அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் நயன்தாரா குறித்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் பேச்சுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு கோரி அதிமுக கூட்டணிகட்சிகள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் “உங்கள் கனவைச் சொல்லுங்கள்” திட்டம் குறித்து விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “எனக்கு நயன்தாரா வேண்டும். கனவை நிறைவேற்றுவீர்களா?” என்று பேசியது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஹாட்பாக்ஸை ரூ.100-க்கு வாங்கிக் கொடுத்துள்ளார். திமுகவினர் பெண்களுக்கு சேலை கொடுக்கின்றனர். ஆனால், சேலை கொடுத்தால் போதுமா? பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது என பெண்கள் கேட்கின்றனர்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
