திண்டிவனம் நகராட்சி திமுக கவுன்சிலரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது தொடர்பாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊழியர் இன்று (செப்டம்பர் 3) அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அலுவலக பணியில் ஈடுபட்டிருந்தபோது, திண்டிவனம் 20வது வார்டு திமுக கவுன்சிலர் ரம்யா ராஜா தன் வார்டில் நடைபெற்ற பணிக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பாக கோப்பினை எடுத்து வர கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்ததாக கூறி, அவரது ஜாதியை குறிப்பிட்டு இழிவாக திட்டியுள்ளார்.
மேலும் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டி, தான் கேட்டதற்கு பதில் கூறாமல் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடமும் ரம்யா ராஜா புகார் அளித்தார்.
இதையடுத்து நகராட்சி ஆணையர் அறைக்கு முனியப்பனை அழைத்த நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன், ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முனியப்பனிடம் கூறியுள்ளார். நகராட்சி ஆணையர் அறையில் நின்றிருந்த முனியப்பன், திடீரென அழுதபடி இருக்கையில் அமர்ந்திருந்த ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பனுக்கு ஆதரவாக திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
மேலும் முனியப்பனை எந்த பதவி பொறுப்பிலுமே இல்லாத நிலையில் திமுக பெண் கவுன்சிலர் காலில் விழ வைத்த நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் உட்பட அனைவர் மீதும் நகராட்சி ஆணையர் அலுவலக அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி மேலாளர் நெடுமாறனிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட முனியப்பன், திண்டிவனம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷிடம் இன்று நேரில் சென்று புகார் அளித்தார்.

இதனையடுத்து திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலாவின் கணவரும், திமுக அவை தலைவர் மற்றும் கவுன்சிலருமான ரவிச்சந்திரன் மீதும், திமுக கவுன்சிலர் ரம்யா ராஜா, அவரது கணவர் மரூர் ராஜா, அவரது உறவினர் காமராஜ் மற்றும் முன்னாள் கவுன்சிலரான பிர்லா செல்வம் ஆகிய 5 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் மரூர் ராஜா மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி, சாராய கடத்தல், மணல் கடத்தல் வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ளது. 9 முறை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் கடைசியாக செஞ்சியில் மணல் கடத்திய வழக்கில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.