அஜித்குமார் மரண வழக்கில் புகார்தாரர் மதுரை நிகிதா மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில் தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. Nikitha Ajithkumar
சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்டார். மதுரை நிகிதா கொடுத்த நகை திருட்டு புகார் மீதான விசாரணையின் போதுதான் போலீசாரால் தாக்கப்பட்டு அஜித்குமார் மரணமடைந்தார். அஜித்குமார் மரணத்துக்கு காரணமான 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புகார் கொடுத்த நிகிதா மீது 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு மோசடி புகார்கள் போலீசில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் வெளியாகின. திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கத்திடம் ஆசிரியர் பணிக்காக ரூ11 லட்சம்; ஆலம்பட்டியைச் சேர்ந்த முத்துக்கொடியிடம் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ2.50 லட்சம்; திருமங்கலம் தெய்வத்திடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் என நிகிதா மீது பல கோடி ரூபாய் மோசடி புகார்கள் மீண்டும் குவிந்தன.
அத்துடன் திருமணம் செய்வதாக நடித்து ஏமாற்றிவிட்டு, விவகாரத்து பேப்பரில் கையெழுத்து போட பல லட்சம் வசூல் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் நிகிதா மீது அவரது முன்னாள் கணவரான தென்னிந்திய பார்வார்டு பிளாக் நிறுவனர் திருமாறனும் தெரிவித்திருந்தார்.
இதனால் நிகிதா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்த நிலையில் மதுரையை விட்டு நிகிதா தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோவையில் நிகிதா பதுங்கி இருப்பதாகவும் கோவையில் அவரைப் பார்த்த பொதுமக்கள் சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.