எழும்பூர் ரயில் நிலைய புனரமைப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை ரயில் சேவைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான 208 சேவைகளுக்குப் பதிலாக 115 சேவைகள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன.
ரயில் டிக்கெட்டே பேருந்து டிக்கெட்!
தாம்பரம் – சென்னை கடற்கரை இடையிலான ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால், 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தலைமைச்செயலகம் எழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் இந்த பேருந்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பயணிகள் கட்டணமின்றி பயணிக்கலாம். இதற்குப் பயணிகள் தங்களின் செல்லுபடியாகும் மின்சார ரயில் டிக்கெட் அல்லது சீசன் டிக்கெட்டைக் காட்டினால் போதுமானது.
பேருந்து இயக்க விவரங்கள்:
காலை நேர சேவை: தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:30 முதல் 8:43 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படும்.
மாலை நேர சேவை: கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு மாலை 5:00 முதல் இரவு 7:13 மணி வரை இதேபோல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
நிறுத்தங்கள்: தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, எழிலகம் மற்றும் பாரிமுனை ஆகிய முக்கிய இடங்களில் இந்தப் பேருந்துகள் நின்று செல்லும்.
பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரு மார்க்கத்திலும் தலா 20 பேருந்துகள் சேவைகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் கூடுதலாக இயக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் ரயில்வே மாதாந்திர பாஸ் வைத்திருப்போர் ரயில் டிக்கெட் வைத்திருந்தாலும் இந்த பேருந்துகளில் இலவசமாகவே பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் SOUTHERN RAILWAY CHARTERED BUS என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
