“என்றுமே எடப்பாடிக்கு டிடிவி தினகரன் சிம்ம சொப்பனம் தான்”: அன்றும் இன்றும்!

Published On:

| By Kavi

எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று கூறி வந்த டிடிவி தினகரன், இன்று என்.டி.ஏ.வில் இணைந்த பின் எங்களுக்குள் நடந்தது பங்காளி சண்டை என்று விளக்கமளித்துள்ளார்.

2025 செப்டம்பர் மாதத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

ADVERTISEMENT

அதேசமயம் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசி வந்தார்.

“துரோகம் செய்ததற்காக நோபல் பரிசு பெற தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி. 2017 பிப்ரவரியில் இருந்து அவர் செய்த துரோகங்களுக்கு கடவுள் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். 2026ல் அவருக்கு தீர்ப்பு எழுதப்படும்.

ADVERTISEMENT

என்றுமே எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் சிம்ம சொப்பனம் தான். துரோகத்தை வீழ்த்தாமல் நான் ஓயமாட்டேன். யார் தடுத்தாலும் ஓயமாட்டேன். எதுக்காகவும் சமரசம் கிடையாது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் கூட்டணிக்கு போகமாட்டேன்” என்றெல்லாம் கடுமையாக பேசி வந்தார்.

இந்நிலையில் இன்று கூட்டணியில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ’எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை மட்டுமே. விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பழைய கருத்து வேறுபாடுகளைத் மறந்துவிட்டு கூட்டணியில் இணைந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்த திடீர் மாற்றம் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அதுபோன்று அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுக வருமா என்று டெல்லியில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் சில கட்சிகள் எங்களோடு வரும். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார்.

அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share