1994 முதல் 2004 வரை பத்து வருடங்கள் அமெரிக்காவில் சக்கைப் போடு போட்ட நகைச்சுவைத் தொடர் ஃபிரண்ட்ஸ் . அந்த காமெடி ஸ்டைலில் இம்ப்ரெஸ் ஆகி மலையாளத்திலும் ஃபிரண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு படம் வந்தது . ஜெயராம் , முகேஷ் போன்றவர்கள் நடித்த அந்தப் படத்தை இயக்கியவர் சித்திக் .
தயாரித்தவர் இப்போது நிறைய தமிழ்ப் படங்களில் (குறிப்பாக மாரி செல்வராஜ் போன்றவர்கள் படங்களில்) நடிக்கும் லால் ஆரம்பத்தில் சித்திக் லால் இரட்டையராகப் பணியாற்றியவர்கள் .
அந்தப் படம் வந்த இரண்டே வருடத்தில் அதே சித்திக் இயக்கத்தில் விஜய் சூர்யா வடிவேலு நடிக்க தமிழிலும் அதே கதையில் அதே ஃபிரண்ட்ஸ் என்ற பெயரில் படம் வந்தது . தமிழ்ப் படத்தைத் தயாரித்தவர் அப்பச்சன் என்ற மலையாளத் தயாரிப்பாளர் .
தமிழ்ப் படத்தில் வடிவேலு கேரக்டர் மிகவும் ரசிக்கப்பட்டது . அதாவது முட்டாள்தனமான, கையாலாகாத, யாரும் பயப்படாத அளவுக்கு மட்டும் கோபப்படுகிற, ஒரு கேரக்டர் . காமெடி நன்றாக இருந்தது . இருக்கட்டும்
ஆனால் அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி .
‘பெயர் எதுவாக இருந்தால் காமெடி நன்றாக இருந்தால் போதாதா?’ என்ற பெருந்தன்மையை இங்கே காட்ட முடியாது .
காரணம் …
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ் மக்கள் வாழ்கிற – தமிழ் நாட்டோடு நியாயமாக சேர்க்கப்பட வேண்டிய – சுமார் அறுநூறு சதுர கிலோ மீட்டர் நிலம் கேரளாவுக்குக் கொடுக்கப்பட்டது . அதில் வண்டிப்பெரியார், இடுக்கி, தேவிகுளம் , பீர்மேடு மட்டுமல்ல.. திருவனந்தபுரம் கூட தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிலையில், இவை எல்லாம் கேரளாவுக்குக் கொடுக்கப்பட்டது .
அதோடு கன்னியாகுமரி மாவட்டத்தையும் கேரளாவோடு சேர்க்க முயல, அதற்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தி , கன்னியாகுமரியை தமிழ் நாட்டோடு தக்க வைத்ததில் மிக முக்கியமான பங்கு மார்ஷல் நேசமணி என்ற தலைவருக்கு உண்டு .
கன்னியாகுமரி கிடைக்காமல் போன ஆத்திரத்தில் மலையாளப் படங்களில் அவ்வப்போது நேசமணி என்ற பெயரில் சில கேவலமான கேரக்டர்கள் வைக்கப்படுவது உண்டாம்.
ஆனால் விஜய் சூர்யா நடிக்கும் படத்திலேயே வடிவேலுவுக்கு நேசமணி என்ற பெயர் வைத்துக் கிண்டல் செய்து , அதை தமிழக மக்களே ரசிக்கும்படி செய்த அறிவார்ந்த ஆணவம் கொண்டவர்களால் தயாரித்து இயக்கப்பட்ட படம்தான் ஃபிரண்ட்ஸ் .
அதன் பிறகு கொஞ்ச காலத்துக்கு முன்பு நேசமணி தாக்கப்பட்டார் என்ற ஒரு வாசகம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது . அது கேரளாவில் இருந்தே துவங்கப்பட்டது என்ற தகவல்கள் அப்போது வந்தன .
அப்படி தமிழ் மண்ணை மீட்கப் போராடி கொஞ்சம் மட்டுமே வெற்றி பெற்ற மார்ஷல் நேசமணியை கிண்டல் செய்த, பிரண்ட்ஸ் படம் வரும் 21-ந் தேதி மறு ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது.
நேசமணியை இன்னும் ஒரு முறை கிண்டல் செய்து தமிழர்களே ரசிக்கப் போகிறார்கள்.
- ராஜ திருமகன்
