கோயம்புத்தூரில் ரூ.205 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மேற்கு பைபாஸ் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் நவம்பர் 15, 2025-க்குள் முடிவடைய உள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மேற்கு புறவழிச்சாலை திட்டம் 2006-ஆம் ஆண்டு முதல் முன்மொழியப்பட்ட நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாகும். மூன்று கட்டங்களாக மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் இத்திட்டப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை ஆகஸ்ட் 2023-ல் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் எஸ். முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக 137 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது இதில் 118 ஏக்கர் தனியார் நிலம் தவிர்த்து அரசு நிலமும் அடங்கும்.
மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை ரூ.250 கோடி மதிப்பில் 11.8 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச்சாலையில் 13 சிறிய பாலங்கள், 2 மேம்பாலங்கள், 3 பேருந்து முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகள் வரும் நவம்பர் 15க்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த கட்ட பணிகளுக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கையகப்படுத்தும் நிலங்களை நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.