2026-27-ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான இறுதிக் கட்டப் பணிகள் அல்வா (ஹல்வா) தயாரிக்கும் நிகழ்ச்சியுடன் டெல்லியில் நேற்று தொடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜ்ட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஏப்ரல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் 2026-27- ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இதனையொட்டி டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள பட்ஜெட் அச்சக பிரிவில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி ஆகியோர் தலைமையில் ”ஹல்வா” தயாரிக்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.
பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் மூடிய அறையில் நடைபெறுகிறது. இந்த ஹல்வா தயாரிப்பு நிகழ்ச்சியில், நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள், பட்ஜெட் தயாரிப்புடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் அச்சக பிரிவையும் தயாரிப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு இதில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அல்வா தயாரிப்பு ஏன்?
1950 ஆம் ஆண்டில் பட்ஜெட் தொடர்பான தகவல்கள் கசிந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு, பட்ஜெட் அச்சடிக்கும் இடம் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அரசு அச்சகத்திற்கும், பின்னர் 1980 முதல் நார்த் பிளாக்கின் அடித்தளத்திற்கும் மாற்றப்பட்டது. இந்த கசிவுகளைத் தவிர்க்கும் நோக்கத்துடனே ‘லாக்-இன்’ நடைமுறை கடுமையாக்கப்பட்டது.
‘லாக்-இன்’ நடைமுறை என்பது, சுமார் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை வெளியுலகத் தொடர்பின்றி இருப்பார்கள். இந்த ‘லாக்-இன்’ நடைமுறை தொடங்கும் போது ஹல்வா தயாரித்து வழங்கப்படுவது வழக்கம்.
