ஜனவரி 15ஆம் தேதி விஜய் படம் ஒன்று ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினை காரணமாக வெளியிடப்படவில்லை. இது விஜய் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ஜனநாயகன் வெளியாகும் நாளே பொங்கல் திருவிழா என திரை பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகன் பட சென்சார் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த சூழலில் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ‘தெறி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அட்லீ இயக்கத்தில் உருவான ‘தெறி’, ஏப்ரல் 14, 2016 அன்று வெளியானது. குடும்ப சென்டிமென்ட், அதிரடி ஆக்ஷன் காட்சிகள், மற்றும் விஜய்யின் நடிப்பு ஆகியவற்றால் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 2026 அன்று ‘தெறி’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளார் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.
தெறி வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 2026-ல் ஏப்ரல் 14-ம் தேதி மறுவெளியீடு செய்யப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
சமீபகாலமாக வெற்றிப் படங்களை மறுவெளியீடு செய்வது தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்டாக மாறி வருகிறது. ஏற்கனவே கில்லி, குஷி, ப்ரண்ட்ஸ் என விஜய் படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது அந்த வரிசையில் தெறியும் இணைந்துள்ளது.
