பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குனர் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ். சேனல் சார்பில், 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்படத் துறையின் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் “ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME)” விருது வழங்கும் விழா 2026 ஜனவரி மாதம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.
இது பற்றிக் கூறும் சித்ரா லட்சுமணன், ” திரையுலகில் இருக்கிறோம், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா. எந்த ஒரு கலைஞர்களுக்கும் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், மேடையில் வாங்கும் கைதட்டல்கள் அதற்கு ஈடாகாது. அதற்காகத்தான் இந்த விருது வழங்கும் விழா.
இந்த விருது வழங்கும் விழாவிற்கு கே. பாக்யராஜ், தேர்வுக் குழுவின் தலைவராக செயல்பட, குஷ்பூ சுந்தர், இளவரசு, முரளி ராமசாமி, டி. சிவா, ஆர்.கே. செல்வமணி, ஆர். வி . உதயகுமார் ஆகியோர் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கின்ற குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பத்திரிக்கை தொடர்பாளர் தொடங்கி, இயக்குனர் கதாநாயகன், கதாநாயகி என 50 கேட்டகிரியில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. வழக்கமாக கொடுக்கப்படும் விருதுகள் மட்டும் இல்லாமல் ஸ்பெஷல் ஆக சில விருதுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது, அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
விருது வழங்கும் விழா என்பது மிகப்பெரிய வேலை. நீண்ட நாட்களாக இது தொடர்பாக யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 25ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. “என்கிறார்.
இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்” இன்று விருதுக்கு உண்டான மரியாதை போய்விட்டது. விருதுகள் வியாபாரம் ஆகிவிட்டது. யார் விழாவிற்கு வந்தாலும் அவர்களுக்கு ஒரு விருது வழங்கப்படுகிறது. உலகளவில் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது வாங்குவது பெருமைப்படும் விதத்தில் இந்த விருதை கொண்டு செல்ல வேண்டும். நாங்கள் அனைவரும் உங்களுடன் உறுதுணையாக இருப்போம். இதனை ஒரு மகிழ்ச்சியான பயணமாக எடுத்துக் கொண்டுள்ளோம். “என்கிறார்.
இயக்குனர் கே பாக்யராஜ், ” விருது வழங்கும் விழாவில் நடுவராக இருக்கும் போது ரெக்கமண்டேஷன் அதிகமாக வரும். மனசாட்சியை தூக்கி வைத்துவிட்டு, நியாயமாக இதனை செய்யும் போது, நிறைய பேரிடம் திட்டு வாங்க வேண்டி வரும். ஆனால் இந்த விருது வழங்கும் விழாவை நியாயமான முறையில் சரியான முறையில் வழங்குவோம்.”என்கிறார்.
ஆர்கே செல்வமணி, “தற்போது விருது விழாக்கள் மிகவும் குறைந்துள்ளது. OTT வந்த பிறகு தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் விருது விழாக்கள் குறைந்துவிட்டது. விருது வழங்கும் விழாக்கள் கலைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்து வந்தது. அவர்கள் விருது வாங்கவில்லை என்றாலும், அவர்களின் நண்பர்கள் விருது வாங்கும் போது தீபாவளி போன்ற ஒரு மகிழ்ச்சி இருக்கும். கோவிட் காலத்திற்கு பிறகு இது போன்ற விழாக்கள் இல்லாமலே போய்விட்டது.. ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழாவில் எங்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.”என்கிறார்.
GAME இல்லாமல் நடக்கட்டும் FRAME & FAME !
— ராஜ திருமகன்
