திருப்புவனம் அஜித்குமார் மரண சம்பவத்தில் புகார் தெரிவித்த நிகிதா மீது மேலும் இருவர் பண மோசடி புகார் தெரிவித்துள்ளனர். Nikitha Ajithkumar
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார், போலீஸ் விசாரணையில் அடித்து கொல்லப்பட்டார். மடப்புரம் கோவிலுக்கு சென்ற இடத்தில் நகையை திருடியதாக அஜித்குமார் மீது மதுரை நிகிதா புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரை போலீசார் விசாரித்த போது அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் அஜித்குமார் மீது புகார் தெரிவித்த நிகிதா தொடர்பாக பல்வேறு மோசடி புகார்கள் ஏற்கனவே நிலுவையில் இருப்பதாக ஆதாரங்கள் வெளியாகின. மதுரை திருமங்கலம் காவல் நிலையத்தில் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 2011-ம் ஆண்டு பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததும் அம்பலமானது.
நிகிதாவிடம் பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டதாகவும் தற்போது வரை அந்த பணத்தை திரும்பப் பெற போராடுவதாகவும் மதுரை ராஜாங்கம், வினோத் ஆகியோர் கண்ணீருடன் பேட்டியளித்திருந்தனர்.
தற்போது நிகிதா மீது மேலும் இருவர் திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முருகேசன், முத்துக்கொடி ஆகியோர் இன்று கொடுத்த புகார் மனுவில், 2011-ம் ஆண்டே நிகிதா மீது பண மோசடி புகார் கொடுத்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் நிகிதா மீது நடவடிக்கை எடுத்து தங்களிடம் மோசடி செய்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.