்காங்க, எல்லாருக்கும் புரியும், ஏதோ கேட்டு அவரு ஏதோ பண்ணிட்டாரு. கடைசில அதே இன்னைக்கு வரைக்கும் அவருக்கு சிக்கலாகிடுச்சு, அது வேற.
முதலமைச்சராக முடிவு- ஆளுநர் இல்லை
சோ அதனால இந்த மாதிரி ஆச்சு பிரச்சனை. அதுக்கு அப்புறம் எங்க கேஸ் முடிஞ்சு நாங்களே மறந்துட்டோம். தீர்ப்புக்கு வெயிட் பண்றோம் ஒரு வருஷத்துக்கு மேல இருக்கு. திடீர்னு பாத்தீங்கன்னா நான் போய் லெட்டர் குடுத்துட்டேனா முதலமைச்சர்னு. கவர்னர் ஆளே இல்லை, வெளிய போயிட்டாரு.
திடீரென வந்த தீர்ப்பு- 4 ஆண்டு சிறை தண்டனை
அதுக்கப்புறம் என்ன பண்ணோம், அதுக்குள்ள தீர்ப்பு வருது, சீக்கிரமாவே வருது. நாலு ஆண்டு சிறை தண்டனை அப்படின்னு வருது. நான் அதுக்கெல்லாம் பயப்படல. நான் அதுக்கு பயப்படல. என்னோட கவனம் பூரா என்னவா இருந்ததுன்னா கவர்மெண்ட்ட கலைக்க விட்ற கூடாது. நம்ம கவர்மெண்ட்ட உக்கார வச்சிட்டு போகணும். அந்தப் பொறுப்பு அதிகமாயிடுச்சு எனக்கு.
அதனால என்ன பண்ணேன் தீர்ப்பு வந்தது, ஒரு வாரம் டைம் குடுக்கச் சொல்லு எனக்கு இங்க வேலை எல்லாம் இருக்கு முடிச்சிட்டு வரணும்னு. அங்க டெல்லியில உள்ள ஜட்ஜ் என்ன சொல்லிட்டாரு குடுக்க முடியாது, நாளைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு பெங்களூர் ஜெயிலுக்கு போய் ஆகணும் அப்படின்னு சொல்லிட்டாரு.
எடப்பாடி முதல்வரானது எப்படி?
உடனே என்ன பண்ணேன், உடனே எம்எல்ஏக்களைக் கூட்டி உக்கார வச்சு நான் பேச வேண்டியதெல்லாம் சொல்லி இப்ப இருக்கிறாரே இவரை (எடப்பாடி பழனிசாமியை) முதலமைச்சரா தேர்ந்தெடுத்தோம். நான் பேரை சொல்லக் கூட விரும்பல, வரமாட்டேங்குது. நல்லவங்கன்னா சொல்லுவேன். நல்லவங்க ஒரு சாதாரண ஆளா இருந்தா கூட சொல்லுவேன். இது சொல்ற அளவுக்கு இல்லை.
அதனால நான் வாயினால சொல்லல, உங்களுக்கே புரியும் யாருன்னு. சரி இவரை முதலமைச்சராக்குவோம்னு சொல்லிட்டு அந்தத் தீர்ப்பு காதுல கேட்ட அஞ்சு நிமிஷத்துக்குள்ள நான் இந்த வேலையை பண்ணேன்.
அவரு உடனே என்ன சொல்றாரு ‘அம்மா கவர்னர்ட்ட லெட்டர் குடுக்குறப்ப நீங்களே எல்லார்ட்டயும் கையெழுத்து வாங்கி நீங்களே இருந்து குடுங்கம்மா’ அப்படிங்கிறாரு. அதனால உக்காந்து அம்மா போட்டோ வச்சு சத்தியப்பிரமாணம் சொல்லச் சொல்லி எல்லார்டயும் கடிதத்த வாங்கி அதுக்கப்புறம் குடுத்து நான் கையெழுத்துப் போட்டு கவர்னருக்கு அனுப்பிப்புட்டு மறுநாள் காலைல பதினோரு மணிக்கு பெங்களூருக்குப் போனேன். இதுதான் நடந்தது.
பெங்களூரு சிறைக்குள் எடப்பாடியின் சதிகள்
அப்படியே ரெண்டு மூணு மாசம் போச்சு. அப்ப எல்லாம் இவரு எப்படி என்ன அப்படிங்கறது எனக்குச் சரியாத் தெரியல. அங்க போனதுக்கு அப்புறம் நாலஞ்சு மந்திரிங்க வந்தாங்க என்னைப் பார்க்க, ஒரு ரெண்டு மாசத்துக்குள்ள வந்தாங்க. வந்து எல்லாரும் பாத்துட்டு பேசிட்டு இருந்துட்டு ‘அம்மா நீங்க வந்து சென்னை ஜெயிலுக்கே நம்ம மாத்திக்கலாம், நீங்க ஏன் பெங்களூர்ல இருக்கணும்?’ அப்படின்னு கேட்டாரு.
அதுல செங்கோட்டையன் ரொம்பக் கேட்டாரு அத. ‘அம்மா இங்க மாத்திக்குவோம், நம்ம செக்ரட்டரி வந்து ஹோம் செக்ரட்டரி லெட்டர் குடுத்து பெங்களூர் ஹோம் செக்ரட்டரிக்குக் குடுத்தா போதும், நம்மளுக்கு இங்க டிரான்ஸ்பர் குடுத்துருவாங்க. அதனால நீங்க நம்ம ஊரு…’
ஏதோ தெய்வாதீனமா எனக்குக் கடவுளே சொன்னுச்சு போல இருக்கு, இல்லன்னா நான் இன்னைக்குப் பேசிக்கிட்டு இருப்பேனாங்கிறதே கஷ்டம். அதனால நான் எதார்த்தமாச் சொன்னேன், ‘இல்ல செங்கோட்டையன் நான் இங்கேயே இருக்கேன் பெங்களூர்லயே’. நான் சொன்ன காரணம் வேற, என்னன்னா நீங்க அரசாங்கத்தை நடத்தணும். திமுகவுக்குச் சொல்றதுக்கு இப்ப ஒண்ணுமே இல்லை. இப்ப நான் அங்க வந்தேன்னா, நீங்க ஆட்சி பண்ற இடத்துல உள்ள ஜெயில்ல நான் இருக்கும்போது அவங்க என்ன சொல்லுவாங்க ‘சசிகலாவுக்கு இன்னைக்குச் சாப்பாடு கேரியர்ல போச்சு’ம்பான். இந்த மாதிரி இன்னைக்குக் கொண்டு போறாங்க… இப்படியே சொந்தக்காரவங்க போனாங்க, 40 நிமிஷம் தான் பாக்கணும், அரை நாள் உக்காந்து பாத்துட்டு வந்தாங்கனு சொல்லுவாங்க. இதெல்லாம் நமக்கு தேவையா? வேண்டாம். நீங்க ஆக்கப்பூர்வமான வேலைய பாருங்க. மக்கள் வாக்களிச்சிருக்காங்க, நம்ம வேலைய பாக்கணும். அதனால வேணாம், நான் இங்கயே இருந்துட்டு வந்துறேன் அப்படின்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டேன்.
அப்புறம் பின்னாடி போக போக தான் தெரிஞ்சுது எனக்கு, நம்ம வேண்டாம்னு சொன்னது தான் நல்லது அப்படின்னு நினைக்கிற அளவுக்கு வச்சிட்டாரு. அது போகட்டும். அதுக்கப்புறம் என்ன ஆகுது? கொஞ்ச நாள் பாத்தீங்கன்னா திடீர்னு ஒரு பொதுக்குழு.. நீக்குறதுக்கு! அதனால என்னன்னா உடனே ஒரு பொதுக்குழுவ கூட்டி என்ன நீக்குறாங்க.
நான் ஒருவரை முதலமைச்சரா உட்கார வச்சிட்டு போயிருக்கேன்! அப்ப எப்படியாப்பட்ட ஆளா இருக்கணும்? என்ன நீ வந்து ஒரு பேப்பர தூக்கி சுத்தி தூக்கி போடுற மாரி போட்டா எப்படி இருக்கும்? நான் எப்போதுமே கோவத்த காட்டுறதே இல்ல. அது தலைவரோட பழக்கம் அது. நான் தலைவர்கிட்ட ஒரு மூணு நாலு வருஷம் பேசிட்டு இருந்துருக்கேன். அப்ப சொல்லுவாரு, அவரு சொல்றது ரொம்ப பதிஞ்சு போச்சு அப்ப எனக்கு. அதனால நம்ம எடுத்தோம் கவுத்தோம்னு இருக்கக்கூடாது. அதனால இத விட்டு தான் பாக்கணும் அப்படின்னு சொல்லிட்டு சரி நம்ம பாத்துக்குவோம் அப்படின்னு சொல்லிட்டு விட்டுட்டேன்.”
ஆனா அதுக்கப்புறம் என்ன ஆச்சு? உள்ளார பாத்தீங்கன்னா நான் வந்து வெளியில சொல்லல இதுவரைக்கும். என் வீட்டுல உள்ளவங்களுக்கு யாருக்கும் தெரியாது. இன்னைக்கு தான் எனக்கு நடந்தத இந்த பக்கம் உள்ள உங்கள்ல எல்லாட்டையும் சொல்லணும்,
தமிழ்நாட்டு மக்களுக்கு இது தெரியணும் அப்படிங்குற முடிவுல தான் இன்னைக்கு தான் நான் வாய தொறந்து இத சொல்றேன். இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது. என்ன நடந்தது?
அங்க உள்ளார (சிறைக்குள்) பாத்தீங்கன்னா டெய்லியே எனக்கு பிரச்சனை. இவரு இங்க இருந்துக்கிட்டு அங்க உள்ளவங்களோட பேசிக்கிட்டு, ஆபீசருங்கல எல்லாம் கையில போட்டுக்கிட்டு, நான் உட்காந்தா தப்பு அங்க நின்ன தப்பு. இப்படித்தான் அந்த ஜெயில்லையும் நான் இருந்துட்டு வந்துருக்கேன்.
பரோலில் வர கெடுபிடி போட்ட எடப்பாடி
அதுக்கப்புறம் என்ன ஆகுது? இடையில வந்து என்னுடைய கணவருக்கு உடம்பு சரியில்ல. பாக்கணும்னு கேக்குறாரு. அதனால வந்து பரல் குடுங்க, விடுப்பு குடுங்க அப்படின்னு சொல்றாங்க. அப்ப அந்த ஆபீசருக்கு நம்ம வக்கீல் போய் லெட்டர் குடுக்குறாரு. சாதாரணமா எல்லாருக்கும் குடுக்குறது 15 நாள் குடுப்பாங்களாம். அதேபோல எனக்கும் 15 நாள் குடுத்தாங்க. அந்த 15 நாள் குடுத்துட்டு அந்த அம்மாவ ரெடியாகி வரச் சொல்லுங்க, நீங்க அழைச்சிட்டு போங்க அப்படின்னாங்க.
நான் வந்து எஸ்பி ஆபீஸ்ல உட்கார்ந்து இருக்கேன். அப்ப எஸ்பி கேக்குறாரு, மெட்ராஸ்ல இருந்து பதில் வரல எங்களுக்கு. எனக்கு அந்த ஊரு ஜெயில் தான் பரல் குடுக்கணும், அவங்க 15 நாள் குடுத்துட்டாங்க. ஆனா இங்க இருந்து பதில் வரமாட்டேங்குது. நம்ம உட்கார வச்சிட்டு போன அரசாங்கத்துல இருந்து பதில் வரல. என்ன வருது? கமிஷனர் பேசுறாரு. நான் நேரா உட்கார்ந்து இருக்கேன், அந்த எஸ்பி ஆபீஸ்லயே உட்கார்ந்து இருக்கேன். அவரு போன்ல ஸ்பீக்கர் போன ஆன் பண்றாரு எனக்கு காதுல விழனும்னு. ஏன்னா அந்த மனுஷனுக்கு தர்ம சங்கடமாகுது. அவரு என்னையும் நீங்களும் கேளுங்க என்ன சொல்றாங்கன்னு.
அங்க கமிஷனர் மெட்ராஸ்ல இருந்து என்ன சொல்றாரு: ‘சார், 15 நாளுக்கெல்லாம் குடுக்க முடியாது. நாங்க இங்க போலீஸ் இது பெர்மிஷன் கொடுக்கணும். 15 நாள் கொடுக்க முடியாது, 5 நாள் தான் கொடுக்க முடியும். 5 நாள் தான் கொடுக்க முடியும், அதுக்கு மேல கொடுக்க முடியாது’ங்குறாரு. அந்த இவரு கேக்குறாரு ஜெயில் சூப்பிரண்டண்ட்: ‘சார், ஜெயில்ல குடுக்குறது நாங்க குடுக்குறோம் 15 நாளு. நீங்க எப்படி அத வேண்டாம்னு சொல்ல முடியும்? நீங்க போலீஸ் பெர்மிஷன் மட்டும் குடுங்க’ன்னு. ‘இல்ல சார், சிஎம்-ஏ சொல்றாரு 5 நாளைக்கு மேல கொடுக்க வேண்டாம்னு. அதனால நான் என்ன சார் பண்ண முடியும்?
நீங்க என்ன பத்தி ஆபீசர்களுக்கெல்லாம் தெரியும், நியாயமா இருப்பேன்னு. நீங்க சின்னம்மாகிட்டயே ஒரு வார்த்தை சொல்லுங்க சார், அவங்க ஒத்துக்குவாங்க சார்ங்கறாரு. நான் எதுக்கு உக்காந்திருக்கேன்? சரி பரவாயில்லைங்க, அதிகாரி என்ன பண்ண முடியும், மேல உள்ளவங்க சொல்றப்ப அதிகாரி ஒன்னும் பண்ண முடியாது. பரவாயில்லை அஞ்சு நாள் பரவாயில்லை நான் பாத்துட்டு வந்துறேன் அப்படின்னு.
அப்புறம் அஞ்சு நாள் குடுக்குறாங்க. அடுத்தது நம்ம எங்க தங்குறோம்னு குடுக்கணும். நான் எதார்த்தமா போயஸ் கார்டன் வீட்ல இருந்துதான ஜெயிலுக்கு போனேன், அதனால நான் அந்த அட்ரஸையே குடுக்குறேன். உடனே அங்க இருந்து வருது இப்ப திருப்பி, 14 கண்டிஷன். இந்த மாதிரி யாருக்கும் வந்தது இல்லையாம், அவரு பாத்ததே இல்லேங்கறாரு சர்வீஸ்ல. என்ன கண்டிஷன் வருது? நீங்க சொந்தக்காரவங்கள பாக்கக் கூடாது, பிரஸ்ஸ பாக்கக் கூடாது. நேரா ஒரு வீட்ல இருக்கீங்க, வீட்ல இருந்து நேரா மருத்துவமனைக்கு போலாம், மருத்துவமனையில இருந்து நேரா வீட்டுக்குதான் வரணும். வேற எங்கேயும் வெளியிலேயே போகக் கூடாது. ஹாஸ்பிடலுக்கு போங்க, வீட்டுக்கு வாங்க. ஹாஸ்பிடலுக்கு போங்க, வீட்டுக்கு வாங்க, வேற எங்கயும் நீங்க போகக் கூடாது அப்படின்னு சொல்லிட்டாங்க. சரிங்க அப்படின்னு நான் சொல்லிட்டேன்.
அப்புறம் போயஸ் கார்டன் வீட்ல தங்கக் கூடாது. அது மெயின் கண்டிஷன்ல வருது. தங்கக் கூடாது, அப்படி போயஸ் கார்டன் வீட்லதான் தங்குவேன்னா இந்த அஞ்சு நாளையும் கேன்சல் பண்ணிடுவோம் அப்படிங்கறாங்க. நான் சரி உயிருக்கு போராடுறவங்கள போய் பாத்தாகணும். சரி பரவாயில்லை, என்னோட சொந்தக்காரங்க வீடு ஒன்னு இருக்கு, அங்க நான் தங்குறேன், டி.நகர்ல தங்குறேன் அப்படின்னு சொல்லி அதுக்கும் ஒத்துக்கிட்டு போனேன்.
அதுக்கப்புறம் அவரு மறைஞ்சதுக்கு பிறகு தகவல் வருது, அதுக்கும் 15 நாள் குடுக்க முடியாது 10 நாள்தான் அப்படிங்கறாங்க. பொதுவா எங்க பக்கம்லாம் 15-வது நாள்தான் காரியமெல்லாம் பண்ணுவாங்க. ஆனா வேற வழி இல்லை, ஏன்னா எனக்கு குடுக்கல, அதனால 10-வது நாள் பண்ணிட்டு அன்னைக்கே புறப்பட்டு பெங்களூருக்கு போனேன்.
ஈட்டியால் குத்தி துரோகம் செய்த எடப்பாடி
இந்த மாதிரி நிறைய விஷயங்கள்ல நீங்க பாத்தீங்கன்னா, உக்கார வெச்சவங்கள ஒரு பக்கம் முதுகுல, ஒரு பக்கம் முன்புறம் எவ்வளவு ஈட்டியால குத்துவாங்களோ அந்த அளவுக்கு பண்ணிட்டாங்க. சரி இதெல்லாம் மீறி நான் திரும்ப வந்து விடுதலையாகி சென்னைக்கு வரேன். எல்லாரும் வந்து பாத்தீங்க, வர்றப்ப கட்சி கொடி கட்டக் கூடாது, இது அம்மா சமாதிக்கு போகக் கூடாது அப்படின்னு சொல்லி, நான் என்ன நீ என்ன சொல்றது, நான் என்ன கட்சி கொடிய கழட்டுறது அப்படிங்கறதுலதான் நான் வேற வண்டி மாத்தி வந்தேன். என்னை அரெஸ்ட் பண்ணனும், ஓசூர் தமிழ்நாடு பார்டர் வந்ததுமே என்னை அரெஸ்ட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டாங்க. அதுவும் எனக்கு செய்தி வந்துருச்சு. ஆனாலும் நான் வந்து கொடிய கழட்ட மாட்டேன், நான் வேற வண்டி மாத்தி நான் வந்துட்டேன்.
எடப்பாடியின் பிடியில் அதிமுக எப்படி இருக்கிறது?
இது எதுக்கு சொல்றேன்னா இந்த அளவுக்கு கட்சியில யாரும் இருக்கக் கூடாது, கட்சியில மூத்தவங்களாம் இருக்கக் கூடாது, எல்லாரையும் வெளில தள்ளணும், இதெல்லாம் என்ன போக்கு? இதனால என்ன ஆகுது? கட்சியே வந்து சரிஞ்சு கீழ போயிட்டு இருக்கு, அதுதான் உண்மை. இந்த உண்மைய எவ்ளோ நாளைக்கு மறைக்க முடியும்? மறைக்க முடியாது. அதனால தலைவரும் சரி, அம்மாவும் சரி எப்படி இந்த கட்சிய பாத்துகிட்டாங்க. தலைவர் சொல்லுவாரு, கொள்கையா கட்சியாங்கறப்ப ஒரு கட்டத்துல அண்ணா சொன்னாராம், அதைச் சொல்லி ஒரு கடிதமே போட்டிருக்காரு. என்ன சொல்றாரு கொள்கைதான் முதல்ல. அதனால இவரு செய்யறது எந்த விதத்திலயும் நியாயம் கிடையாது. முதல்ல ஊர் ஜனங்க எப்படி மதிப்பாய்ங்க முதல்ல? இவர எப்படி மதிக்க முடியும், எப்படி நல்ல மனுஷன்னு சொல்லுவாங்க? அப்புறம் நான் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன், இது வந்து சரியா வராது. இவரப் பொறுத்தவரைக்கும் தான் இருக்கணும், கட்சி என்ன ஆனாலும் பரவாயில்லை, கட்சித் தொண்டரப் பத்தி துளியும் நினைக்கல. கீழ கிளைக் கழகத்துல இருந்து மேல்மட்டம் வரைக்கும் யாரையும் இவர் வந்து திருப்திப்படுத்தல. இவர் தன் போக்கையும் மாத்திக்கல அப்படிங்கும்போது, நானும் ஒன்பது ஆண்டுகாலம், ஒன்பது ஆண்டுகாலம் இது எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சுக்கிட்டு, இல்லை ஒரு கட்சி இது, நம்ம வந்து தனிப்பட்ட முறையில ஒருத்தங்க மேல கோபங்கிறதுனால நம்ம அப்படிலாம் நடந்துக்கக் கூடாது, எப்படியாவது கட்சியை ஒண்ணு இணைக்கணும் அப்படிங்கிற நிலையில்தான் நான் என்னோட இந்த ஒன்பது ஆண்டுகாலமும் போயிருக்கு.
நான் நினைச்சிருந்தா அப்பவே எதுவும் பண்ணிருக்க முடியும். நான் அந்த மாதிரி செய்யல. காரணம் என்னன்னா, தலைவரையும் அம்மாவையும் நினைச்சு இது மாதிரி செய்யக் கூடாது.
2021 தேர்தலின் போது நடந்தது என்ன?
சரி, 21 தேர்தல் வருது. 21 தேர்தல்ல சொல்றாரு, இப்ப வந்து உடனே வந்து எதுவும் பண்ண முடியாத நேரம், அதனால வந்து இந்த ட்ரிப் இருக்கட்டும்ங்க, நாங்க மொதல்ல பாக்குறோம். சரி ரைட்டு, அதுக்கும் சரி, நீங்க பாருங்க, ஜெயிங்க நல்லதுதான் அப்படின்னு சொன்னேன்.
இதுவரைக்கும் பார்த்தீங்கன்னா 10 முறை தேர்தல்ல தோல்வியை மட்டும்தான் பார்த்திருக்கோம், வெற்றி பெறல. அதனால எதிர்கட்சிகள் எப்படி இருக்கு? மோசமா இருக்கு. ஏதாவது நல்ல ஆட்சி பண்ணுதா? பண்ணல.
ஆனா தமிழ்நாட்டு மக்கள் வந்து நம்மளுக்கு கொடுக்கிற ஆதரவை என்னைக்கும் அவங்க மனசுல இருந்து எடுக்கல. ஆள் சரியில்லை, அப்ப அவங்க வேற மாதிரி நினைக்கிறாங்க. இன்னும் திருந்தலையே அப்படிங்கிற நினைப்புக்கு போறாங்க.
இப்ப அம்மா இருந்தாங்க, அம்மாவை எத்தனை முறை 13 கேஸ் போட்டாங்க, 13 கேஸ்ல 12 கேஸ்ல நாங்க விடுதலையானோம்… அந்த ஒரு கேஸ் தான் கடைசியில இருந்தது. அந்த கேஸையும் நாங்க வந்து சாதாரணமான கேஸ் தான் அது, இதுல இப்படிலாம் ஆகுறதுக்கே வாய்ப்பே இல்லை. இதுல கருணாநிதி என்ன பண்ணாரு அப்பவே ரொம்ப சூட்சமமா பண்ணாரு. அரசாங்க பதவியில இல்லாத என்னையும் அதுல சேர்த்து இவ தான் கூட இருந்துகிட்டு எல்லாம் பண்ணிட்டு இருக்கா, அதனால இவளையும் இந்த கேஸ்ல சேர்த்துரணும்னு தான் 96-ல சேர்த்தது. அதுதான் இப்படி நடந்தது.
ஆனா ஒன்னு சொல்றேன், சட்டமோ அதிகாரமோ கொடுக்கிற தீர்ப்பை விட மக்கள் கொடுக்கிற தீர்ப்பு தான் மகத்தானது. அதை தமிழ்நாட்டு மக்கள் அம்மாவுக்கு தொடர்ந்து கொடுத்திருக்காங்க. நீ என்ன தான் அம்மா மேல தண்டனைன்னு சொன்னாலும், திருப்பி வெற்றி பெற்று வந்து திருப்பி ஜெயிக்கிறாங்க அம்மா. அதனால தமிழ்நாட்டு மக்கள் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. அதனால அவங்க என்னைக்கும் நம்மள விடமாட்டாங்க.
உங்களுக்கு செய்யுற துரோகம்
அதனால நான் இப்ப ஒரு இந்த மன்றத்துல தான் அந்த முடிவை எடுக்கணும் அப்படிங்கிறதுக்காக என் மனசுல உள்ளதெல்லாம் உங்களுக்கு சொல்லிட்டேன். எல்லாத்தையும் சொல்லிட்டேன் உங்கள்ட்ட. இப்ப என்ன நினைக்கிறேன், இந்த சமயத்துல நான் வந்து… நான் பேசாம இருந்தேன்னு வைங்க, நான் இந்த மாதிரி 9 வருஷம் இந்த மாதிரி தொடர்ந்து இருந்தேன்னா புரட்சித் தலைவி அம்மாவினுடைய வழிவந்த கழகத் தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் செய்கின்ற பெரிய துரோகமாயிடும்.
புதிய கட்சி அறிவிப்பு
அதனால என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்திருக்கேன். தமிழகத்திற்காக, தமிழகத்தில் உள்ள மக்களுக்காக, நம் கழகத் தொண்டர்களுக்காக புதிய களத்தைக் காணப்போகிறோம். ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கப் போகிறோம்.
இது ஒரு திராவிடக் கட்சியாக, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் ஏழை எளிய சாமானிய மக்களுக்கான ஒரு கட்சியாக, எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுக்கின்ற ஒரு கட்சியாக இது செயல்படும்.
நமது கட்சியின் கொடியை இங்கே அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் உருவத்தைத் தாங்கி நிற்கின்ற ஒரு கொடியாகப் பட்டொளி வீசிப் பறக்கும். கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன். இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்பதை அனைவருக்கும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். களம் காண்போம், நம் இருபெரும் தலைவர்களின் பொற்கால ஆட்சியை அமைப்போம். இவ்வாறு சசிகலா பேசினார்.
