ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவை காப்பாற்றியது பாஜக என்று எடப்பாடி பழனிசாமி கூறியது வரவேற்கத்தக்கது. டிடிவி தினகரனை விரைவில் சந்திப்பேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (செப்டம்பர் 18) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கரூர் மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் பேசி உள்ளார். கரூர் மாவட்டத்திற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது இந்த மாவட்டத்தில் இரண்டு திருடர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பெயர் செந்தில் பாலாஜி. சின்னத் திருடன் செந்தில் பாலாஜியின் தம்பி என்று பேசிவிட்டு சென்றார்.
8 ஆண்டுகள் கழித்து அதே கரூர் மாவட்டத்தில் மேடையில் பேசும்போது உலக மகா உத்தமர் செந்தில் பாலாஜி. இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த மனிதர் செந்தில் பாலாஜியின் தம்பி என்று சர்ட்டிபிகேட் கொடுக்கிறார். இதிலிருந்து தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 தேர்தலுக்கு ஒரு மண் குதிரையின் மீது அமர்ந்து காவிரி கரையை நோக்கி போகிறார். இவர் மேடையில் அமர்ந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் இதயங்களில் பாஜக இடம்பெற்றிருக்கிறது.
விஜய்யின் சுற்றுப்பயணத்தை பொருத்தவரை அதிகமாக கூட்டம் வருகிறார்கள்… இல்லை என்பது இரண்டாவது கருத்து. கூட்டம் வந்தால் சந்தோஷம்தான். ஆனால் வரக்கூடிய கூட்டம் பொதுச்சொத்துக்கு பிரச்சனையை ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் வந்து செல்ல வேண்டும். தூத்துக்குடியில் அடுத்த கட்ட பயணத்திற்கு அனுமதி கேட்கும் போது அந்த காவல்துறை அதிகாரிகள் திருச்சியில் ஏற்பட்டிருக்கும் பொது சொத்துக்கள் உடைய சேதாரத்தை பற்றி சொல்லி உள்ளனர். இதில் விஜய் தரப்பு மற்றும் அரசு என இரண்டு பேருக்கும் பொறுப்பு உள்ளது.
மேலும் அமித்ஷா கூறியபடி, எடப்பாடி பழனிசாமி தான் கூட்டணி தலைவர். அவரை முதலமைச்சராக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமித்ஷாவை பார்த்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. என்னை பொறுத்தவரை அவர் முகத்தை மறைத்ததாக தெரியவில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சியை பாதுகாத்தது பாஜக தான் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது சரித்திர உண்மை
பாஜக கஷ்டத்தில் இருந்தபோது டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவாக இருந்தார்கள்.அவர்களோடு அரசியலை தாண்டி எனது நட்பு தொடரும். டிடிவி தினகரனை நட்பின் அடிப்படையில் அடுத்த சில நாட்களில் சந்திப்பேன்” என கூறினார்.
நிலம் வாங்கியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “அண்ணாமலை எம்எல்ஏ இல்லை, எம்பி இல்லை, பஞ்சாயத்து தலைவர் இல்லை, மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் எனக்கு சம்பளம் கிடையாது. ஆனால் ஆண்டுதோறும் நான் பேங்க் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்டை வெளியிடுவேன். நான் சொந்தமாக நான் சம்பாதித்து ஒரு விவசாய நிலம் வாங்கினாலும் நான் விளக்கம் அளிக்க வேண்டும். நீங்கள் ஆர் டி ஐ போட்டால் தெரியும். சந்தை மதிப்பை விட அந்த நிலத்திற்கு அதிகமான விலை கொடுத்து வாங்கி உள்ளோம். அரசுக்கு வரி கட்டியுள்ளோம். இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் வாங்கி உள்ளோம்.
நான், என் மனைவி, மற்றும் குடும்பத்தினர் சும்மாவா இருக்கிறோம். எங்களுக்கென்று வேலை உள்ளது. அதை செய்து கொண்டிருக்கிறோம். மக்கள் பணியை செய்கிறோம். அரசியல் செய்கிறோம், இருந்தும் நான் ஏன் வெளிப்படையாக இருக்கிறேன் என்றால், நம்மை நம்பி இருப்பவர்கள் இவர் அரசியலும் செய்கிறார், இந்த வேலையும் செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்றார். இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்பது தனிப்பட்ட ஆசை. அதே போல் சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு ஆரம்பகால கடன் கொடுக்க வேண்டும் என்பது போன்று ஆசை உள்ளது. அதற்கான முயற்சியில் உள்ளேன்” என்று தெரிவித்தார்.