உதகை மசின குடி பகுதியில் வீtடுக்குள் புகுந்த கரடியை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மசினகுடி பகுதியில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று இரவு நேரங்களில் சுற்றி வந்தது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 18) இந்த கரடி சிவக்குமார் காலனி பகுதியில் உள்ள ரிஜு என்பவரது வீட்டிற்குள் புகுந்தது. பொதுமக்கள் விரட்டிய நிலையில் மற்றொரு வீட்டிற்குள் புகுந்தது.
இது குறித்து மசினகுடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் அந்த கரடியை தீப்பந்தம் வைத்து விரட்ட முயற்சி செய்து வருகின்றனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்து வரும் நிலையில் அந்த கரடி குடியிருப்பு பகுதிக்குள் உள்ள புதருக்குள் சென்று மறைந்து கொள்கிறது.
இதனால் கரடியை விரட்ட முடியாமல் வனத்துறையினர் போராடி வருகின்றனர். இந்த கரடியின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளாததால் தற்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கரடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர் வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.